ஐஞ்சிறு காப்பியங்கள்

பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.

உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.

உதயணகுமார காவியம்

வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் அறியக் கிடைக்கவில்லை.

இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.

நாககுமார காவியம்

இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது. முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான். காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.

அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.

யசோதர காவியம்

5 சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.

நூலின் எளிமைக்கு உதாரணமாக ஒரு பாடல்:

ஆக்குவ தேதெனில் அறத்தை ஆக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக
காக்குவ தேதெனில் விரதம் காக்கவே

சூளாமணி

இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல். ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.

நீலகேசி

நீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும் நீலகேசி காவியம், குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிரான சமண காப்பியமாகும். ஆசிரியர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. 10 சருக்கங்களில் 894 பாக்களால் ஆனது. கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. காப்பியத் தலைவி நீலி. பழையனூரில் பேயுருவில் இருந்து முனிச்சந்திரர் என்கிற சமண முனிவரால் பேய்மை நீங்கி அவருக்கே மாணவியாகவும் சமணத் துறவியாகவும் ஆகி பௌத்தர்களை வாதில் வென்ற கதையே இக்காப்பியம்.

குறிப்புதவி:

  • தமிழ் இலக்கிய வரலாறு - மது.ச.விமலானந்தம்
  • தமிழ் இலக்கிய வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் இளங்கலை வழித்துணைப் பாடம் எண் 6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.