ஔவை நடராசன்

ஔவை நடராசன் மிகச் சிறந்த தமிழறிஞர், சிந்தனையாளர், பேச்சாளர். தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகளிலும் சிறப்பாகப் பேசும் திறன் கொண்டவர்.

ஔவை நடராசன்
பிறப்புசிவபாத சேகரன்
ஏப்ரல் 24, 1936
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்சென்னை,
தேசியம்இந்தியர்
பணிவேந்தர்
பணியகம்பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை
அறியப்படுவதுதமிழறிஞர், பேச்சாளர்
பட்டம்பத்மஸ்ரீ
சமயம்இந்து
பெற்றோர்ஔவை துரைசாமி (தந்தை),
லோகாம்பாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
மருத்துவர் தாரா நடராசன்
பிள்ளைகள்1. கண்ணன் நடராசன்(மகன்)
2. அருள் நடராசன் (மகன்)
3. பரதன் நடராசன் (மகன்)
உறவினர்கள்சகோதரர்கள் -4, சகோதரி -4
விருதுகள்பத்மஸ்ரீ விருது 2010, கலைமாமணி விருது

பிறப்பு

இவர் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் (அன்றைய வட ஆற்காடு மாவட்டம்) உள்ள செய்யாறு எனும் ஊரில் உரைவேந்தர் எனப் புகழப்படும் தமிழறிஞர் ஒளவை துரைசாமி மற்றும் லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[1]

கல்வி

மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் (Master of Arts) பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.[1]

பணி

ஔவை நடராசன் மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு, புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றினார். அதன் பின்னர் சென்னையிலுள்ள காந்தி ராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார். இவரது தமிழ்ப்புலமையால் ஈர்க்கப்பட்ட தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் இவரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். ஒன்பது ஆண்டுகள் (1975 - 1984) வரை அப்பணியிலிருந்தார்.[1] பின்னர் 1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல் தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான். அதன் பிறகு, 1992 திசம்பர் 16ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15ஆம் நாள் வரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை வகித்தார்.[1] அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார்.[2] 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.[3]

விருதுகள் [1]

  1. தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது
  2. இந்திய ஒன்றிய அரசால் வழங்கப்படும் பத்மசிறீ விருது
  3. இலங்கை, கம்பர் கழகத்தின் “தன்னேரில்லாத தமிழ் மகன் விருது”
  4. இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது (2012)
  5. தினத்தந்தி நாளிதழ் வழங்கிய சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது. (2014)

படைப்புகள்

நடராசனின் சொற்பொழிவுகள் சில நூல்களாக வெளிவந்துள்ளன. அவை;

  1. வாழ்விக்க வந்த வள்ளலார்
  2. பேரறிஞர் அண்ணா
  3. கம்பர் காட்சி
  4. கம்பர் விருந்து
  5. திருப்பாவை விளக்கம்
  6. திருவெம்பாவை விளக்கம்
  7. சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள்
  8. Self Confidence (English)
  9. Saying of Stalwart
  10. The Panaroma of Tamils
  11. அருளுக்கு ஔவை சொன்னது
  12. Thirukkovaiyar (English)

சிறப்புகள்

2006 ஆம் ஆண்டில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழாவில், விழாப் பேருரையாற்றிய இவரைப் பற்றிய குறிப்புகள் அப்போது வெளியிடப்பட்ட பட்டமளிப்பு விழாச் சிறப்பு மலரில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் கீழ்க்காணும் தகவல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

  • ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார்.
  • உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார்.
  • 1982-ல் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார்.
  • மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார்.
  • தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கர் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்.

சான்றடைவு

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.