வானம்பாடி

வானம்பாடிகள் (larks) எனப்படுபவை அலாவுடிடே (Alaudidae) குடும்பத்தைச் சேர்ந்த பேசரின் பறவைகள் ஆகும். அனைத்து வானம்பாடிகளும் பழைய உலகம், வடக்கு மற்றும் கிழக்கு ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன. கொம்பு வானம்பாடி மட்டும் வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இவை பல்வேறு வகையான நிலப்பரப்புகளில் காணப்படுகின்றன. ஆனால் பொதுவாக வறண்ட நிலப்பரப்புகளில் காணப்படுகின்றன.

Chordata

வானம்பாடி
ஐரோவாசிய வானம்பாடி (Alauda arvensis)
உயிரியல் வகைப்பாடு
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பறவை
Order: பேஸ்ஸரின்
Superfamily: Passeroidea
Family: அலாவுடிடே


விகோர்ஸ், 1825

வகைப்படுத்தல்

வானம்பாடிகள் நன்றாக வகைப்படுத்தப்பட்ட குடும்பம் ஆகும். இதற்கு அவற்றின் கணுக்கால் அமைப்பும் ஒரு காரணம் ஆகும். இவற்றின் கணுக்காலின் பின்பகுதியில் பல செதில்கள் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான பாடும் பறவைகளில் கணுக்காலின் பின்புறம் ஒரே தட்டுப்போல் காணப்படுகிறது. பாடும் பறவைகளின் கீழ் குரல்வளையின் நடுவில் உள்ள எலும்பு போன்ற அமைப்பு இவற்றிற்குக் கிடையாது.

உயிர்வாழும் பேரினங்கள்

அலாவுடிடே குடும்பத்தில் இருபத்தி ஒரு உயிர்வாழும் பேரினங்கள் உள்ளன:

  • பேரினம் அலமோன் - ஹூப்போ வானம்பாடிகள் (2 இனங்கள்)
  • பேரினம் செர்சோமனேஸ் - முள் குதிகால் வானம்பாடிகள் (2 இனங்கள்)
  • பேரினம் அம்மோமனோப்சிஸ் - கிரேயின் வானம்பாடி
  • பேரினம் செர்திலவுடா - குட்டை நக வானம்பாடிகள் மற்றும் நீண்ட அலகு வானம்பாடிகள் (6 இனங்கள்)
  • பேரினம் பினரோகோரிஸ் - மங்கிய வானம்பாடி மற்றும் சிவந்த வால் வானம்பாடி (2 இனங்கள்)
  • பேரினம் ரம்போகோரிஸ் - பருத்த அலகு வானம்பாடி
  • பேரினம் அம்மோமனேஸ் - (3 இனங்கள்)
  • பேரினம் எரெமோப்டெரிக்ஸ் - சிட்டு-வானம்பாடிகள் (8 இனங்கள்)
  • பேரினம் கலேன்டுலவுடா - (8 இனங்கள்)
  • பேரினம் ஹெடிரோமிரஃப்ரா - ருத்தின் வானம்பாடி மற்றும் ஆர்ச்சரின் வானம்பாடி (2 இனங்கள்)
  • பேரினம் மிரஃப்ரா - புதர் வானம்பாடிகள் (24 இனங்கள்)
  • பேரினம் லுல்லுலா - மர வானம்பாடி (மற்றும் 7 அற்றுவிட்ட இனங்கள்)
  • பேரினம் ஸ்பிசோகோரிஸ் - (7 இனங்கள்)
  • பேரினம் அலாவுடா - வானம்பாடிகள் (4 உயிர்வாழும் மற்றும் 2 அற்றுவிட்ட இனங்கள்)
  • பேரினம் கலேரிடா - பெரிய அலகு வானம்பாடி மற்றும் கொண்டை வானம்பாடிகள் (7 உயிர்வாழும் மற்றும் 2 அற்றுவிட்ட இனங்கள்)
  • பேரினம் எரெமோபிலா - கொம்பு வானம்பாடிகள் (2 உயிர்வாழும் மற்றும் 1 அற்றுவிட்ட இனங்கள்)
  • பேரினம் கலன்ட்ரெல்லா - சிறிய விரல் வானம்பாடிகள் (6 உயிர்வாழும் மற்றும் 1 அற்றுவிட்ட இனங்கள்)
  • பேரினம் மெலனோகோரிபா - (5 உயிர்வாழும் மற்றும் 3 அற்றுவிட்ட இனங்கள்)
  • பேரினம் செர்சோபிலுஸ் - டுபோன்டின் வானம்பாடி
  • பேரினம் எரேமலவுடா - டுன்னின் வானம்பாடி
  • பேரினம் அலாவுடலா - (5 இனங்கள்)

அற்றுவிட்ட பேரினம்

  • பேரினம் எரெமரிடா

விளக்கம்

இவை சிறியது முதல் நடுத்தர அளவு வரை இருக்கும். இவற்றின் நீளம் 12-24 செ.மீ. மற்றும் 15-75 கிராம் எடை இருக்கும்.

பல்வேறு தரைவாழ் பறவைகளைப் போலவே பெரும்பாலான வானம்பாடிகள் நீளமான பின் நகங்களைக் கொண்டுள்ளன. இந்நகங்களே இவை நிற்கும்போது இவற்றிற்கு ஸ்திரத்தன்மையைக் கொடுப்பதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வானம்பாடிகள் கோடுகள் உடைய பழுப்பு இறகுகளைக் கொண்டுள்ளன. சில தடித்த கருப்பு அல்லது வெள்ளை அடையாளங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் மங்கிய தோற்றம் மண்ணைப் போன்ற நிறத்தை இவற்றிற்குக் கொடுக்கிறது. உருமாற்றியாகவும் செயல்படுகிறது, முக்கியமாகக் கூட்டில் இருக்கும்போது. இவை பூச்சிகள் மற்றும் விதைகளை உண்கின்றன. எனினும் வளர்ந்த பறவைகள் பொதுவாக விதைகளை உண்கின்றன. அனைத்து இனங்களும் தங்கள் குஞ்சுகளுக்கு பூச்சிகளையே ஊட்டுகின்றன, குறைந்தது குஞ்சுகள் பிறந்து முதல் வாரம் வரையிலாவது. பல இனங்கள் தங்கள் அலகுகள் மூலம் தோண்டி உணவை எடுக்கின்றன. சில வானம்பாடிகள் கனத்த அலகுகளைக் (பருத்த அலகு வானம்பாடியில் அலகு அதிகபட்ச அளவை எட்டுகிறது) கொண்டு விதைகளைத் திறக்கின்றன. மற்ற இனங்கள் நீண்ட, கீழ்நோக்கி வளைந்த அலகுகளைக் கொண்டுள்ளன. இது தோண்டுவதற்கு ஏதுவாக உள்ளது.

பேசரின் பறவைகளிலேயே வானம்பாடிகள் மட்டுமே முதல் இறகு உதிர்வில் (முதல் இறகு உதிர்வு கொண்டதாக அறியப்பட்ட இனங்களில்) தங்கள் அனைத்து இறகுகளையும் உதிர்க்கின்றன. குஞ்சுகளின் தரமற்ற இறகுகள் காரணமாக இது நடக்கலாம்.

மூன்றாம் இறகுகள் உட்பட பல்வேறு விதங்களில் வானம்பாடிகள் நெட்டைக்காலி போன்ற மற்ற தரைவாழ் பறவைகளை ஒத்துள்ளன.

சத்தங்கள் மற்றும் பாடல்கள்

வானம்பாடிகள் பெரும்பாலான பறவைகளைக்காட்டிலும் விரிவான சத்தங்களை எழுப்புகின்றன. இதன் காரணமாக இவை இலக்கியங்களிலும், இசையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. முக்கியமாக வடக்கு ஐரோப்பாவின் ஐரோவாசிய வானம்பாடி மற்றும் தெற்கு ஐரோப்பாவின் கொண்டை வானம்பாடி மற்றும் கேலன்ட்ரா வானம்பாடி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பெரும்பாலான இனங்கள் தரையில் கூடு கட்டுகின்றன, குறிப்பாக காய்ந்த புற்களில். எனினும் சில இனங்கள் கூடுகளை சிக்கலான அமைப்பிலும் மற்றும் பகுதியளவு குவிந்த வடிவிலும் கட்டுகின்றன. சில பாலைவன இனங்கள் புதர்களின் அடியில் கூடு கட்டுகின்றன. காற்றின் காரணமாக கூட்டின் வெப்பத்தைக் குறைக்க இப்படிக் கட்டுகின்றன எனக் கருதப்படுகிறது. வானம்பாடிகளின் முட்டைகள் பொதுவாகப் புள்ளிகளுடன் காணப்படுகிறது. வானம்பாடிகள் இரண்டில் (முக்கியமாகப் பாலைவன இனங்கள்) இருந்து ஆறு முட்டைகள் (முக்கியமாக வெப்ப மண்டல இனங்கள்) வரை இடுகின்றன. முட்டைகள் 11-16 நாட்களில் பொரிக்கின்றன.

கலாச்சாரம்

இலக்கியங்கள்

புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் வானம்பாடிகள் பகலைக் குறிக்கின்றன.

வளர்ப்புப் பிராணியாக

பலகாலமாக வானம்பாடிகள் சீனாவில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. பெய்ஜிங்கில் வானம்பாடிகளுக்கு மற்ற பாடும்பறவைகள் மற்றும் விலங்குகளின் சத்தங்களை எழுப்புவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 வகையான சத்தங்களை எழுப்ப வானம்பாடிகளுக்குக் கற்றுத்தரப்படுகிறது. இது வானம்பாடியின் பதிமூன்று பாடல்கள் என அழைக்கப்படுகிறது. 13 சத்தங்களை சரியான வரிசையில் எழுப்பும் வானம்பாடிகளுக்கு அதிக விலை கொடுக்கப்படுகிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.