டி. ஆர். ராஜகுமாரி
டி. ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 – செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
டி. ஆர். ராஜகுமாரி | |
---|---|
![]() | |
இயற் பெயர் | தஞ்சாவூர் ரெங்கநாயகி ராஜாயி |
பிறப்பு | மே 5, 1922 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 20 செப்டம்பர் 1999 77) | (அகவை
தொழில் | திரைப்பட நடிகை |
நடிப்புக் காலம் | 1939–1963 |
துணைவர் | திருமணம் செய்யவில்லை |
வாழ்க்கைக் குறிப்பு
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் இராதாகிருஷ்ணன்-ரெங்கநாயகி தம்பதியருக்கு மகளாக பிறந்தார், இவர் தாயார் ரெங்கநாயகி தஞ்சை குசலாம்பாள் அவர்களின் புகழ் பெற்ற இசை மேதை குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜகுமாாி பிறந்த சில நாட்களிலே தகப்பனரான ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இளைய சகோதரர் ஆன டி. ஆர். ராமண்ணா குடும்பத்துடன் ஆதரவாக வாழ்ந்தார்.
திரைப்படத்துறை பங்களிப்புகள்
நடிப்பு
1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.
எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.
பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.
கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் தங்கப்பதுமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.
சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.
நடித்த திரைப்படங்களின் பட்டியல்
- குமார குலோத்துங்கன் (1939)
- சூர்யபுத்ரி (1941)
- மனோன்மணி (1942)
- சதி சுகன்யா (1942)
- பிரபாவதி (1942)
- சிவகவி (1943)
- குபேர குசேலா (1943)
- ஹரிதாஸ் (1944)
- சாலிவாகனன் (1945)
- வால்மீகி (1946)
- விகடயோகி (1946)
- பங்கஜவல்லி
- சந்திரலேகா (1948)
- சந்திரலேகா (1948)
- பிரம்மரிஷி விஷ்வாமித்திரா (1948)
- கிருஷ்ணபக்தி (1949)
- பவளக்கொடி (1949)
- இதய கீதம் (1950)
- விஜயகுமாரி (1950)
- வனசுந்தரி (1951)
- அமரகவி (1952)
- பணக்காரி (1953)
- என் வீடு (1953)
- அன்பு (1953)
- வாழப்பிறந்தவள் (1953)
- மனோகரா (1954)
- நல்ல தங்கை (1955)
- குலேபகாவலி (1955)
- புதுமைப்பித்தன் (1957)
- மல்லிகா (1957)
- தங்கமலை ரகசியம் (1957)
- தங்கப்பதுமை (1959)
- மந்தாரவதி
மேற்கோள்கள்
- "Ithaya Geetham (1950)". தி இந்து (17 ஜூன் 2010). மூல முகவரியிலிருந்து 12 ஆகஸ்ட் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 நவம்பர் 2016.
உசாத்துணை
- பேசும் படம் (இதழ்) மாதிகை, ஜனவரி, 1951