ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ்

ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ் (1919 - 17 மார்ச் 2002) அன்றாட உணவுகளில் ஊட்டச்சத்துகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். கோவை அவினாசிலிங்கம் மனையியல் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர்.[1]

வாழ்வும் கல்வியும்

இவர் இப்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் பிறந்தவர். தந்தை மைக்கேல் பாக்கியநாதன், தாய் சொர்ணம்மாள். பள்ளிக்கல்வி: திருச்சி ஆல் செயிண்ட்ஸ் நடுநிலைப்பள்ளி, வடசென்னை நார்த்விக் மகளிர் மேல்நிலைப்பள்ளி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர் மீடியட், சென்னை ராணி மேரி கல்லூரியில் பி. எஸ். சி. உணவியல், நடுவணரசின் கல்வி உதவித்தொகை மூலம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் எம்.ஏ. (கல்வியியல்), எம்.எஸ்.சி.(உணவியல்), தத்துவப் பேராசிரியர் (உணவியல்).

பணிகள்

தமிழக மக்களின் அன்றாட உணவான அரிசியில் உள்ள குறைவான சத்துக்களை கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்யக் காய்கறி, கீரை, பால், இறைச்சி ஆகியவற்றை மிகுதியாகச் சேர்க்க வேண்டும் என்று ஆய்வுகள் வழியாக வலியுறுத்தினார். தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான மதிய உணவில் சத்துணவுகளை சேர்க்க பரிந்துரைத்தார். அவிநாசிலிங்கம் நிகர் நிலைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் மூலம் கோவை மாவட்டத்தின் பெரும்பாலான சிற்றூர்களில் சத்துணவு குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்தப் பாடுபட்டார்.

விருதுகள்

  • மனையியல் துறையில் ஆற்றிய சேவைக்காகப் பத்மஸ்ரீ விருது
  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது.
  • தமிழ் வழியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கான அண்ணா பல்கலை விருது.
  • மகிளாசிரோன்மணி விருது
  • ஜி. டி. பிர்லா விருது [2]

குறிப்புகள்

  1. http://www.thehindu.com/2002/03/18/stories/2002031801620500.htm
  2. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்40
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.