தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்' நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீசிய மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் | |
---|---|
![]() புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 10°40′48″N 79°50′59″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் வழிபாட்டு முறை |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
நிலை | பெருங்கோவில் (பசிலிக்கா) - (1962) |
செயற்பாட்டு நிலை | செயற்பாட்டில் உள்ளது |
இணையத் தளம் | http://www.vailankannishrine.net/ |
கட்டிடக்கலை தகவல்கள் | |
கட்டிடக்கலை வகை | கோதிக் கட்டிடக்கலை |
முகப்பின் திசை | கிழக்கு |
அடித்தளமிட்டது | 17ஆம் நூற்றாண்டு |
இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
அன்னை மரியா
இயேசுவின் தாயான மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தோன்றிய இடங்களின் பெயரால், லூர்து மாதா, பாத்திமா மாதா, குவாடலூப்பே மாதா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். உலகின் பல இடங்களில் தோன்றிய அன்னை, இந்தியாவில் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார். வேண்டுதல் செய்யும் அனைவரின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் ஆரோக்கிய அன்னையாக திகழ்கிறார்.
பால்கார சிறுவன்
அன்னை மரியா, பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கண்ணியில் காட்சி அளித்தார். 1592 செப்டம்பர் 8ந்தேதி, பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார். அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர். அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர். பலரும் தங்கள் துன்பங்கள் தீர உதவுமாறு அன்னை மரியாவிடம் வேண்டிக்கொண்டனர்.
மோர் விற்ற சிறுவன்
தனது மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் 1637 செப்டம்பர் 8ந்தேதி மரியன்னை மீண்டும் காட்சி அளித்தார். நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவனுக்கு அன்னை மரியா தோன்றினார். `மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். `அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். `உன்னால் முடியும்' என்றார் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை செல்வந்தருக்கு காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.
போர்ச்சுக்கீசியர்கள்
1671ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு பாய்மரக் கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் சிலர் நடுக் கடலில் வீசியப் புயலில் சிக்கிக் கொண்டனர். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த அவர்கள், அன்னை மரியாவிடம் உதவி கேட்டனர். `அம்மா, நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஒரு ஆலயம் கட்டுவோம்' என்றும் வாக்குறுதி அளித்தனர். மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் ஓய்ந்தது. கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8ந்தேதி, தேவமாதாவின் பிறந்த நாள். தங்களை பத்திரமாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். கலை வண்ணமிக்க பீங்கான் ஓடுகளால் ஆலயப் பீடத்தை அலங்கரித்தனர். தங்கள் கப்பலின் பாய்மரத் தூணை ஆலயக் கொடிமரமாக நட்டினர். அதில்தான் இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. போர்ச்சுக்கீசியர்கள் கரை சேர்ந்த நாளான மாதாவின் பிறந்த நாளிலேயே வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் வளர்ச்சி
தொடக்கத்தில் நாகப்பட்டினம் கிறிஸ்தவப் பங்கின் துணை ஆலயமாக வேளாங்கண்ணி இருந்து வந்தது. 1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வேளாங்கண்ணி திருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.
சமூக சேவைகள்
தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகையின் மேற்பார்வையின் கீழ் வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இதன் அதிபராக அருட்தந்தை மைக்கேல் அடிகளார் இருந்து வருகிறார். மேலும் பல குருக்களும் இந்த ஆலயத்தில் பணியாற்றுகிறார்கள். வேளாங்கண்ணி பேராலயத்தின் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமூக சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் பரிந்துரையால் அற்புதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.
படத் தொகுப்பு
- வேளாங்கண்ணி பேராலயம் - முன் தோற்றம்
- வேளாங்கண்ணி பேராலயம் - நீட்சி - பின் தோற்றம்
- வேளாங்கண்ணி பேராலயம் - நீட்சி - பரந்த பக்கப் பார்வை
- வேளாங்கண்ணி பேராலயம் - இடது புறத் தோற்றம்
- வேளாங்கண்ணி பேராலயம் - வலது புறத் தோற்றம்
- வேளாங்கண்ணி பேராலயம் - மாலைவேளைத் தோற்றம்
- வேளாங்கண்ணி மாதாக் குளம்
- வேளாங்கண்ணி மாதாக் குளம் நோக்கி முழந்தாட்படியிட்டுச் செல்லும் திருப்பயணியர்
- வேளாங்கண்ணி - ஆராதனை இல்லம்
- வேளாங்கண்ணி பேராலயம்
- நடுத்திட்டில் அமைந்த சிற்றாலயம் - அன்னையின் முதல் காட்சி நிகழ்ந்த இடம்
- வேளாங்கண்ணி - புனித செபஸ்தியார் ஆலயம்
- வேளாங்கண்ணி - ஆலய அலுவலகம், குருக்கள் உறைவிடம், ஒரு கடை
- கோவிலின் கொடி மரம்
வெளி இணைப்புகள்
- தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி – அதிகாரப்பூர்வ இணையதளம் இணைப்பை
- பசில்லா ஆஃப் எமது லேடி ஆஃப் நல்ல உடல்நலம் - நேரடி தொலைக்காட்சி – நேரடி ஒளிபரப்பு