சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும், மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.[1][2]

சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தமிழில் தோன்றிய முதல் இரு காப்பியங்களாகக் கருதப்படும், கதையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவான கதை கூறும் தமிழ் இலக்கியம் இது. எனினும் முன்னையவற்றைப் போலன்றி, சீவக சிந்தாமணி விருத்தப்பாக்களால் ஆனது. இதனால் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இது திகழ்கின்றது.

கதைச் சுருக்கம்

மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

முக்கிய பாத்திரங்கள்

  • சீவகன்
  • சச்சந்தன் (தந்தை), விசயமாதேவி (தாய்)
  • கந்துக்கடன் (வளர்ப்புத் தந்தை), சுநந்தை (வளர்ப்புத் தாய்)
  • நந்தட்டன், நபுலன், விபுலன் (வளர்ப்புத் தந்தையின் மக்கள்)
  • சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் (நண்பர்கள்)
  • காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை (சீவகன் மனைவியர்)
  • அச்சணந்தி (ஆசிரியர்)
  • கட்டியங்காரன் (பகைவன்)

குறிப்பு

  • சீவக சிந்தாமணியில் மன்னன் மனைவியான விசயை தப்பித்துச் செல்ல மன்னன், பறக்கும் மயிற்பொறியொன்றை செய்விக்கிறான்.
  • சேக்கிழார், மன்னவன் சமண காப்பியத்தை படித்து இன்புறும் நிலை கண்டு வருந்தி, திருத்தொண்டர் வரலாற்றை பெரிய புராணமாக தொகுத்தார்.

சான்றுகள்

மேலும் அறிய

  • Tiruttakkatevar (2012), Civakacintamani: The Hero Civakan, the Gem That Fulfills All Wishes: Verses 1166-1888, Jain Publishing Company, ISBN 978-0-89581-847-8
  • Lal, Mohan; Sāhitya Akādemī (2001). The Encyclopaedia Of Indian Literature (Volume Five) (Sasay To Zorgot), Volume 5. New Delhi: Sāhitya Akādemī. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-260-1221-8. https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA4256.
  • Ramaswamy, Vijaya (2007), Historical dictionary of the Tamils, United States: Scarecrow Press, INC., ISBN 978-0-470-82958-5
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.