புனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)

புனித வியாகுல அன்னை பெருங்கோவில் (Our Lady of Dolours Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிசூர் நகரில் அமைந்துள்ள சீரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையின் இணைப் பெருங்கோவில் ஆகும். இது ஆசியாவிலேயே மிக உயரமான கோவில் கட்டடங்களுள் ஒன்று ஆகும்.

புனித வியாகுல அன்னை பெருங்கோவில்
Basilica of Our Lady of Dolours
புனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திரிசூர்)
கோவிலின் முன் தோற்றம்
புனித வியாகுல அன்னை பெருங்கோவில்
Basilica of Our Lady of Dolours
10.521°N 76.218°E / 10.521; 76.218
அமைவிடம்திரிசூர், கேரளம்
நாடுஇந்தியா
சமயப் பிரிவுசீரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபை
வலைத்தளம்www.doloursbasilica.com
வரலாறு
நிறுவப்பட்டது1929
Architecture
நிலைஇணைப் பெருங்கோவில்
கட்டடக் கலைஞர்அம்புரோசு கவுண்டர்
பாணிகோத்திக் கலைப்பாணி
இயல்புகள்
தூபி எண்ணிக்கைமூன்று
தூபி உயரம்79 மீட்டர்கள் (259 ft)

கலைப் பாணி

இக்கோவில் கோத்திக் கலைப்பாணியில் அமைந்தது. இந்திய-கோத்திக் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இக்கோவில் கட்டடம் 25,000 சதுர அடிகள் (2,300 சதுர மீட்டர்கள்) பரப்பில் உள்ளது. இக்கோவிலின் முன்புறத்தில் வானுயர எழுகின்ற மணிக்கூண்டுகள் உள்ளன. கோவிலின் நடு நீள்பகுதியை அடுத்துள்ள நீள்பகுதிகள், குறுக்குப் பகுதிகள் ஆகியவை இரு மாடி கொண்டுள்ளன. கோவிலின் நடுப் பீடம் ஒன்றும் இரு பக்கமும் ஐந்து ஐந்தாக வேறு பத்து துணைப் பீடங்களும் இக்கோவிலில் உள்ளன.

இந்தியாவிலேயே மிகப் பெரிய கோவிலான இப்பெருங்கோவிலின் உட்புறத்தில் அலங்கார வேலைப்படுகள் பல உள்ளன. சுவர் ஓவியங்களும் புனிதர் திருச்சிலைகளும் விவிலிய வரலாற்றைச் சித்தரிக்கின்ற ஓவியங்களும் கோவிலின் உள்ளே சிறப்பான விதத்தில் அமைந்துள்ளன.

இக்கோவிலின் முதல் கட்டடமும் பங்கும் 1814இல் ஏற்படுத்தப்பட்டன. இதுவே திரிசூரின் முதல் கத்தோலிக்க கோவில் ஆகும். மேலும், கத்தோலிக்க சீரோ-மலபார் திருச்சபைக்கு இக்கோவில் ஓர் தலைமை இடமாக விளங்கிவந்துள்ளது.

கல்தேய ஆயர் வருகை

1874இல் கல்தேய கத்தோலிக்க ஆயரான எலியாஸ் மெல்லுஸ் என்பவர் இந்தியா வந்து, தம்மை ஆயராக ஏற்குமாறு கூறி, பல கத்தோலிக்கர்களைத் தம் வசம் ஈர்த்துக்கொண்டார். அந்த ஆயரை ஏற்றுக்கொண்ட குழு புனித வியாகுல அன்னைக் கோவிலை மையமாகக் கொண்டு செயல்பட்டது. படிப்படியாக, கத்தோலிக்க திருச்ச்சபையிலிருந்து பிரிந்து சென்றது. இதுவே “கல்தேய சிரிய திருச்சபை” என்ற பெயர் ஏற்றது.[1]

கத்தோலிக்கர் கட்டிய புதிய கோவில்

இதைத் தொடர்ந்து, சீரோ-மலபார் கத்தோலிக்கர்கள் ஒரு புதிய கோவிலைத் தமக்கென்று 1929இல் கட்டினர்கள். முதலில் இருந்த கோவில் “மார்ட் மரியம் பெரிய கோவில்” (Mart Mariam Big Church) என்ற பெயரைப் பெற்றது. அக்கோவில் இப்போது கல்தேய சிரிய திருச்சபையில் மறைமாவட்டக் கோவிலாகத் திகழ்கின்றது.

1929இல் தொடங்கிய கோவில் கட்டட வேலை பல படிகளில் நடந்து முடிந்தது. முகப்பில் உள்ள இரு பெரிய கோபுரங்களும் 146 அடி (45 மீ.), நடுக்கோபுரம் 260அடி (79 மீ.) உயரம் கொண்டவை. இவ்வாறு இக்கோவில் ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோவில்களுள் மூன்றாவது இடத்தில் உள்ளது (காண்க: உலகில் உயர்ந்த கோவில்கள்).

தமிழகக் கட்டடக் கலைஞர்கள்

மிக உயர்ந்தவையான அக்கோபுரங்களைக் கட்டி எழுப்பவது பெரிய சவாலாக இருந்தது. அவற்றைக் கட்டுவதற்காக தமிழ்நாட்டிலிருந்து சில கட்டட வல்லுநர்கள் கொண்டுவரப்பட்டனர். கோவில் கட்டட வேலையை நிறைவுசெய்த கட்டட வல்லுநர் பெயர் அம்புரோசு கவுண்டர்.

குறிப்புகள்

  1. Vadakkekara, Benedict (2007). Origin of Christianity in India: a Historiographical Critique, pp. 101–103. Media House Delhi.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.