விசேட அணி

கவிஞர்கள் தாங்கள் பாட எடுத்துக்கொண்ட பொருளின்பால் சிலபல காரணங்களால் உள்ள குறைகளையும் குறிப்பிட்டுப் பாடுவர். ஆனால் அக்குறைகளே அப்பொருளுக்குச் சிறப்பையும் பெருமையையும் சேர்ப்பது போலப் பாடலை அமைப்பர். இதனால் பாடலில் பாடப்படும் பொருள் வனப்பும் வலிமையும் பெற்றுத் திகழ்கிறது. இவ்வாறான சிறப்புத் தோன்ற பாடப்படும் அணியே விசேட அணி அல்லது சிறப்பு அணி எனப்படும்[1]

விசேட அணியின் இலக்கணம்

குணமும், தொழிலும், சாதியும், பொருளும், உறுப்பும் குறைபடுதல் காரணமாக, ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றக் கூறுவது விசேடம் என்னும் அணி ஆகும்.

     குணம்தொழில் முதலிய குறைபடு தன்மையின்
     மேம்பட ஒருபொருள் விளம்புதல் விசேடம்
                                    --(தண்டி, 79)

விசேடம் என்பதற்கு மேம்பாடு அல்லது பெருமை என்று பொருள். நூற்பாவில் 'முதலிய' என்று கூறியதனால், குணம், தொழில் என்பனவற்றோடு இனம், பொருள், உறுப்பு ஆகியனவும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

விசேட அணியின் வகைகள்

விசேட அணி ஐந்து வகைப்படும். அவை,

  • குணக்குறை விசேடம்
  • தொழில்குறை விசேடம்
  • இனக்குறை விசேடம்
  • பொருள்குறை விசேடம்
  • உறுப்புக்குறை விசேடம்

என்பன ஆகும்.

குணக்குறை விசேடம்

குணத்தால் குறை கூறிச் செயலால் மேம்பாடு தோன்றக் கூறுவது குணக்குறை விசேடம் எனப்படும்.

(எ.கா.)

     கோட்டம் திருப்புருவம் கொள்ளா; அவர்செங்கோல்
     கோட்டம் புரிந்த; கொடைச்சென்னி - நாட்டம்
     சிவந்தன இல்லை; திருந்தார் கலிங்கம்
     சிவந்தன, செந்தீத் தெற

(கோட்டம் - வளைதல்; சென்னி - சோழன்; நாட்டம் - கண்கள்; திருந்தார் - பகைவர்; கலிங்கம் - கலிங்க நாடுகள்.)

பாடல்பொருள்:
கொடைத் தொழிலில் வல்ல சோழனுடைய அழகிய புருவங்கள் வளையத் தொடங்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் செங்கோல்கள் வளைந்து விட்டன. அச்சோழனுடைய கண்கள் சிவக்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் கலிங்க நாடுகள் எரியுற்றுச் சிவந்து விட்டன.

சோழன் பகைவர்கள் மீது சினம் கொள்வதற்கு முன்பே அவர்களுடைய நாடுகள் அழிந்துவிட்டன என்பது இப்பாடலின் கருத்து.

அணிப்பொருத்தம்:
பகைவர் நாட்டை அழிப்பதற்குத் தோன்றும் சினத்தை அறிவிக்கும் குணங்கள் புருவம் வளைதல், கண் சிவத்தல் ஆகியனவாம். ஆனால் இக்குணங்கள் சோழனுக்கு ஏற்படுவதற்கு முன்பே பகைவர் நாடுகள் அழிந்துவிட்டன என்று கூறியதால் குணத்தால் குறை இருப்பினும் செயலால் மேம்படுதலின் இப்பாடல் குணக்குறை விசேடம் ஆயிற்று.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.