உசேன் ஓன்

உசேன் பின் டத்தோ ஓன் (Hussein bin Dato' Onn, பெப்ரவரி 12, 1922 — மே 29, 1990) என்பவர் மலேசியாவின் மூன்றாவது பிரதமர். 1976 லிருந்து 1981 வரை பிரதமர் பதவியை வகித்தவர். மலேசியாவின் ஒருமைப்பாட்டுத் தந்தை (Father of Unity, மலாய்: Bapa Perpaduan) என்று புகழப்படுகிறவர்.

துன்
உசேன் ஓன்
Hussein Onn
侯赛因
மூன்றாவது
மலேசியப் பிரதமர்
பதவியில்
1976 ஜனவரி 15  1981 ஜுலை 16
அரசர் யாஹ்யா பெத்ரா கிளாந்தான்
அகமட் ஷா பகாங்
துணை துன் மகாதீர் பின் முகமது
முன்னவர் துன் அப்துல் ரசாக் உசேன்
பின்வந்தவர் துன் மகாதீர் பின் முகமது
மூன்றாவது
மலேசியத் துணைப் பிரதமர்
பதவியில்
1973 ஆகஸ்ட் 13  1976 ஜனவரி 15
பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன்
முன்னவர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான்
பின்வந்தவர் துன் மகாதீர் பின் முகமது
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 12, 1922(1922-02-12)
ஜொகூர் பாரு, மலாயா (இப்போது மலேசியா)
இறப்பு 28 மே 1990(1990-05-28) (அகவை 68)
சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சி சுயேட்சை (அரசியல்வாதி) (1987–1990)
தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு
(1968–1987)
மலாயா விடுதலை கட்சி
(1951–1963)
தேசிய கட்சி
(Parti Negara)
(1963–1968)
வாழ்க்கை துணைவர்(கள்) சுகைலா நோ
பிள்ளைகள் 6
படித்த கல்வி நிறுவனங்கள் இந்திய தேசிய இராணுவம்
லிங்கன்ஸ் இன் (சட்டத் துறை)
தொழில் வழக்குரைஞர்
சமயம் இஸ்லாம்

இவர் ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாரு நகரில் 1922 பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தவர். தகப்பனாரின் பெயர் டத்தோ ஓன் ஜாபார். தாயாரின் பெயர் டத்தின் ஹலிமா உசேன். மலேசியாவில் பிரசித்தி பெற்று விளங்கும் கோலாலம்பூர் துன் உசேன் ஓன் கண் மருத்துவமனை தோற்றுவிக்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்தவர்.[1]

மலேசியாவின் பல்லின மக்களிடையே ஐக்கிய உணர்வை மேம்படுத்த பெரும் போராட்டம் செய்த பிரதமர் எனும் தனிச் சிறப்பு இவருக்கு உண்டு. நாட்டில் இனங்களிடையே அமைதியின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்துபவர் யாராக இருந்தாலும் அவரைத் தண்டிக்கும் உறுதியான கொள்கையைக் கொண்டவர்.

அதனால்தான், அவரை மலேசியாவின் ஒருமைப்பாட்டுத் தந்தை என்று இன்றும் பெருமையாக அழைக்கிறார்கள். மலேசியப் பாட நூல்களிலும் சிறப்பு செய்யப்படுகிறார்.[2] இவருடைய பெயரில் துன் உசேன் ஓன் மலேசியப் பல்கலைக்கழகமும் (Universiti Tun Hussein Onn Malaysia) 2006ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலின் தோற்றம்

துன் உசேன் ஓன், தன்னுடைய தொடக்கக் கல்வியை சிங்கப்பூர், தெலுக் குராவ் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை ஜொகூர், ஆங்கிலக் கல்லூரியில் பெற்றார். 1940இல் ஜொகூர் இராணுவப் படையில் பயிற்சி மாணவராக சேர்ந்தார். அதன் பின்னர் ஓர் ஆண்டு கழித்து அவர் வட இந்தியா, உத்தராகண்டம், டேராடூன் நகரில் இருக்கும் இந்திய இராணுவக் கழகத்திற்கு, மேல் பயிற்சிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.[3]

இந்திய இராணுவத்தில்

இராணுவக் கழகத்தில் மேல் பயிற்சிகளை முடித்துக் கொண்டதும் அவர் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின் போது அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போருக்குப் பின்னர், ராவல்பிண்டியில் இருந்த மலாயா காவல் துறை பயிற்சி முகாமில் பயிற்றுநகராகவும் சேவை செய்தார்.[4]

1945இல் மலாயாவுக்குத் திரும்பிய அவர், ஜொகூர் பாரு காவல் முகாமில் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5] மறுவருடம் அவர் மலாயா குடிமைப் பணித் துறையில் (Malaya Civil Service) சேர்ந்து, ஜொகூர், சிகாமட்டில் துணை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அடுத்து அவர், சிலாங்கூர், கிள்ளான், கோலா சிலாங்கூர் பகுதிகளுக்கு மாவட்ட அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.[6]

அம்னோவின் பொதுச் செயலாளர்

ஆழமான தேசிய உணர்வுகளையும், அரசியல் பின்னணிகளையும் கொண்ட குடும்பத்தில் இருந்து துன் உசேன் ஓன் வந்தவர். அந்த அரசியல் பின்னணிகள் இவரையும் விட்டு வைக்கவில்லை. அரசாங்கப் பொதுச் சேவைகளில் இருந்து வெளியேறிய இவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1949இல் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு என்று அழைக்கப்படும் அம்னோவில் சேர்ந்து, அதன் இளைஞர் அணியின் முதல் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

மலாயாவில் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பை உருவாக்குவதில் துன் உசேன் ஓன் அவர்களின் தந்தையார் டத்தோ ஓன் ஜாபார் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். 1950இல் துன் உசேன் ஓன், அம்னோவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் 1951இல், அம்னோவை விட்டு விலகி, தன் தந்தை டத்தோ ஓன் ஜாபார் உருவாக்கிய மலாயா விடுதலை கட்சியில் இணைந்தார்.[7]

லண்டன் பயணம்

துன் உசேன் ஓன், மலாயா விடுதலை கட்சியில் சேர்ந்த காலத்தில், அக்கட்சியின் செல்வாக்கு குறைந்து வந்தது. இந்தக் கட்டத்தில் அவர் லண்டன் லிங்கன்ஸ் இன் (Lincoln's Inn) சட்டக் கல்லூரியில் சட்டம் பயில சென்றார். மாவழக்கறிஞர் பட்டத்தையும் (Barrister-at-Law) பெற்றார். நாடு திரும்பிய அவர் மலாயா, கோலாலம்பூரில் வழக்குரைஞராகச் சேவை செய்தார்.[8]

அதன் பின்னர் இவர் பல ஆண்டு காலம் அரசியலில் ஈடுபடவில்லை. 1968ஆம் ஆண்டில், அப்போது பிரதமராக துன் அப்துல் ரசாக் உசேன், இவரை அம்னோவில் மறுபடியும் சேருமாறு கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக, 1969 மலேசியப் பொதுத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் மலேசியக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் பதவி

மலேசிய அரசியலில் துன் உசேன் ஓன் மிகத் துரிதமான வளர்ச்சிகளைக் கண்டு வந்தார். 1973 ஆகஸ்ட் 13இல் துன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் காலமானதையொட்டி, அவர் மலேசியாவின் மலேசிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.[9]

மூன்று ஆண்டுகள் கழித்து, 1976 ஜனவரி 15இல் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் இரத்தப் புற்று நோய் காரணமாக லண்டனில் காலமானார். துன் அப்துல் ரசாக்கின் இறப்பிற்குப் பின்னர், துன் உசேன் ஓன் மலேசியாவின் பிரதமரானார்.[10]

அந்நிய நாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்கு மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மையைச் சீராக வைத்திருப்பதில் துன் உசேன் ஓன் வெற்றி கண்டார். அவருடைய அயராத முயற்சியினால் அந்நிய நாட்டவர்களின் முதலீடும் பெருகியது. அவருடைய தலைமைத்துவத்தில் மலேசியா துரித வளர்ச்சி கண்டு வந்தது. எனினும், உடல்நிலை காரணமாக அவர் 1981 மே 15 ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

அரசியல் கொள்கை

துன் உசேன் ஓன், மலேசியாவின் பல்வேறு சமூகங்களுக்கிடையே ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் வளர்ப்பதில் வெற்றி கண்டதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். நாட்டின் உள்விவகாரங்கள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் போது அவர் பல்லின மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிகவும் கவனமாக முடிவுகள் எடுத்தார்.

இராணுவத்தில் பணியாற்றிய காரணத்தினால், நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும், ஒழுக்கத்தைப் பேணுவதிலும் மிகவும் உறுதியாக இருந்தார். மிக மிக சுத்தமான அரசியல்வாதி என்று இன்றும் பாராட்டப்படுகிறார்.

அவர் மலேசியாவின் பத்திரிகைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததால், அவருடைய நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது. நாட்டில் யார் இனப் பிரச்சினையைத் தூண்டினாலோ, எழுப்பினாலோ அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பதில் துன் உசேன் ஓன் பின் ஒரு போதும் வாங்கியதில்லை.

குடும்பம்

துன் உசேன் ஓன் அவர்களின் தகப்பனாரின் பெயர் டத்தோ ஓன் ஜாபார். இவர் மலாயாவின் ஒரு விடுதலைப் போராட்டவாதி. அம்னோ எனும் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பை உருவாக்கியவர். துன் உசேன் ஓனின் தாத்தா டத்தோ ஜாபார் ஹாஜி முகமட் என்பவர் ஜொகூர் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் ஆகும்.

இவருடைய தாயார் ஹனீம் ரொகாயா துருக்கியில் இருக்கும் ஸ்கார்சியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். துன் உசேன் ஓனின் மனைவியின் பெயர் சுகைலா நோ. டேவான் ராக்யாட்டின் முதல் சபாநாயகரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டான் ஸ்ரீ ஹாஜி முகமட் நோ ஓமார் அவர்களின் புதல்விதான் சுகைலா நோ. துன் உசேன் ஓன், மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக் உசேன், அவர்களின் மைத்துனர் ஆவார்.

துன் உசேன் ஓன் கண் மருத்துவமனை

பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அவர் தொடர்ந்து சமூகநலத் திட்டங்களில் அதிக அக்கறை காட்டி வந்தார். மலேசியாவில் மட்டும் அல்லாமல். உலகளாவிய நிலையில் பிரசித்தி பெற்று விளங்கும் கோலாலம்பூர் துன் உசேன் ஓன் கண் மருத்துவமனை உருவாக்கப்படுவதில் முக்கியப் பங்காற்றினார். இந்தக் கண் மருத்துவமனை உலகிலேயே மூன்றாவது பெரிய கண் மருத்துவமனையாகும்.

மாரடைப்பு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ சீட்டோன் மருத்துவமனையில் 1990 மே 29இல் காலமானார். அப்போது அவருக்கு வயது 68. மலேசிய மக்களுக்கு அவர் ஆற்றி வந்த சேவை இன்னும் நாட்டு மக்களால் போற்றப்பட்டு வருகிறது. அவருடைய மகன் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் உசேன் ஓன், தற்போது மலேசிய அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.