சுந்தரபாண்டியம் (நூல்)

சுந்தரபாண்டியம் என்னும் நூல் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அனதாரியப்பன் என்னும் புலவரால் எழுதப்பட்டது. மதுரைச் சொக்கநாதப் பெருமானை இந்நூல் சுந்தரபாண்டியன் எனக் குறிப்பிட்டு அவனது திருவிளையாடல்களைப் பாடும்போது நூலுக்குச் ‘சுந்தரபாண்டியம்’ எனப் பெயரிட்டுக்கொள்கிறது.

இக் கோயில் பற்றிய தலபுராணங்கள் மூன்று.

  • 13 ஆம் நூற்றாண்டில் பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய ‘திருவாலவாயுடையார் திருவிளையாடல்’. இதில் உள்ள பாடல் 1753. இந்நூல் சாமிநாதையரால் பலமுறை அச்சிடப்பட்டுள்ளது.
  • 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அனதாரியப்பன் இயற்றிய சுந்தரபாண்டியம். இது 2015 பாடல்களைக் கொண்ட நூல். சென்னை அரசாங்கப் பதிப்பில் பாயிரம், அவையடக்கம், வையைச் சருக்கம் ஆகிய பகுதிகளில் பாடல்கள் இடம் மாறிப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
  • 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம். இது 3363 பாடல்களைக் கொண்டது.

நூலமைதி

இந்நூல் உற்பத்தி காண்டம், திக்குவிசய காண்டம், உக்கிர காண்டம், லீலா காண்டம் என நான்கு காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் முறையே 20, 15, 15, 4 சருக்கங்கள் உள்ளன.

  • சூத முனிவர் வடமொழியில் சொன்னதைத் தாம் தமிழில் சொல்வதாக இவர் குறிப்பிடுகிறார்.
  • காசியில் இறந்தால், தென்கயிலையைப் போற்றினால், தில்லையைக் கண்டால் முத்தி. ஆனால் ஆலவாய் என்னும் மதுரையின் பெயரைக் கேட்டாலே முத்தி.

முதலான செய்திகள் கூறப்பட்டுள்ளன.

பாடல் அமைதி

இந்நூலிலுள்ள பாடல் பாங்கை அறிந்துகொள்ளும் வகையில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன. [1]

1

மண் என்படும் மலை என்படும் அலை என்படும் மதியா
விண் என்படும் எனது அங்கையில் விடு குழியில் உனை யான்
பெண் என்பது நினைந்து ஈது உனைப் பொறுத்தேன் அது பிழைத்தாய்
‘துண்’ என் பயம் விடுத்தாய், கணை தொடுத்தாய், அமர் அடுத்தாய்.

2

தருமத்திறுகு ஆப்பு, [2] நாட்டோர்க்கு உயிர், தரித்திரற்குச் செம்பொன்,
சுருதிக்கு நுட்பம், சேர்ந்த சுற்றத்தோர்க்கு இனிய செல்வம்,
கருணைக்கு வாரி, தானம் தனக்கு உயர் கற்பம், போல்
பொருவற்ற செழியர் கோமான் இருந்தனன் அரசர் போற்ற.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. பாடல்கள் பொருள்நோக்குப் பார்வையில் தலப்பட்டுள்ளன.
  2. சோறு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.