குழந்தை இயேசு பெருங்கோவில் (கோவா)
குழந்தை இயேசு பெருங்கோவில் அல்லது குழந்தை இயேசு பசிலிக்கா (Basilica of Bom Jesus) அல்லது Borea Jezuchi Bajilika (கொங்கணி) (போர்த்துக்கீசம்: Basílica do Bom Jesus) என்னும் கத்தோலிக்க கிறித்தவ வழிபாட்டிடம் இந்தியாவின் பழைய கோவா நகரில் அமைந்து, உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் புனித இடம் ஆகும்.[1][2]
குழந்தை இயேசு பெருங்கோவில் Basilica of Bom Jesus | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நகர் | பழைய கோவா, கோவா |
நாடு | இந்தியா |
நிறைவுற்றது | 1605 |


இப்பெருங்கோவிலில் இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பிரான்சிசு சவேரியாரின் உடலின் மீபொருள்கள் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளன.
இக்கோவில் இந்தியாவில் போர்த்துகீசியர்களின் தலைநகராக விளங்கிய பழைய கோவா நகரில் அமைந்துள்ளது.[3]
கோவிலின் பெயர் விளக்கம்
குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கத்தோலிக்க கோவிலின் போர்த்துகீசிய பெயர் Basílica do Bom Jesus என்பதாகும். போர்த்துகீசிய மொழியில் Bom Jesus என்பது "நல்ல இயேசு" என்னும் நேரடிப் பொருள் தரும். அப்பெயரால் "குழந்தை இயேசுவை" குறிப்பது போர்த்துகீசிய வழக்கம்.
இந்தியாவிலேயே முதல் பசிலிக்கா
குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருக்கோவில் "பசிலிக்கா" (Basilica) என்று கத்தோலிக்க திருச்சபையால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் கோவில் ஆகும். இது இயேசு சபையினரின் உடைமையாக இருந்தது. இக்கோவில் இந்தியாவில் பரோக்கு கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கோவிலின் வரலாறு
இக்கோவில் கட்டட வேலை 1594இல் தொடங்கியது. கோவில் வேலை முற்றுப் பெற்று, கோவில் 1605 மே மாதத்தில் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலை அர்ப்பணித்தவர் அக்காலத்தில் கோவாவின் பேராயராக இருந்த அலேய்சோ தே மெனெசசு (Dom Aleixo de Menezes) என்பவர் ஆவார்.
புனித பிரான்சிசு சவேரியாரின் உடல்
இக்கோவிலில்தான் புனித பிரான்சிசு சவேரியாரின் உடல் அழியாநிலையில் உள்ளது. இந்தியாவில் கத்தோலிக்க கிறித்தவ மறையைப் பரப்பிய அவர் (1542-1549) சீனா சென்று அங்கும் கிறித்தவ நற்செய்தியை அறிவிக்க அணியமான வேளையில் சீனாவின் நுழைவாயில் போல் அமைந்த சான்சியான் தீவில் 1552, திசம்பர் 2ஆம் நாள் உயிர்துறந்தார்.
புனித சவேரியாரின் உடல் முதலில் போர்த்துகீசிய மலாக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவ்வுடல் கப்பல் வழியாக கோவா வந்தடைந்தது. சவேரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே பசுமை நிலையில் கோவா வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.
கிறித்தவர்களும் பிற சமயத்தவரும் புனித சவேரியாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த பெரும் எண்ணிக்கையில் அக்கோவிலுக்குச் செல்கின்றனர். அவ்வுடல் ஒவ்வொரு பத்தாண்டிலும் புனிதரின் திருவிழாவன்று மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்படுவது வழக்கம். இறுதியாக இவ்வாறு பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டது 2004ஆம் ஆண்டில் ஆகும்.
சவேரியார் உடலின் அடுத்த காட்சி
புனித சவேரியாரின் உடல் அடுத்த முறையாக 2014ஆம் ஆண்டு 22ஆம் நாளிலிருந்து 2015ஆம் ஆண்டு சனவரி 4ஆம் நாள் வரை திருப்பயணிகளின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பழைய கோவில்
கோவாவில் அமைந்துள்ள குழந்தை இயேசு பெருங்கோவில் இந்தியாவிலேயே மிகப் பழமையான கிறித்தவக் கோவில்களுள் ஒன்றாகும். கோவிலின் தரை பளிங்குக் கற்களால் ஆனது. கோவிலின் பீடங்கள் அலங்கார முறையில் தங்கமுலாம் பூசப்பட்டு உள்ளன. ஆனால் உள் தோற்றம் எளிமையாகவே உள்ளது.
இக்கோவிலில் புனித பிரான்சிசு சவேரியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நினைவுக் கூடமும் அதில் அவருடைய உடலைக் கொண்டுள்ள அலங்காரப் பேழையும் இத்தாலியின் தஸ்கனி பிரதேசத்தின் ஆளுநராக இருந்த மெடிச்சி குடும்பத்தைச் சார்ந்த மூன்றாம் கோசிமோ (Cosimo III) என்பவர் வழங்கிய நன்கொடை ஆகும்.
புனித சவேரியார் நினைவுக்கூடம்
சவேரியாரின் நினைவுக்கூடத்தை வடிவமைத்தவர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோவான்னி பத்தீஸ்தா ஃபோஜ்ஜீனி (Giovanni Battista Foggini) என்ற இத்தாலியச் சிற்பி ஆவார். அந்தக் கலை வேலைப்பாடு நிறைவுற பத்து ஆண்டுகள் பிடித்தன. சவேரியாரின் உடலைக் கொண்டுள்ள அலங்காரப் பேழை வெள்ளியால் ஆனது.
கோவிலின் இரண்டாம் மாடியில், சவேரியாரின் கல்லறைக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு கலைக்கூடம் உள்ளது. அதில் கோவாவைச் சார்ந்த டோம் மார்ட்டின் என்னும் கலைஞரின் படைப்புகள் காட்சிக்கு உள்ளன.[4][5].
இயேசு சபையைச் சார்ந்த கிறித்தவ ஆன்மிக எழுத்தாளர் ஆன்டனி டி மெல்லோ என்பவர் கோவாவைச் சார்ந்தவரே.
மேலும் காண்க
குறிப்புகள்
- http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/delhi/29563822_1_comprehensive-conservation-management-plan-ccmp-naqqar-khana
- http://articles.timesofindia.indiatimes.com/2011-05-11/goa/29531922_1_asi-official-heritage-status-world-heritage
- http://articles.timesofindia.indiatimes.com/2011-11-12/goa/30390942_1_iffi-novena-baretto
- குழந்தை இயேசு பெருங்கோவில் கலைக்கூடம்
- கலைஞர் டோம் மார்ட்டின்