விபாவனை அணி

தண்டியலங்காரத்தில் ஒன்பதாவதாகக் கூறப்படும் அணி விபாவனை அணி ஆகும். விபாவனை என்பதற்கு சிறப்பாக எண்ணுதல் என்று பொருள். பொருளைக் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் வகையில் கூறப்படும் அணிகள் தண்டியலங்காரத்தில் பல உள்ளன. அவற்றுள் விபாவனை அணியும் ஒன்று.[1]

விபாவனை அணியின் இலக்கணம்

விபாவனை அணி என்பது ஒரு பொருளின் செயலைக் கூறும்போது அச்செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தை நீக்கி வேறொரு காரணத்தால் அது நிகழ்ந்தது என்றோ, அல்லது காரணம் எதுவுமின்றி இயல்பாக நிகழ்ந்தது என்றோ உய்த்துணர்ந்து கொள்ளுமாறு குறிப்பாகக் கூறுவது ஆகும்.

நூற்பா

     உலகுஅறி காரணம் ஒழித்து ஒன்று உரைப்புழி
     வேறுஒரு காரணம், இயல்பு குறிப்பின்
     வெளிப்பட உரைப்பது விபாவனை ஆகும்
                                 --(தண்டியலங்காரம், 51)

'குறிப்பின் வெளிப்பட உரைப்பது' = 'சிந்தித்து ஆராய்தலினாலே வெளிப்படுதல்' என்று பொருள்.

விபாவனை அணியின் வகைகள்

விபாவனை அணி இரண்டு வகைப்படும் அவை வருமாறு:

  • அயல் காரண விபாவனை அணி
  • இயல்பு விபாவனை அணி

இவற்றின் இலக்கணத்தை விளக்கமாகக் காண்போம்.

அயல் காரண விபாவனை அணி

அயல் காரணம் = வேறு காரணம். ஒரு பொருளின் செயலை உரைக்கும் போது, அச்செயலுக்குப் பலரும் அறியும் காரணங்களை நீக்கி, அது வேறு ஒரு காரணத்தால் நிகழ்ந்தது எனக் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் வகையில் கூறுவது அயல் காரண விபாவனை அணி எனப்படும்.

(எ.கா.)

     தீ இன்றி வேம் தமியோர் சிந்தை; செழுந்தேறல்
     வாய் இன்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்; - வாயிலார்
     இன்றிச் சிலர் ஊடல் தீர்ந்தார்; அமர் இன்றிக்
     கன்றிச் சிலை வளைக்கும் கார்

(தமியோர் = தனித்திருப்போர்; தேறல் = மது; மஞ்ஞை = மயில்; வாயிலார் = ஊடல் தீர்ப்போர்; அமர் = போர்; சிலை = வில்; கார் = கார்காலம்)

பாடல்பொருள்:
இணை பிரிந்து தனித்திருப்பார் (காதலர்) உள்ளமானது, தீயில்லாமலே வேகும்; மயில்கள் செழுமையான மதுவை வாயில் கொள்ளாமலே களிப்புற்று ஆடும்; சிலர் (ஊடல் கொண்ட மகளிர்) ஊடல் தீர்க்கும் வாயிலார் இல்லாமலே ஊடல் தீர்ந்தார்கள்; மேகமானது போர் இல்லாமலே வெகுண்டு (கறுத்து) வில்லை (வான வில்லை) வளைக்கும்.

அணிப் பொருத்தம்:
இப்பாடலில், வேகுதல், களிப்புற்று ஆடுதல், ஊடல் தீர்தல், வில்லை வளைத்தல் ஆகிய வினைகளுக்கு (செயல்களுக்கு) உலகு அறிந்த காரணங்கள் முறையே தீ, செழுந்தேறல் (மது), வாயிலார், போர் ஆகியனவாம். ஆனால், இக்காரணங்களால் இல்லாமல் இவ்வினைகள் யாவும் 'கார் காலம்' என்ற வேறு ஒரு காரணத்தால் நிகழ்ந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்தியதால் இப்பாடல் 'அயல் காரண விபாவனை அணி' ஆயிற்று.

இயல்பு விபாவனை அணி

ஒரு செயல் உலகு அறிந்த காரணங்கள் இன்றி இயல்பாகவே நிகழ்ந்தது எனக் குறிப்பாக உணர்த்துவது இயல்பு விபாவனை அணி எனப்படும்.

(எ.கா.)

     கடையாமே கூர்த்த கருநெடுங்கண்; தேடிப்
     படையாமே ஏய்ந்த தனம்; பாவாய்! - கடைஞெமிரக்
     கோட்டாமே கோடும் புருவம்; குலிகச்சேறு
     ஆட்டாமே சேந்த அடி

(தனம் = மார்பு; ஞெமிர = அமுங்குமாறு; கோட்டாமே = வளைக்காமலே; குலிகச்சேறு = சாதிலிங்கக் குழம்பு)

பாடல்பொருள்:
சித்திரப் பாவை போன்ற பெண்ணே! உன்னுடைய கரிய நெடிய கண்கள் கடைதல் செய்யாமலே (சாணை பிடிக்காமலே) கூர்மையைப் பெற்றன; பிறர் ஆராய்ந்து செய்யாமலேயே மார்புகள் தக்க உருவத்தோடு அமைந்தன; உன் புருவங்கள் இரு கோடிகளும் அமுங்குமாறு யாரும் வளைக்காமலேயே வளைந்துள்ளன; உன் பாதங்கள் சாதிலிங்கக் குழம்பு தோய்க்கப்படாமலேயே சிவந்துள்ளன.

அணிப் பொருத்தம்:
சாணை பிடித்துக் கூர்மை செய்தல், ஆராய்ந்து செய்து தக்க உருவம் படைத்தல், இரு கோடிகளையும் பற்றி வளைத்தல், சாதிலிங்கக் குழம்பு தோய்த்துச் சிவக்கச் செய்தல் ஆகிய உலகு அறிந்த காரணங்கள் இல்லாமல், இயல்பாகவே முறையே, தலைவியின் கண்கள் கூர்மை பெற்றன, மார்புகள் தக்க உருவத்தோடு அமைந்தன, புருவங்கள் வளைந்தன, பாதங்கள் சிவந்தன என்பனவற்றைக் குறிப்பாகக் கூறினமையால் இப்பாடல் இயல்பு விபாவனை அணி ஆயிற்று.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.