ஆரையம்பதி

ஆரையம்பதி (Arayampathy) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இது கிழக்கிலங்கையில் தமிழர் செறிந்துவாழும் ஊர்களில் ஒன்றாகும். இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை – மண்முனையும் - தாழங்குடாவும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை - காங்கேயனோடையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியும் அமைந்துள்ளன. இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது.

ஆரையம்பதி
கிராமம்
ஆரையம்பதி கண்ணகையம்மன் ஆலயம்
ஆரையம்பதி
ஆள்கூறுகள்: 7°40′0″N 81°44′0″E
நாடுஇலங்கை
மாகாணம்கீழை
மாவட்டம்மட்டக்களப்பு

பெயர் வரலாறு

ஆரம்பத்தில் காலத்திற்கு காலம் கரையூர், மண்முனை, ஆலஞ்சோலை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. 16 அம் நுாற்றாண்டில் வாழ்ந்திருந்த வேடுவத்தலைவன் காத்தான் என்பவன் குடியிருந்தமையால் காத்தான்குடி என பெயரில் அறியப்பட்டது.[1] 1872 இல் காத்தான்குடியில் இருவேறு பக்கங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் அரசால் இரண்டாக பிரிக்கப்பட்ட போது இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதி காத்தான்குடி எனவும் தமிழர்கள் வாழ்ந்த பகுதி ஆரைப்பற்றை எனவும் பிரிக்கபட்டதன் பின்னர் இக்கிராமம் “ஆரைப்பற்றை" எனும் பெயர் பெற்றது. [2] இக்கிராமத்தில் “ஆரைப்பற்றை தெரு"ப்பகுதியில் ஒடும் நீரோடைகளில் ஆரை எனப்படும் ஒரு வகை கீரை அதிகமாக வளர்ந்து காணப்பட்டதால் “ஆரைப்பற்றை“ என அழைக்கப்பட்டது. ”ஆரைப்பற்றை தெரு” என்னும் அத்தெருவின் பெயரே முழுக்கிராமத்திற்கும் பெயராக அமைந்தது.

அரசால் 1872 இல் ஆரைப்பற்றை என பெயர் பதிவேடுகளில் பதியப்பட்ட தமது ஊரை, கிராம மக்கள் ஆரையம்பதி என்றே அழைத்து வந்தனர். 1992இல் ஆரைப்பற்றை “ஆரையம்பதி” என அரசால் உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.[3]

இடப்பெயர்கள்

காட்டுமாவடி, ஆலையடி, கயிற்றுச்சங்கத்தடி, கல்வீட்டுத்திண்ணையடி, வட்டையரின் வெட்டை, கேணியடி, வம்மிகேணியடி, எள்ளுச்சேனையடி, செல்வாநகர், இராஜதுரைகிராமம், துரும்பன் கேணியடி, திருநிற்றுக்கேணியடி, சிகரம், கோயில்குளம்

தோற்றமும் குடியேற்றமும்

கி.மு 2 ஆம் நுாற்றாண்டுகளில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளன் தனது பாதுகாப்புக்காக மட்டக்களப்பு வாவியோரங்களில் ஆற்றுக்காவல் படையினராக நிறுத்தி வைத்திருந்தவர்கள் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழத்தொடங்கியதாக சொல்லப்படுகின்றது.[4] கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கலிங்க தேசத்தில் இருந்து வந்து மண்முனையில் ஆட்சி செய்த சிற்றரசி உலகநாச்சியுடன் வந்த குடிகள் சில இங்கு குடியேறி இருக்கின்றன.[5] அதன் பின்னர், கி.பி 12 ஆம் நுாற்றாண்டில் மாகோன் காலத்திலும், போர்த்துக்கேயரால் கோயில்குளத்தில் அமைந்திருந்த காசிலிங்கேஸ்வரர் கோயில் 16 ஆம் நுாற்றாண்டில் சிதைக்கப்பட்ட பின்னரும் பல குடிகள் இவ்வூரில் வந்து குடியேறி இருக்கின்றன.[6] சேரநாட்டிலிருந்தும் சில குடியேற்றங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.[7]

இயற்கை வளங்கள்

அலையன் குளம், ஆனைக் குளம், வண்ணான் குளம், வம்மிக் கேணி, திருநீற்றுக்கேணி, துரும்பன் கேணி, தோணாபால் வாத்த ஓடை ஆகியன இவ்வூருக்கு நீர்வளம் சேர்க்கின்றன.

தீர்வைத்துறை, காட்டுமாவடித்துறை, ஆலடித்துறை, காங்கேயன்ஒடைத்துறை என மட்டக்களப்பு வாவியின் போக்குவரத்துக்காகவும் தற்போது மீன்பிடிக்காகவும் பயன்படுத்தப்படும் துறைகள் உள்ளன.

சாதிய அமைப்பு

ஆரையம்பதியின் வரலாற்று நோக்கிலான சாதிய அடக்கமைவு அதன் தெரிப்பெயர்களில் வெளிப்படுகின்றது. முகத்துவாரத்தெரு, நடுத்தெரு, ஆரைப்பற்றைதெரு என குருகுலத்தோரும், வேளாளர் தெரு, சாண்டார் (பணிக்கர்) தெரு, செங்குந்தர் தெரு, வண்ணார் தெரு, பறையர் தெரு, பொற்கொல்லர் தெரு, என தெருப் பெயர்கள் வெவ்வேறு சாதிய சமூங்களின் பெயர்களைச் சார்ந்து உள்ளன.[8]

அமைப்புகள்

கல்வி நிறுவனங்கள்

  • இராம கிருஷணமிசன் மகா வித்தியாலயம்
  • ஆரையம்பதி மகா வித்தியாலயம்
  • நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயம்
  • சுப்பிரமணியம் வித்தியாலயம்
  • சிவமணி வித்தியாலயம்
  • நவரெட்ணராஜா வித்தியாலயம்
  • சிவா வித்தியாலயம்
  • கோயில்குளம் விநாயகர் வித்தியாலயம்

அரச நிறுவனங்கள்

  • உயர் தொழில்நுட்ப நிறுவனம்
  • மாவட்ட வைத்தியசாலை
  • மண்முனைப்பற்று பிரதேசசெயலகம்
  • மண்முனைப்பற்று பிரதேசசபை
  • பிரதேச அஞ்சல் அலுவலகம்
  • மண்முனைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்
  • கிழக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களத்தின் பயிற்சி வளாகம்
  • பிரதேச கமநல சேவை நிலையம்
  • பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்
  • பொது நுாலகம்
  • கோட்டக் கல்வி அலுவலகம்

கோயில்கள்

  • கந்தசுவாமி கோயில்
  • கண்ணகையம்மன் கோயில்
  • பரமநயினார் கோயில்
  • திருநீலகண்ட விநாயகர் கோயில்
  • செல்வாநகர் சிவனேஸ்வரர் கோயில்
  • ஆலயடி ஆதிவைரவா் கோயில்
  • வீரமாகாளியம்மன் கோயில்
  • பேச்சியம்மன் கோயில்
  • வம்மிக்கேணி முத்து மாரியம்மன் கோயில்
  • செல்வாநாகர் பத்திரகாளியம்மன் கோயில்
  • வடபத்திர காளியம்மன் கோயில்
  • செங்குந்தர்வீதி மாரியம்மன் கோயில்
  • திருநீற்றுக்கேணி பிள்ளையார் கோயில்
  • ஆலடி பிள்ளையார் கோயில்
  • சமாதுப்பிள்ளையார் கோயில்
  • எள்ளுச்சேனை பிள்ளையார் கோயில்
  • வேளாளர் தெரு சித்திரவேலாயுதர் கோயில்
  • கல்வீட்டுதிண்ணையடி பரமநயினார் கோயில்
  • கோயில்குளம் நாகதம்பிரான் கோயில்

தேவாலயங்கள்

  • அன்னை திரேசாள் தேவாலயம்
  • ஆரையம்பதி மெதடிஸ்த தேவாலயம்

இதர குறிப்புகள்

கொட்டுக்கிணறு

அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர் குழல்போன்ற மரக்கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள் கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் ‘கொட்டுக்குத்தான்’ இருக்கும்.

மேற்கோள்கள்

  1. ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமிகோயில் புனரவர்த்தன மகா கும்பாபிஷேக மலர் 1999 (பக் - 12)
  2. க.இராஜரெத்தினம், (1999), ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வரலாறு, "ஆரையூர்க் கந்தன்", ப.31
  3. ஆரையம்பதி மண் - 2014 (பக்-13)
  4. தமிழ் ஆவண மகாநாடு 2013 - ஆரையம்பதி தமிழ்ச்சமூகம் (பக் - 271)
  5. ஆரையம்பதி மண் - 2014 (பக் - 05)
  6. மண்முனை பிரதேச சாகித்திய விழா சிறப்பு மலர், (1997), பக். 37
  7. சிகரம், (2016), பக். 46)
  8. ஆரையூர் கண்ணகை (வரலாறும் வழிபாடும்) - 2016, தொகுப்பு - க.சபாரெத்தினம் - சொ.பிரசாத், வெளியீடு - மறுகா, ஆரையம்பதி, பக். 24)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.