இராஜாதிராஜ சோழன்

இராஜாதிராஜ சோழன் முதலாம் இராஜராஜ சோழனின் பேரனும், இராஜேந்திர சோழனின் மகனும் ஆவான். இராஜேந்திர சோழனின் காலத்திலேயே மன்னனுடைய மூத்த மகனாக இல்லாவிடினும்[1] இவனுடைய திறமையைப் பாராட்டி இவனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப் பட்டது. மேலும் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே தனக்கென்று மெய்க்கீர்த்திகளையும் பட்டங்களையும் பெறும் தனிச் சிறப்பும் இராஜாதிராஜ சோழனுக்கு அளிக்கப்பட்டது. இராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் சேர, பாண்டிய நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் மேலைச் சாளுக்கியர்கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியருடன் போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் நடைபெற்ற போரில் இறந்தான்.

இராஜாதிராஜ சோழன்


இராஜாதிராஜ சோழன் காலத்தில் சோழநாடு கி.பி. 1030
ஆட்சிக்காலம் கி.பி. 1012 - கி.பி. 1044
title ராஜகேசரி
தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்
அரசி திரைலோக்கியம் உடையார்
பிள்ளைகள் இரண்டு மகன்கள்(பெயர்கள் அறியமுடியவில்லை)
முன்னவன் இராஜேந்திர சோழன்
பின்னவன் இராஜேந்திர சோழன் II
தந்தை இராஜேந்திர சோழன்
பிறப்பு தெரியவில்லை
இறப்பு கி.பி. 1054

முதலாம் இராஜேந்திரனின் மக்கள்

வடநாட்டு மன்னர்கள் தென்னாட்டைக் கைப்பற்றுவது பொதுவான வழக்கமாக இருந்தது, ஆனால் சோழ இராச்சியத்தை உறுதியாக நிலைநாட்டிய இராஜராஜனும், அவனுடைய திறமை மிக்க மகன் இராஜேந்திரன் காலங்களில் இந்த வழக்கு தலைகீழாக மாறி, சோழருடைய வெற்றிச் சின்னமான புலிக்கொடி வடக்கே வெகு தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய மூன்று மக்களும், ஒருவரை அடுத்து ஒருவராக அரியணை ஏறினர். தங்கள் தந்தையிடமிருந்து பெற்ற பரந்த இராய்ச்சியத்தை அதன் புகழ் மங்காதவண்ணம் இம்மூவரும் திறமையுடன் காத்தனர்.

அரியணையேறிய வரிசை

இராஜேந்திரனுக்குப் பிறகு அரியணையேறியவன் மூத்த மகன் இராஜாதிராஜன் என்று வீரராஜேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. இராஜேந்திரனை அடுத்து அரியணையேறிய மூன்று மன்னர்களின் கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இராஜாதிராஜனின் 35-ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று 'தம்பித் துணைச் சோழ வளநாடு' என்ற முக்கியமான பெயரைக் குறிப்பிடுகிறது. இப்பெயர், 'திருமகள் மருவிய' என்று தொடங்கும் இரண்டாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ளா செய்தியை நினைவூட்டுகிறது. இம்மெய்க்கீர்த்தியில் சாளுக்கியருக்கு எதிரான போரில் எவ்வாறு தன் மூத்த சகோதரன் இராஜாதிராஜனுக்கு பெருந்துணையாக இருந்தான் என்பதை இராஜேந்திரன் கூறுகிறான்.

வீரராஜேந்திரன் என்பவன் இராஜேந்திர சோழன் தம்பியான வீரசோழனே. இவனுக்கு கரிகாலச் சோழன் என்றா பட்டத்தை இராஜேந்திரன் அளித்தான். இவனையே மேலைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் பொதுவாக 'வீர' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு ஒன்று இவன் தந்தை கங்கை, பூர்வதேசம், கடாரம் ஆகிய நாடுகளை வென்றவன் என்று குறிப்பிடுகிறது.

இம்மன்னர்களது கல்வெட்டுக்கள் குறிப்பிடும் ஆண்டுகளைப் பார்க்கும்போது, இவர்களது ஆட்சிக் காலங்களில் ஒன்றோடொன்று இணைந்து இருப்பது விளங்கும். இராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து இவனுடைய ஆட்சி ஆண்டு 36 என்பது புலனாகின்றது. அதாவது கி.பி 1053 - 54 வரை. இரண்டாம் இராஜேந்திரன் கி.பி 1052ம் ஆண்டு மே திங்கள் 28ம் நாளன்று அரியணை ஏறினான். அதே போன்று இரண்டாம் இராஜேந்திரன் கி.பி 1064வரை சுமார் 12 ஆண்டுகள் அரசாண்டான். வீரராஜேந்திரன் கி.பி 1062 - 63ம் ஆண்டு அரியணை ஏறினான். இவ்வாண்டே இம்மன்னனது கல்வெட்டுகளில் இவனது முதலாவது ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது.

இராசமகேந்திரன்

வீரராஜேந்திரன் அரியணையேரும் முன் இராஜகேசரி இராஜமகேந்திரன் அரியனையேறினான். இவனுடைய மூன்றாம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இம்மன்னன் மனுநீதிப்படி ஆட்சி செய்ததாக இவனுடைய மெய்க்கீர்த்தி கூறுகிறது, இதையே கலிங்கத்துப் பரணியும் உறுதிப்படுத்துகிறது. கொப்பம் போரில் முடிசூடின மன்னனுக்கும்(இரண்டாம் இராஜேந்திரன்) கூடல் சங்கமத்தில் வெற்றி பெற்ற மன்னனுக்குமிடையில்(வீரராஜேந்திரன்) 'முடி சூடியவன்' என்று கலிங்கத்துப் பரணி இம்மன்னனைப் பற்றி கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் இராஜமகேந்திரனின் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளதூ.

'போர் யானையின் மூலம் ஆகவமல்லன் ஆற்றங்கரையிலிருந்து புறமுதுகிட்டு ஓடச் செய்தான்' என்று இக்கல்வெட்டுக் கூறுகிறது.

இவன் இராஜேந்திர சோழன் புதல்வனாதல் கூடும், இரண்டாம் இராஜேந்திரனின் 9ம் ஆண்டு கல்வெட்டில் கூறப்படும் இராஜேந்திரன் என்பது இவனது இயற்பெயராகும். இதன் பின்னர் இவன் இளவரசப் பட்டம் பெற்ற பொழுது இராஜமகேந்திரன் என்ற பெயரைப் பெற்றிருக்கக்கூடும். தன் தந்தை இராஜேந்திர சோழன், தன் பாட்டனார் இராஜேந்திர சோழன் ஆகியோரிடமிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் வகையில் இவன் இப்பெயரை ஏற்றிருக்க வேண்டும். இராஜமகேந்திரன், இராஜேந்திரன் இருவருமே வீரராஜகேசரிப் பட்டம் பெற்றவராயிருந்தும் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்தனர். இளவரசுப் பட்டம் பெற்ற போதே ஒருவன் இறந்ததால் இந்நிலை ஏற்பட்டது.

இவ்வரலாற்றுக் குறிப்புக்களை ஆதாரமாக வைத்து சோழ அரியணையைப் பெற்ற மன்னர்களின் பட்டியலை கால வரிசைப்படி கீழ்க்காணுமாறு வரிசைப்படுத்தலாம்.

வரிசை மன்னன் ஆட்சி ஆண்டு
1 முதலாம் இராஜதிராஜ ராஜகேசரி கி.பி 1018 - கி.பி 1054
2 இரண்டாம் இராஜேந்திரப் பரகேசரி(முதல் மன்னனின் தம்பி.) இராஜ மகேந்திர ராஜகேசரி.(இரண்டாம் மன்னனின் மகன்) கி.பி 1052 - 1064
3 வீரராஜேந்திரன் ராஜகேசரி.(முதல் இரண்டு மன்னர்களின் தம்பி) கி.பி 1063 - 1069
4 ஆதி ராஜேந்திர பரகேசரி(இவன் மூன்றாவது மன்னனின் மகன்.) கி.பி 1067/68 - 1070

அரசன் இறந்தபோதும், அவனது தம்பியான இரண்டாம் இராஜேந்திரன், போரைத் தொடர்ந்து சாளுக்கியரை முறியடித்தான். அவன் அவ்விடத்திலேயே சோழமன்னனாக முடிசூட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.

மேற்கோள்கள்

  1. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பாகம் ஒன்று. பக்கம் 268.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.