புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)

புனித அன்னை மரியா பெருங்கோவில் (Basilica of Our Lady of Ransom, Vallarpadam-Ernakulam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் வராப்புழை உயர்மறைமாவட்டத்தில் உள்ள வல்லார்பாடம் என்னும் ஊரில் அமைந்துள்ள புகழ்மிக்க கத்தோலிக்க கோவில் ஆகும். இக்கோவில் “ஈடு வழங்கும் அன்னை மரியா” (Our Lady of Ransom) என்ற பெயரிலும் “வல்லார்பாடத்து அம்மா” என்றா பெயரிலும் மரியாவைச் சிறப்பிக்கும் வழிபாட்டு இடமாக உள்ளது. இங்கு பல சமயங்களைச் சார்ந்தவர்களும் திருப்பயணிகளாக வருகின்றனர்.

புனித அன்னை மரியா பெருங்கோவில்
புனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)
புனித அன்னை மரியா பெருங்கோவில்
9.99°N 76.25°E / 9.99; 76.25
நாடுஇந்தியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
வலைத்தளம்Vallarpadathamma.org
Architecture
நிலைகோவில் கட்டடப் பாணி
செயல்நிலைசெயல்பாட்டில் உள்ளது
இயல்புகள்
பொருள்செங்கல்

கோவில் கட்டப்பட்ட வரலாறு

இக்கோவில் போர்த்துகீசியரால் 1524இல் கட்டப்பட்டது. முதலில் இது தூய ஆவிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அக்கோவில் பெருவெள்ளம் காரணமாக 1676இல் அழிந்துபோனது.

பின்னர் அக்கோவில் 1676இல் மீண்டும் கட்டப்பட்டது. அங்கு “ஈடு வழங்கும் அன்னை மரியா” திருப்படம் நிறுவப்பட்டது. திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இக்கோவிலை ஒரு சிறப்பு வழிபாட்டு இடமாக 1888இல் அறிவித்து, கோவிலின் திருப்பீடத்தை “தனிச் சிறப்புடைய பீடம்” (altare privilegiatum) என்னும் நிலைக்கு உயர்த்தினார். 1951இல் இந்திய அரசு இக்கோவிலை ஒரு முக்கிய திருத்தலமாக அறிவித்தது.

புதுமைகள்

“வல்லார்பாடத்து அம்மா” பெரும் புயல்களிலிருந்து மக்களைக் காப்பாற்றியதாக வரலாறு. இங்கு வணக்கம் செலுத்தப்படுகின்ற அன்னை மரியா திருவிழா ஆண்டுதோறும் செப்டம்பர் 24ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டம் ஒரு வாரம் நீடிக்கும்.

வல்லார்பாடம் தீவில் உள்ள இந்த அன்னை மரியா திருத்தலம் ஒரு தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்டது.

1676இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அன்னை மரியாவின் திருப்படம் மிதந்து கொண்டிருந்ததாகவும், அதை கொச்சி இராச்சியத்தின் முதலமைச்சராக இருந்த ராமன் வலியச்சன் என்பவர் மீட்டதாகவும், அவர் கொடையாகக் கொடுத்த நிலத்தில் முதலில் ஒரு கொடிமரம் எழுந்ததாகவும் பின்னர் புதிய கோவில் கட்டப்பட்டு அங்கே அன்னையின் திருப்படம் நிலைப்படுத்தப்பட்டதாகவும் வரலாறு. மேலும் கோவிலில் அணையா விளக்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, அதற்கான எண்ணெய் அரண்மனையிலிருந்து வழங்கப்படுவதற்கும் வலியச்சன் ஏற்பாடு செய்தாராம்.

அமைவிடம்

வல்லார்பாடம் தீவின் மேற்கே போல்காட்டி தீவு உள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோஷ்றீ பாலங்கள் அத்தீவை எற்ணாகுளத்தோடு இணைக்கின்றன. இத்தீவு வடக்கு தெற்காக . இங்கு சுமார் 10,000 மக்கள் வாழ்கின்றனர். வல்லார்பாடம் எற்ணாகுளத்திலிருந்து அரை மைல் தொலையில் உள்ளது.

வல்லார்பாடம் பெருங்கோவிலின் விரிவுப் பார்வை

தல வரலாறு

இக்கோவில் பற்றிய மற்றுமொரு தல வரலாறு இது: வல்லார்பாடத்தில் பள்ளியில்வீடு என்ற குடும்பத்தைச் சார்ந்த மீனாட்சியம்மா என்றொரு நாயர் குலப் பெண்மணி வாழ்ந்துவந்தார். அவர் தம் மகனோடு படகில் மட்டாஞ்சேரி சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட புயலில் படகு கவிழ்ந்தது. மீனாட்சியம்மாவும் அவருடைய மகனும் காயலில் விழுந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்தனர். அப்போது வல்லார்பாடத்து அம்மா என்ற அன்னை மரியாவிடம் வேண்டுதல் செலுத்தி தங்கள் உயிரைக் காத்தால் அந்த அன்னையின் அடியார்களாக என்றுமே வாழ்வதாக நேர்ச்சை செய்துகொண்டார். மூன்று நாட்கள் கழிந்தன. வல்லார்பாடத்து அம்மா கோவிலின் பங்குத்தந்தை ஒரு கனவு கண்டார். அதில் கொடுக்கப்பட்ட அறிவுரையைக் கேட்டு, அவர் மீனவர்களிடம் ஆற்றில் வலைவீசுமாறு கூறினார். அந்த வலையைப் பிடித்துக்கொண்டே மீனாட்சியம்மாவும் அவருடைய மகனும் உயிரோடு கரையேறினர்.

இந்த நிகழ்ச்சியானது அன்னை மரியாவின் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து மக்கள் வல்லார்பாடத்து அம்மா கோவிலுக்குச் சென்று, படகுப் பயணம் மேற்கொள்ளும் போது தம்மை ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளுமாறு அன்னை மரியாவை வேண்டிக்கொள்வது வழக்கமாயிற்று.

மீனாட்சியம்மாவும் அவருடைய மகனும் திருமுழுக்குப் பெற்று, மரியா மற்றும் இயேசுதாஸ் என்று புதுப்பெயர்கள் பெற்றனர். அவர்கள் கோவில் வளாகத்திலேயே வாழ்ந்துவந்தனர். அவர்களுடைய வாரிசுகள் சிலர் இன்றும் கோவில் அருகிலேயே வாழ்கின்றனர்.

பெருங்கோவிலாக உயர்த்தப்படுதல்

2004, திசம்பர் முதல் நாள் இக்கோவிலை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இணைப் பெருங்கோவில் (minor basilica) நிலைக்கு உயர்த்தினார். வராப்புழை உயர்மறைமாவட்டத்தின் பேராயர் டானியேல் ஆச்சாருப்பறம்பில் தலைமையில் 2005, பெப்ருவரி 12ஆம் நாள் விழாக் கொண்டாடப்பட்டது.

படத் தொகுப்பு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.