திருவண்பரிசாரம்

திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். இலக்குமிதேவி ஆனந்தமடைந்து திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்ததால் இத்தலத்தில் திருமாள் திருவாழ்மார்பன் என்றழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம். திருவாகிய இலக்குமி பதியாகிய திருமாலை சார்ந்து இந்த ஊரில் தங்கியதால் இவ்வூர் 'திருப்பதிசாரம்' என அழைக்கப்படுகிறது.[1] இதனால் இக்கோவிலில் இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. இறைவன்:திருவாழ்மார்பன். இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம். விமானம்:இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.

திருவண்பரிசாரம்
திருவண்பரிசாரம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்:8°12′29″N 77°26′51″E
பெயர்
வேறு பெயர்(கள்):திருப்பதிசாரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவு:திருப்பதிசாரம்
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரை மாதம் 10 நாள் திருவிழா,புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, அனைத்து சனிக்கிழமைகள்
உற்சவர்:ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

இங்கு கருவறையில் திருவாழ்மார்பன் ஏழு அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் சங்குசக்கர தாரியாக வலது காலை மடக்கியும் இடதுகாலை தொங்க விட்டும் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தடன் காட்சியளிக்கிறார். இத்தலத்தின் மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனையப் பட்டுள்ளதால்) இவருக்கு திருமஞ்சனம் (அபிசேகம்) கிடையாது. இத்தலம் நம்மாழ்வாரின் தாய் திருவுடையநங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம். கோயில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து, கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா செய்துள்ளார். நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் பாடல் பெற்ற தலமாகும்.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஒற்றைக் கல்மண்டபம் ஆகிய மண்டபங்களைக் கொண்டு உள்ளது. இங்கு விமானம் இந்திர கல்யாண விமான அமைப்பைச் சார்ந்தது. கோயில் கருவறையின் வலது பக்கம் இராமர், சீதை, அனுமன், இலட்சுமணன் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப் பட்டுள்ளன. கருவறைச் சுற்றில் கன்னி மூல விநாயகர் உள்ளார். கோயிலுக்கு வெளியே 40 அடி உயரமுள்ள கொடிமரம் உள்ளது. கொடிமரத்தின் பக்கத்தில் பெரிய பலிபீடமும், கோயிலுக்கு வெளியே சோமதீர்த்தம் உள்ளது. கோயிலின் வெளியே வடக்குப்பகுதியில் உடையநங்கையார் அவதரித்த பகுதியுள்ளது. நம்மாழ்வாரின் தாயாரின் இந்த வீடானது இப்போது ஒரு பஜனை மடமாக உள்ளது்.[2]

மேற்கோள்கள்

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.
  2. முனைவர் தா.அனிதா (2019 சனவரி 3). "நம்மாழ்வார் பாடிய திருவாழ்மார்பன்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 5 சனவரி 2019.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.