சுபுதை

சுபுதை (ஆங்கிலம்:Subutai, இலக்கிய நய மங்கோலியம்: சுபுகடை அல்லது சுபுஅடை; துவ மொழி:Сүбэдэй; மங்கோலியம்: Сүбээдэй, சுபேடெய்; சீன மொழி:速不台 1175–1248) ஓர் உரியங்கை இனத்தைச் சேர்ந்த தளபதி ஆவார். இவர் செங்கிஸ் கான் மற்றும் ஒகோடி கானின் முதன்மை இராணுவ போர்த்தலைவரும் ஆவார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் முப்பத்தி இரண்டு நாடுகள் மற்றும் அறுபத்தைந்து போர்களை வெற்றுள்ளார். இவர் வரலாற்றில் வேறு எந்த தளபதியையும் விட அதிக இடங்களில் வெற்றிகள் பெற்றுள்ளார்.[1] அவர் கற்பனை மற்றும் அதிநவீன உத்திகள் மூலம் ஒன்றுக்கொன்று சுமார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த சேனைகளை ஒருங்கிணைத்து இயக்கி வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும் ஒன்றுக்கொன்று ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஹங்கேரி மற்றும் போலந்து படைகளை இரண்டு நாட்களுக்குள் அழித்ததற்காக நினைவு கூரப்படுகிறார்.

சுபுதை
இடைக்கால சீன வரைபடம்
தாய்மொழியில் பெயர்சுபுகதை
பிறப்புஅநேகமாக 1175
புர்கான் கல்துன், மங்கோலியா
இறப்பு1248 (அகவை 7273)
தூல் நதி, மங்கோலியா
தேசியம்உரியங்கை
மற்ற பெயர்கள்இலத்தீன் மொழியில்: சுபேதே, சுபேதை, சுபோதை
இலக்கிய நய மங்கோலியம்: சுபுகடை, சுபுஅடை
நவீன மங்கோலியம்: சுபீதே (மொங்கோலியம்: Сүбээдэй), இடைக்கால மங்கோலியம்: "சுபேதே", Сүбэдэй (துவ மொழி:Сүбэдэй)
பணிபடைப்பெருந்தலைவர்
பட்டம்ஒர்லாக் பகதூர், மிங்கனின் நோயன் (ஓர் ஆயிரம் வீரர்களின் தளபதி)
உறவினர்கள்செல்மே, சுர்கான், கபன், நெர்பி

ஆரம்பகால வாழ்க்கை

வரலாற்றாளர்கள் கி.பி. 1175 ஆம் ஆண்டில் சுபுதை பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர்.[2] தற்போதைய மங்கோலியாவின் ஆனன் ஆற்றின் வடபகுதியில் சற்றே மேற்கில் இவர் பிறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர் உரியாங்கை எனும் இனத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் ரெயின்டீர் மக்கள் என அறியப்பட்டனர். இவர்கள் ஒரு குழுவாக வாழ்ந்த சைபீரிய காட்டு மக்களாவர். இவர்கள் தெற்கே வாழ்ந்த மங்கோலியர்கள் போல சமவெளியில் வாழவில்லை. சுபுதை வளர்ந்த இத்தகைய சூழ்நிலையின் காரணமாக அவரால் மற்ற மங்கோலியர்கள் போல குதிரை சவாரி செய்யும் திறமையை இயற்கையாகவே கொண்டிருக்க முடியவில்லை. இதனால் மங்கோலியர்கள் மத்தியில் சுபுதை ஒரு வெளியாளாக இருந்தார்.[3] சுபுதையின் குடும்பமும் தெமுசினின் (எதிர்கால செங்கிஸ்கான்) குடும்பமும் பல தலைமுறைகளாக தொடர்பில் இருந்தன. சுபுதையின் நான்காம் தலைமுறை முன்னோரான நெர்பி என்பவர் மங்கோலிய கான் தும்பினா செச்செனின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. தெமுசின் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் பல்ஜுனா ஏரியின் அருகே மோசமான நிலையில் இருந்தபோது சுபுதையின் தந்தை சர்ச்சிகுடை அவர்களுக்கு உணவு வழங்கியதாக கூறப்படுகிறது. சுபுதையின் அண்ணனான செல்மே மங்கோலிய ராணுவத்தில் ஒரு தளபதியாக பணியாற்றினார். அவர் தெமுசினின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். ஒரு போரில் எதிரியின் அம்பு தாக்கி பலத்த காயம் அடைந்த தெமுசினை செல்மே காப்பாற்றினார். மங்கோலியர்களின் ரகசிய வரலாற்றில் சுபுதைக்கு சவுர்கான் என்ற மற்றொரு சகோதரர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. ஹார்ட், லிட்டெல் (1977). பெரிய கேப்டன்களின் வெளியீடு (பகுதி 1, பதிப்பு 1). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-306806-86-5. https://www.goodreads.com/book/show/825232.Great_Captains_Unveiled.
  2. Gabriel, Richard. "Genghis Khan's Greatest General Subotai the Valiant". University of Oklahoma Press, 2004, p. 6.
  3. Gabriel, 6-8.
  4. Tsendiin Damdinsüren (1970). "120 (III)" (in Mongolian). Монголын нууц товчоо (1st ).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.