ஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி

ஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகும். அமெரிக்காவின் சீனம், பிரெஞ்சு, ஜெர்மானியம், இத்தாலியம், ஹவாயி மற்றும் பழங்குடியினர் மொழிகளைப் பேசுவோரின் மொத்தத் எண்ணிக்கையைவிட அதிகம் பேர் எசுப்பானிய மொழியைப் பேசுகின்றனர். அமெரிக்க மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் 37 மில்லியன் மக்கள் எசுப்பானிய மொழிகளைப் பேசுவதாகவும் தாய்மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் மொத்தமாக 45 மில்லியன் மக்கள் எசுப்பானியம் பேசுவதாகவும் அறியப்படுகிறது. இதன் மூலம், மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக எசுப்பானியம் பேசும் அதிகம் மக்கள் அமெரிக்காவில் வசிப்பதாக அறியப்படுகிறது. இவர்களில் பாதி பேர் ஆங்கிலமும் சரளமாகப் பேசுவதாக அறியப்படுகிறது. உலகிலேயே அதிகம் பேசப்படும் இந்தோ- ஐரோப்பிய மொழியாக எசுப்பானியம் விளங்குகிறது.

எசுப்பானியம்
Idioma español en los Estados Unidos, அமெரிக்காவில் எசுப்பானியர்
உச்சரிப்பு[espaˈɲol]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
37,6 மில்லியன் அமெரிக்காவில் மட்டும்

மேலும் 12,4 மில்லியன் கூடுதலாக மொத்தம்: 50,000,000 மில்லியன் அமெரிக்காவில் மட்டும்

native= 37,6 மில்லியன் அமெரிக்காவில்  (2010)[1]
இந்தோ-ஐரோப்பியம்
  • இத்தாலியம்
    • ரோமானியம்
      • மேற்கு ரோமானியம்
        • கலோ-ஐபீரியம்
          • ஐபீரிய-ரோமானியம்
            • மேற்கு ஐபீரியம்
              • எசுப்பானியம்
லத்தீன் எழுத்துகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1es
ISO 639-2spa
ISO 639-3spa
அமெரிக்காவில் எசுப்பானியம் பேசுவோர்

எசுப்பானிய ஆட்சியாளர்கள் 17 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு வந்ததிலிருந்து எசுப்பானிய மொழி பரவிற்று. அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் முதலில் பேசப்பட்ட ஐரோப்பிய மொழி எசுப்பானியமே என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக எசுப்பானிய மொழி ஆதிக்கம் பெற்றிருக்கிறது

மக்கள் பரம்பல்

மாநிலங்களில் எசுப்பானியம் பேசுவோரின் அடர்த்தி

மாநிலம் வாரியாக எசுப்பானியம் பேசுவோரின் எண்ணிக்கை பட்டியலாகத் தரப்பட்டுள்ளது.

மாநிலம்எசுப்பானியம் பேசுவோர்மொத்தத்தில் விழுக்காடு
புவெர்ட்டோ ரிக்கோ3,900,12895.21%
நியூ மெக்சிகோ823,35243.27%
கலிபோர்னியா12,442,62634.72%
டெக்சஸ்7,781,21134.63%
அரிசோனா1,608,69828.00%
நெவாடா445,62219.27%
புளோரிடா3,304,83219.01%
நியூ யார்க்3,076,69715.96%
நியூ செர்சி1,134,03313.89%
இலினாய்1,516,56012.70%
கொலராடோ545,11212.35%
ரோட் தீவு100,2279.96%
உட்டா216,3279.40%
கனக்டிகட்308,8639.35%
ஒரிகன்293,8408.47%
கொலம்பியா மாகாணம்45,0238.24%
இடாகோ103,6867.66%
வாசிங்டன்431,0217.20%
ஜார்ஜியா610,4027.04%
மாசச்சூசெட்ஸ்411,1926.80%
கன்சாசு169,3766.59%
டெலவெயர்51,7626.50%
வடக்கு கரோலினா532,5536.45%
நெப்ராசுகா98,2115.99%
விர்ஜீனியா412,4165.78%
மேரிலேந்து298,0725.68%
ஓக்லகாமா173,5525.22%
அர்கான்சசு116,3964.45%
இந்தியானா254,2194.32%
விஸ்கொன்சின்217,5504.18%
வியோமிங்19,8304.12%
பென்னிசில்வேனியா436,2543.72%
தெற்கு கரோலினா148,3453.68%
அலாசுகா22,6493.64%
மின்னசொட்டா171,0423.55%
ஐயோவா97,8763.51%
மிச்சிகன்292,9963.10%
டென்னிசி171,6463.04%
லூசியானா106,8722.68%
அலபாமா107,8062.50%
மிசவுரி129,3292.37%
ஒகியோ230,4672.15%
நியூ காம்ப்சையர்26,6072.14%
கெண்டக்கி80,4502.05%
தெற்கு டக்கோட்டா14,4031.98%
மிசிசிபி46,5611.72%
மொண்டானா13,4581.51%
கவாய்17,4421.50%
வடக்கு டக்கோட்டா8,8531.48%
மேற்கு விர்ஜீனியா18,2071.06%
வெர்மான்டு5,9501.01%
மெய்னி12,5761.00%

வரலாறு

ஐரோப்பிய குடியேற்றவாதிகளால் வட அமெரிக்காவில் முதலில் பேசப்பட்ட மொழி இதுவே. 1513 ஆம் ஆண்டில் முற்கால அமெரிக்காவில் எசுப்பானியர்கள் வந்திறங்கினர். புளோரிடா என்னும் குடியிருப்பை நிர்மாணித்தனர். அமெரிக்காவின் மிகப் பழைய ஐரோப்பியக் குடியிருப்பு இதுவே. புவெர்ட்டோ ரிக்கோவின் தலைநகரான சான் யுவான் அமெரிக்காவின் பழைய நகரமாகும். முற்காலத்தில், எசுப்பானியப் போர்களாலும், நிலம் வாங்கியதாலும், பெரும்பாலான எசுப்பானியர்கள் குடியேறினர். தற்காலத்தில் இவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது.

ஆடம்சு - ஓனிசு ஒப்பந்தம்

1819 ஆம் ஆண்டில், ஆடம்சு ஓனிசு ஒப்பந்தத்தின்படி, புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது ஸ்பெயின். இங்கு குடியேறிய எசுப்பானியர்கள் அமெரிக்கக் குடிமக்கள் ஆயினர். ஆயினும், தொடர்ந்து எசுப்பானிய மொழியைப் பேசினர்.

லூசியானாவை வாங்குதல்

18, 9 ஆம் நூற்றாண்டுகளில், ஸ்பெயின் அமெரிக்காவின் பெரும்பகுதியை உரிமை கொண்டாடியது. லூசியானாவை அமெரிக்காவிற்கு விற்றபின், அங்கு வாழ்ந்த எசுப்பானியர்களும், பிரெஞ்சர்களும் எசுப்பானிய, பிரெஞ்சு மொழிகளைப் பேசினர்.

நியூமெக்சிகோவில் எசுப்பானியம்

எசுப்பானியத்தின் பரவலான பயன்பாட்டால், நியூமெக்சி ஆட்சிமொழியாக விளங்குகிறது என பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். இம்மாநிலத்திற்கு ஆட்சி மொழிகள் எதுவும் கிடையாது எனினும், எசுப்பானியமும், ஆங்கிலமும், அரசாணைகளிலும், பிற சேவைகளிலும் பயன்படுத்தப்படும் என சட்டம் வகுக்கப்பட்டது. இருப்பினும், உள்ளூர் அரசுகள் பெரும்பாலும் எசுப்பானியத்திலேயே சேவைகளை வழங்குகின்றன. இங்கு பேசப்படும் எசுப்பானியம் இலக்கணத்தில் பெருமளவில் மாறுபட்டும், ஆங்கில, பிற மொழிச் சொற்களை உள்வாங்கியும் காணப்படுகிறது.

டெக்சாசில் எசுப்பானியம்

டெக்சாசு மாநிலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழி போன்று செயல்படுகிறது. இருப்பினும், எசுப்பானியர்களின் புதிய குடியேற்றங்களால் எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மெக்சிகோவை ஒட்டிய எல்லையோர டெக்சாசுப் பகுதிகளில் எசுப்பானியம் அதிகம் பேசப்படுகிறது. டெக்சாசு மாநில அரசு தங்கள் அரசு இணையதளத்தில் ஆங்கிலத்தில் குறைவான அறிவுடையவர்க்காக எசுப்பானியத்திலும் தகவல்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

புவெர்ட்டோ ரிக்கோவில் எசுப்பானியம்

புவெர்ட்டோ ரிக்கோ அரசு எசுப்பானியம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவித்தாலும், எசுப்பானியமே ஆதிக்க மொழியாகவும், அதிகம் பேசப்படும் மொழியாகவும் திகழ்கிறது. அமெரிக்காவின் இடப்பெயர்கள் பல எசுப்பானிய மொழிச் சொற்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

கலிபோர்னியா

கலிபோர்னியாவின் முதல் அரசியலமைப்புச் சட்டம் எசுப்பானிய மொழிக்கு உரிமை வழங்கியுள்ளது.

மாநிலத்தின் ஆட்சியதிகாரங் கொண்ட அமைப்புகள் தங்களது அனைத்து சட்டங்கள், சேவைகள் ஆகியவற்றை ஆங்கிலத்திலும், எசுப்பானியத்திலும் வழங்க வேண்டும்.
   —கலிபோர்னிய சட்டம், 1849, கட்டுரை. XI பகுதி. 21.

பின்னர் ஆங்கிலம் பேசும் அமெரிக்கர்களின் எண்ணிக்கைக் கூடியதால், அனைத்து தொடர்புகளும் ஆங்கிலத்திலேயே கொள்ளப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது.

கலிபோர்னியாவின் ஆட்சி மொழி ஆங்கிலம்.
   —கலிபோர்னிய சட்டம், கட்டுரை. 3, பகுதி. 6

எசுப்பானியம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. பல அரசு ஆவணங்கள், சேவைகள் அனைத்து எசுப்பானியத்திலும் வழங்கப்படுகின்றன.

ஆங்கிலம் புரிந்துகொள்ள முடியாத குற்றவாளி தன் அனைத்து வாதங்களின்போது மொழிபெயர்ப்பாளரின் உதவியை நாடலாம்
   —கலிபோர்னிய சட்டம், கட்டுரை. 1. பகுதி. 14

அரிசோனாவில் எசுப்பானியம்

அரிசோனாவில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தாலும், மெக்சிகோவுடன் நெருங்கிய மொழி, பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் முற்காலத்தில் அதிகளவிலான எசுப்பானியப் பேச்சாளர்கள் வாழ்ந்தனர்.

அமெரிக்காவில் எசுப்பானிய மொழிக் கல்வி

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக, எசுப்பானியம் அமெரிக்கப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிகம் கற்பிக்கப்படுகிறது. அமெரிக்கக் கல்லூரியில் கற்பிக்கப்படும் மொழிகளில் நூற்றில் 53 பேர் எசுப்பானியத்தையும், 14.4 பேர் பிரெஞ்சையும், 7.1 பேர் ஜெர்மானியத்தையும், 4.5 பேர் இத்தாலியத்தையும், 4.3 பேர் அமெரிக்க சைகை மொழியையும், 3.7 ஜப்பானியத்தையும், 2.4 பேர் சீனத்தையும் கற்றிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எசுப்பானிய மொழியில் ஆங்கிலக் கலப்பு

அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானியத்தில் ஆங்கில மொழி பெருமளவு சொற்களிலும், சொல்லமைப்பிலும் கலந்துள்ளது. இளைய தலைமுறையினர் இருமொழிகளையும் கலந்து பேசி வருகின்றனர். புதிய தலைமுறையினர் பலர் ஆங்கிலத்திற்கு இணையாக எசுப்பானியத்தை கற்பதிலும், பேசுவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். எசுப்பானிய மொழிக்கான வட அமெரிக்கக் குழு, எசுப்பானிய மொழியின் வளர்ச்சியையும் அதில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தையும் ஆராய்ந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப எசுப்பானியம் வேறுபடுகிறது. பெரும்பான்மையினர் அமெரிக்க ஒலிப்புமுறையுடன் எசுப்பானியம் பேசுவதாக அறியப்படுகிறது.

அமெரிக்க ஆங்கிலத்தில் எசுப்பானியச் சொற்கள்

பல எசுப்பானியச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் கலந்துள்ளன. பரவலாக அறியப்படும் சில சொற்கள் மாற்றம் பெறாத சொற்கள் அப்படியே வழங்கப்பட்டுள்ளன. மாற்றம் பெற்றவைக்கு மட்டும் அடைப்புக்குறிக்குள் மூலச் சொல்லும், தமிழில் பொருளும் தரப்பட்டுள்ளது.

  • Admiral (இராணுவத் தளபதி)
  • Aficionado (தீவிர இரசிகர்)
  • Buckaroo (vaquero) ()
  • Cafeteria (cafetería) (தானே பரிமாறி உண்ணும் உணவகம்)
  • Cigar ("Ciq-Sigan") (சுருட்டு)
  • Corral (குழுவாக்குதல்)
  • Chocolate (xocoatl) (கோகோவில் செய்யப்படும் பாகு, இனிப்பு)
  • Desperado (desesperado)
  • Guerrilla (தீவிரவாதி)
  • Guitar (guitarra) (இசைக்கருவி)
  • Junta
  • Lasso ("lazo") (கயிறு)
  • Peninsula (தீபகற்பம்)
  • Potato ("Patata") (உருளைக் கிழங்கு)
  • Ranch ("Rancho") (பண்ணை நிலம்)
  • Rodeo
  • Siesta
  • Tornado (புயல், சூறாவளி)
  • Wrangler (caballerango)

தற்போதைய நிலை

அமெரிக்காவில் வசிக்கும் மூன்றரை கோடி மக்கள் வீட்டில் எசுப்பானிய மொழியினைப் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் கலிபோர்னியா, டெக்சாசு, புளோரிடா மாகாணங்களிலேயே வாழ்கின்றனர். அமெரிக்காவிற்கு ஆட்சி மொழி இல்லையென்றாலும், ஆங்கிலமே பொது மொழியாக செயல்படுகிறது. பெரும்பாலான மைய, மாநில அரசுகளின் சேவைகள், திட்டங்கள், ஆவனங்கள் ஆங்கிலத்திலேயே வழங்கப்படுகின்றன. எசுப்பானியம் அதிகம் பேசப்படும் மாநிலங்களில் எசுப்பானியத்திலும் இவை கிடைக்கின்றன. புவெர்ட்டோ ரிக்கோவில் எசுப்பானியமே ஆட்சிமொழியும் அதிகம் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. அமெரிக்காவில் தெற்குப் பகுதிகளில் எசுப்பானிய, ஆங்கிலப் பண்பாட்டுகளுக்கிடையே பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன. அமெரிக்காவில் எசுப்பானியமே அதிகம் கற்பிக்கப்படும் மொழியாக உள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானியத்தின் எதிர்காலம்

அமெரிக்காவில் எசுப்பானிய மொழி எதிர்காலத்திலும் நிலைத்திருக்கும் என்று காரணிகள் தெரிவிக்கின்றன.

புதிதாய் குடியேறும் எசுப்பானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், எசுப்பானிய ஊடகங்களின் செல்வாக்கினாலும் எசுப்பானியப் பண்பாட்டுக் கூறுகளை காணமுடிகிறது. வட அமெரிக்க இலவச வியாபார ஒப்பந்தத்தின்படி, அனைத்து அமெரிக்க உற்பத்தியாளர்களும், தங்கள் பொருட்களில் ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானிய மொழிகளில் எழுதி விற்கின்றனர், எசுப்பானியர்களிடம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஆங்கிலம், எசுப்பானியம் ஆகிய இரு மொழிகளிலும் விளம்பரம் செய்கின்றனர்.

அமெரிக்க அரசின் முக்கிய அரசாணைகள் எசுப்பானிய மொழியிலும் வழங்கப்படுகின்றன. எசுப்பானிய மொழியை அறிந்த ஆங்கிலேயே அரசியல்வாதிகள் எசுப்பானியர் அதிகம் வாழும் பகுதியில் எசுப்பானிய மொழியிலேயே பேசுகின்றனர். இதுவரை 500 செய்தித்தாள்களும், 152 சஞ்சிகைகளும், 205 பதிப்பகங்களும் எசுப்பானிய மொழியில் இயங்குகின்றன. எசுப்பானியர்கள் வாழும் பகுதியில் அமெரிக்காவின் அஞ்சல் துறை எசுப்பானிய மொழியிலும் அறிக்கைகளை வெளியிடுகிறது. குடியேறியவர்களின் மொழிகள் சிறுகச் சிறுக மறைந்து வந்தாலும், எசுப்பானியம் பேசும் நாடுகளை ஒட்டி இருப்பதாலும், குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் எசுப்பானிய மொழி உறுதியாகப் பேசப்படுகிறது. ஆயினும் முற்காலத்தில் எசுப்பானியம் பேசியவர்கள் தற்காலத்தில் தம் மொழியை இழந்துவருகின்றனர். குறிப்பாக, மைக்ரோனேசியா, மார்சல் தீவுகள், பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது.

”ஆங்கிலம் மட்டுமே இயக்கம்” எனும் இயக்கம் அமெரிக்காவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது. இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள், எசுப்பானியர்களை ஆங்கிலம் கற்குமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.

பெரும்பாலும், எசுப்பானியர்கள் எசுப்பானியம், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளைப் பேசுகின்றனர். குறைந்த அளவினர் எசுப்பானியம் மட்டுமோ, ஆங்கிலம் மட்டுமோ பேசுகின்றனர். அதிக எண்ணிக்கையில் குடியேறுபவர்களைக் காட்டிலும், ஏற்கனவே இங்கு வசிப்பவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்கள் மொழியைப் பேசி வருவதன் மூலமே எசுப்பானிய மொழியின் நிலையினை நன்கு அறியலாம்.

எசுப்பானிய அமெரிக்கர்கள் வெவ்வேறு அளவில் ஆங்கிலம் பேசினாலும், ஏறத்தாழ 50 சதவிகிதத்தினர் வீட்டில் எசுப்பானியம் மட்டுமே பேசுவதாகவும், மீதி பேர் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்த இளந்தலைமுறையினர் ஆங்கிலத்தையே அதிகம் பேசுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.