இஸ்லாமாபாத்

இஸ்லாமாபாத் (Islamabad) பாகிஸ்தானின் தலைநகரமாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1960 களில் இந்நகரம் கட்டப்பட்டு கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக்கப்பட்டது. 1999ல் இந் நகரத்தின் மக்கள் தொகை 1,018,000 ஆகும். இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர் ஆகும். இஸ்லாமாபாத் அதன் உயர் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு மற்றும் பசுமைக்கு பெயர் பெற்றது. [1]2017 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 1,014,825 மக்கட் தொகை கொண்ட இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் 9 வது பெரிய நகரமாகும். மேலும் பெரிய இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்த பெருநகர்ப் பகுதி நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கட் தொகையைக் கொண்டது.[2]


[[File:|200px]]

நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போத்தோஹர் பீடபூமியில், ராவல்பிண்டி மாவட்டத்திற்கும், வடக்கே மார்கல்லா ஹில்ஸ் தேசிய பூங்காவிற்கும் இடையில் இஸ்லாமாபாத் அமைந்துள்ளது. இப்பகுதி வரலாற்று ரீதியாக பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மார்கல்லா பாஸ் இரு இடங்களுக்கும் இடையிலான நுழைவாயிலாக செயல்படுகிறது.[3]

கிரேக்க கட்டிடக் கலைஞர் கான்ஸ்டான்டினோஸ் அப்போஸ்டலோ டோக்ஸியாடிஸ் இந்த நகரத்தை வடிவமைத்தார். நகரம் நிர்வாக, இராஜதந்திர இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், கல்வித் துறைகள், தொழில்துறை துறைகள், வணிகப் பகுதிகள் மற்றும் கிராமப்புற மற்றும் பசுமைப் பகுதிகள் உட்பட எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றது. மார்கல்லா ஹில்ஸ் தேசிய பூங்கா மற்றும் ஷகார்பரியன் பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் மற்றும் காடுகள் இந்த நகரத்தில் அமையப்பெற்றுள்ளன. இஸ்லாமாபாத் நகரம் தெற்காசியாவின் மிகப்பெரிய மசூதியான பைசால் மசூதி உட்பட பல அடையாளங்களை கொண்டுள்ளது. பாகிஸ்தானின் தேசிய நினைவுச்சின்னம் மற்றும் ஜனநாயக சதுக்கம் ஆகிய அடையாளச் சின்னங்களும் இங்கு அமைந்துள்ளன.

புவியியல்

இஸ்லாமாபாத் 33.43 ° வடக்கு 73.04 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது. இது 540 மீட்டர் (1,770 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.[4] நகரின் வடகிழக்கில் முர்ரியின் காலனித்துவ கால மலை வாசஸ்தலமும், வடக்கே கைபர் பக்துன்க்வாவின் ஹரிபூர் மாவட்டமும் அமைந்துள்ளது. கஹுதா தென்கிழக்கிலும், தக்ஸிலா , வா கான்ட் மற்றும் அட்டாக் மாவட்டம் என்பன வடமேற்கிலும், தெற்கிலும் தென்மேற்கிலும் ராவல்பிண்டி பெருநகரமும் அமைந்துள்ளன. இஸ்லாமாபாத் முசாபராபாத்தில் இருந்து 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவிலும், பெஷாவருக்கு கிழக்கே 185 கிலோமீட்டர் (115 மைல்) தொலைவிலும், லாகூரில் இருந்து 295 கிலோமீட்டர் (183 மைல்) தொலைவிலும் மற்றும் இந்திய ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பகுதியின் தலைநகரான ஶ்ரீநகரில் இருந்து 300 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமாபாத் நகரம் 906 சதுர கிலோமீட்டர் (350 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[5]

காலநிலை

இஸ்லாமாபாத் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின்படி ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலம் (நவம்பர்-பிப்ரவரி), வசந்த காலம் (மார்ச் மற்றும் ஏப்ரல்), கோடை (மே மற்றும் சூன்), மழை பருவமழை (சூலை மற்றும் ஆகத்து) மற்றும் இலையுதிர் காலம் (செப்டம்பர் மற்றும் அக்டோபர்) ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டுள்ளது. வெப்பமான மாதம் சூன் ஆகும். சூன் மாத சராசரி அதிகபட்ச வெப்பநிலை 38 ° C (100.4 ° F) ஐ விட அதிகமாக காணப்படும். அதிக மழையைக் கொண்ட மாதம் சூலை ஆகும். சூலை மாதத்தில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். மேகமூட்டம் மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பலத்த மழை மற்றும் மாலை இடியுடன் கூடிய மழை ஜூலை மாதமாகும். சிறந்த காலநிலையைக் கொண்ட மாதம் சனவரி ஆகும்.[6]

பொருளாதாரம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% பங்களிக்கிறது. [7]1989 இல் நிறுவப்பட்ட இஸ்லாமாபாத் பங்குச் சந்தையானது, கராச்சி பங்குச் சந்தை மற்றும் லாகூர் பங்குச் சந்தைக்குப் என்பவற்றிற்கு பிறகு பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய பங்குச் சந்தையாகும். 2010 ஆம் ஆண்டின் உலக வங்கியின் டூயிங் பிசினஸ் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் தொழிலைத் தொடங்க சிறந்த இடமாக இஸ்லாமாபாத் இடம் பெற்றது. இஸ்லாமாபாத் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. இங்கு இரண்டு மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன. அவை ஏராளமான தேசிய மற்றும் வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ளன.

போக்குவரத்து

367 கிமீ (228 மைல்) நீளம் கொண்ட எம் -2 பாதை இஸ்லாமாபாத் மற்றும் லாகூரை இணைக்கிறது. எம் -1 மோட்டார் பாதை இஸ்லாமாபாத்தை பெஷாவருடன் இணைக்கிறது. இப்பாதை 155 கிமீ (96 மைல்) நீளம் கொண்டது. இஸ்லாமாபாத் பைசாபாத் சந்திப்பின் மூலம் ராவல்பிண்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி சுமார் 48,000 வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.[8]

இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் மூலம் உலகெங்கிலும் உள்ள முக்கிய இடங்களுடன் இஸ்லாமாபாத் இணைக்கப்பட்டுள்ளது . இந்த விமான நிலையம் பாகிஸ்தானில் மிகப்பெரிய விமான நிலையமாகும். இது இஸ்லாமாபாத்திற்கு வெளியே ஃபதே ஜாங்கில் அமைந்துள்ளது.

சான்றுகள்

  1. "Shirley, Peter; Moughtin, J. C. (11 August 2006). Urban Design: Green Dimensions".
  2. "Population size and growth of major cities".
  3. "Islamabad - The Capital of Islamic Republic of Pakistan." (2008-06-30).
  4. "Cities of the World: World Regional Urban Development".
  5. Butt, M. J., Waqas, A., Iqbal, M, F., Muhammad., G., and Lodhi, M. A. K., 2011, "Assessment of Urban Sprawl of Islamabad Metropolitan Area Using Multi-Sensor and Multi-Temporal Satellite Data." Arabian Journal For Science And Engineering. Digital Object Identifier (DOI): 10.1007/s13369-011-0148-3.
  6. "Climate".
  7. "DAWN.COM | Pakistan | Economics and extremism" (2010-01-08).
  8. "NESPAK :: View Picture Related to Services" (2011-08-10).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.