உசா மேத்தா

உசா மேத்தா (Usha Mehta, மார்ச்சு 25, 1920-ஆகத்து 11, 2000[1]) இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி ஆவார். வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலகட்டத்தின் போது இரகசிய வானொலியை நிறுவி விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளையும் இந்தியத் தலைவர்களைப் பற்றிய செய்திகளையும் ஒலி பரப்பினார்.[2]

உசா மேத்தா
உசா மேத்தா (1996)
பிறப்பு25 மார்ச் 1920
குசராத்து
இறப்பு11 ஆகத்து 2000 (அகவை 80)
படிப்புமுனைவர் பட்டம்
படித்த இடங்கள்
  • வில்சன் கல்லூரி, மும்பை
பணிகல்வியாளர், செயற்பாட்டாளர்
வேலை வழங்குபவர்
  • காந்தி அமைதி அறக்கட்டளை
  • வில்சன் கல்லூரி, மும்பை
விருதுகள்பத்ம விபூசண்

பிறப்பும் படிப்பும்

உசா மேத்தா குசராத்து மாநிலத்தில் சூரத் மாவட்டத்தில் சரசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு நீதிபதி ஆவார். உசா மேத்தா மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் இளங்கலை தத்துவக் கல்வியியலில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார். சட்டம் படிப்பதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பிற்காலத்தில் ஆய்வுப் பட்டம் பெற்று பேராசிரியாகப் பணி புரிந்தார்.[3]

விடுதலைப் போராட்டப் பணிகள்

  • பள்ளியில் பயிலும்போதே ஆமதாபாத்தில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். காந்திய நெறியில் நாட்டம் கொண்டார். காந்தி தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
  • 8 அகவைச் சிறுமியாக இருந்தபோதே சைமன் குழுவிற்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
  • கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார்.
  • தம் வாணாள் முழுவதும் கதர்ப் புடைவை மட்டுமே உடுத்தி வந்தார்.
  • 1942 இல் கவாலியா டாங்க் மைதானத்தில் காங்கிரசுக் கொடியை ஏற்றினார்.

இரகசிய வானொலி

வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவு திரட்டவும் போராட்டம் தொடர்பான செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்கவும் காங்கிரசு ரேடியோ அல்லது இரகசிய ரேடியோவை உசா மேத்தா தொடங்கினார். இதனால் வெள்ளை அரசின் உளவுத் துறையும் காவல் துறையும் உசா மேத்தாவைக் கண்காணித்தது. எரவாடாச் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான துன்பத்திற்கு ஆளானார். இதனால் இரகசிய வானொலி மூன்று மாதகாலம் மட்டுமே இயங்கியது. அவரைச் சிறையில் அடைத்த பிரிட்டிசு அதிகாரிகள் உசா மேத்தாவுடன் போராடிய தோழர்களின் விவரங்களைத் தெரிவிக்கக் கட்டாயப் படுத்தினர். ஆனால் உசா மேத்தா அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. இறுதியாக 1946 ஆம் ஆண்டில் அரசு அவரை விடுதலை செய்தது.

விருது

1998 இல் உசா மேத்தாவின் தொண்டுகளைக் கௌரவித்துப் இந்திய அரசால், பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.