கொங் தயிஜி

கொங் தயிஜி (மொங்கோலியம்: ᠬᠤᠨ ᠲᠠᠶᠢᠵᠢ, хун тайж) மங்கோலியர்களின் பட்டமாகும். இது சீன வார்த்தையான ஹுவாங்டைசியில் (皇太子; பட்டத்து இளவரசன்) இருந்து உருவானது. இது முதலில் செங்கிஸ் கான் வம்சாவளியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மங்கோலிய பாரம்பரியத்தில், ஒரு கான் தனக்கு அடுத்த கானைத் தேர்ந்தெடுக்க முடியாது. அதற்குப் பதிலாக கான் இறந்த பிறகு அடுத்த கான் குறுல்த்தாயில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் குப்லாய் கான் இந்த பாரம்பரியத்தை உடைத்து, தனது இரண்டாவது மகன் சென்சினை (சின்கம்) பட்டத்து இளவரசனாக்கினார். 1286 ஆம் ஆண்டில் சின்கம் இறந்துவிட்டபின், சின்கத்தின் மூன்றாவது மகனான தெமுர் 1293ல் பட்டத்து இளவரசனாக்கப்பட்டார். இருப்பினும், தெமுர் முறையாக இளவரசராக நியமிக்கப்படவில்லை. குப்லாயின் மரணத்திற்குப் பின் நடந்த ஒரு குறுல்த்தாயில் மட்டுமே அவரது பட்டம் உறுதிப்படுத்தப்பட்டது.

துமேட் தியுமனின் அல்டன் கான் கொங் தயிஜியை துணை கானாக நியமித்தார். அதன் பிறகு மங்கோலியப் பகுதி முழுவதும் இப்பழக்கம் பரவியது.

1630களில், 5வது தலாய் லாமாவால், பாதுர் கொங் தயிஜி பட்டம் சுங்கர்களின் தலைவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு "கொங் தயிஜி" என்ற பட்டமானது, சுங்கர்களின் தலைவரான சேவங் டோர்ஜி நம்ஜில் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. சுங்கர்கள் வலுப்பெற்ற நிலையில், இப்பட்டம் முக்கியத்துவம் பெற்றது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒயிரட்களிடத்தில் இப்பட்டம் கானை விட உயர்ந்த இடத்தை அடைந்தது. ஏனெனில் சிங் வம்சமானது அளவுக்கு அதிகமான உள்ளூர் தலைவர்களுக்குக் கான் பட்டத்தை வழங்கியது.

மேற்கோள்கள்

    ஆதாரங்கள்

    Book
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.