பருத்திவீரன்
பருத்திவீரன் 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம். அமீர் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார் (அறிமுகம்), பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக சிவகுமாரின் மகன் கார்த்தி நடித்தார். இயக்குனர் அமீருக்கு இது மூன்றாவது படமாகும்.
பருத்திவீரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | அமீர் சுல்தான் |
தயாரிப்பு | ஞானவேல் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | கார்த்திக் சிவகுமார் பிரியாமணி |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
நடன அமைப்பு | தினேஷ் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
வெளியீடு | 23 மாசி 2007 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 5 கோடி ரூபாய் |
மொத்த வருவாய் | 65 கோடி ரூபாய் |
கதைச் சுருக்கம்
கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்குப் பிறந்தவன் பருத்திவீரன் (கார்த்தி); ஒரு விபத்தில் அவன் தாயும் தந்தையும் மாண்டுவிட, சிறுவயது முதல் அநாதையாகத் திரியும் அவனுக்கு சித்தப்பா செவ்வாழை (சரவணன்)தான் ஒரே ஆதரவு. கலப்புத் திருமணம் செய்ததால் அவர்களுடன் பரம்பரைப் பகைமை பாராட்டும் பொன்வண்ணன். அவன் மகள் முத்தழகு (பிரியாமணி). சிறுவயதில் முத்தழகின் மேல் அன்பு பாராட்டிய பருத்திவீரன், ஒரு சமயத்தில் அவள் உயிரையும் காப்பாற்றுகிறான். அதனால் முத்தழகு, அவனையே மனத்தில் வரித்துக்கொள்கிறாள்.
வாலிப வயதில் பருத்திவீரன் சண்டியர் ஆகிறான்; அடிக்கடி சிறைவாசம் செல்கிறான். 'என்ன சித்தப்பு! மாறி மாறி தேனி, ராமநாதபுரம், மதுரை ஜெயில்தானா? ஒரு முறையாவது சென்னை ஜெயிலுக்குப் போயிடணும். கை உயர்த்தி டாட்டா காட்டணும், டிவிக்கு எல்லாம் பேட்டி கொடுக்கணும்' என ஒரு இலட்சியத்தை அவன் விவரிக்கிறான்.
இத்தகைய சூழலில் அவன் முத்தழகை நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் முத்தழகோ, அவனையே நினைத்துக்கொண்டு அவன் பின்னே அலைகிறாள். முதலில் அவளை மறுக்கிற பருத்திவீரன், பிறகு அவள் காதலைப் புரிந்து தானும் காதல் வயப்படுகிறான். 'இனிமே நீ ஒத்தையாத் திரியவேணாம்; இங்கேயும் (காதல்) வந்திருச்சுல்ல' என்று அவன் கூறுகிறான். ஆயினும் இந்தக் காதலுக்கு முத்தழகின் வீட்டில் எதிர்ப்பு. அதை மீறி இளம் ஜோடி இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.
நடிகர்கள்
- கார்த்திக் சிவகுமார்
- பிரியாமணி
- பொன்வண்ணன்
- சரவணன்
- சுஜாதா
- கஞ்சா கறுப்பு
- பஞ்சவர்ணம்
- சம்பத் ராஜ்
- அம்முலு
- செவ்வழைராஜ்
- சமுத்திரக்கனி
பாடல்கள்
- அறியாத வயசு தெரியாத மனசு
- ஊரோரம் புளியமரம்
- ஐயயோ என் உசுருக்குள்ளே
திரைப்படச் சிறப்பு
- இது கார்த்திக் சிவகுமாரின் முதல் படம். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும், நடிகர் சிவகுமாரின் மகனும் ஆவார்.
- இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் எவருக்கும் ஒப்பனை செய்யப்படவில்லை.
- முழுத் திரைப்படமும் மதுரையின் சுற்றுப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டது.
- எல்லா நடிகர்களும் தமது சொந்தக்குரலிலேயே பேசி நடித்தனர்.