சமாகிதவணி

சமாகிதவணி அல்லது சமாகித அணி என்பது தன்முயற்சி பயனளிக்காது தானே நடைபெற்ற நிகழ்வை குறிப்பது. முன்பெடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பயனை அளிக்காவிடினும், எண்ணியது தானே நடைபெற்ற பாங்கினை உரைப்பது இவ்வணி.

குறிப்பு

"முந்துதான் முயல்வுறூஉம் தொழில்பயன் பிறிதுஒன்று
தந்ததா முடிப்பது சமாகிதம் ஆகும்." என்கிறது தண்டியலங்காரம் 73-ம் பாடல்.

விளக்கம்

அதாவது, ஒரு பொருள் வேண்டிய ஒருவர் அதனை பெறுவதற்கு, முன்னர் சிலபல முயற்சிகளை செய்ய, அவைகள் பலனேதும் அளிக்கவில்லை. எனினும் எதிர்பார்த்தது வேறு வழியில் தானாகவே அமைந்ததனை உரைக்கும் அணி சமாகிதவணியாகும்.

எடுத்துக்காட்டு

அருவியம் குன்றம் அரக்கன் பெயர்ப்ப
வெருவிய வெற்பரையன் பாவை - பெருமான்
அணியாகம் ஆரத் தழுவினாள் தான்முன்
தணியாத ஊடல் தணிந்து.

இச்செய்யுளின் பொருள்: சிவபெருமான் உமையாள் தன்னிடம் கொண்டிருந்த ஊடலை எவ்வளவோ முயன்றும் தணிக்க இயலவில்லை. இங்ஙனமிருக்க, இராவணன் கையிலாய மலையை பெயர்த்தெடுக்க முயலுங்கால் பயந்த உமாதேவி சிவனை ஆரத்தழுவி ஊடலை மறக்கிறாள். எனவே சிவனின் முயற்சிகள் பயனளிக்காது போய்விடினும், இராவணின் செயல் அப்பயனை அளித்ததை உணர்த்துகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.