காப்பியம்

காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், காப்பியம் அதாவது சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் [1] அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.

தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடற்றிரட்டுக்களாகவே உள்ளன. மூன்று அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுக்களே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.

சங்கப் பாட்டுக்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புக்கள் உள. கதை தழுவிய நாடகங்கள் பல இருந்திருக்க வேண்டும். கதைகளும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தக் கதைகள் திரண்டு வளர்ந்து காப்பியங்களாக உருவம் கொள்ளவில்லை. கற்றறிந்த புலவோர் அந்தக் கதைகளை எழுதிப் போற்ற மனம்கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.

காப்பியம், சொல்விளக்கம்

'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.[2] பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான்.[3] பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.[4] தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.

பாகுபாடு

காப்பியத்தை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்றும் பிற்காலதில் பாகுபாடு செய்துள்ளனர். இந்தப் பாகுபாடு தோன்றிய காலம் கருத்தில் கொள்ளத்தக்கது.

'ஐம்பெருங்காப்பியம்' என்னும் தொடரை 14-ம் நூற்றாண்டு மயிலைநாதர் குறிப்பிடுகிறார். தணிகையுலா நூல் வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்தப் பாகுபாடு தோன்றியது.[5]

தமிழ் மரபு காப்பியங்கள்

தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரிய புராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.[6]

அடிக்குறிப்பு

  1. 12 ஆம மூற்றாண்டு நூல் தண்டியலங்காரம்
  2. இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய (அகம் 225)
  3. குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் (திருமுருகாற்றுப்படை 209)
  4. கலித்த இயவர் இயம் தொட்டன்ன (மதுரைக்காஞ்சி) 304
  5. பின்னர் தாமோதரம்பிள்ளை 'ஐஞ்சிறு காப்பியம்' என்னும் தொகுப்பைக் காட்டினார். சூளாமணி, தாமோதரம்பிள்ளை பதிப்பு, குறிப்புரை - இதனை மேற்கோள் காட்டிக் கூறுவது மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 2
  6. காப்பியம்

உசாத்துணை

இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.