பறையர்

பறையர்அல்லது பெறவா என்போர் கேரளா, தமிழ் நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் ஒரு சமூகக் குழுவாகும்.

பறையர்
மொத்த மக்கள்தொகை
(11246000[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, தென் ஆப்பிரிக்கா
மொழி(கள்)
தமிழ், மலையாளம்
சமயங்கள்
இந்து சமயம்,கிறித்தவம்,பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்

தொடக்கம்

பறையர், (அ)மறையர், சாம்பவர் என்பவர்கள் இந்தியாவின் ஒரு இன அல்லது சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ் நாடு, கேரளா மற்றும் ஸ்ரீ லங்கா நாட்டில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.

2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது. தமிழ் நாடு அரசின் பட்டியல் இனத்தவருள் ஆதி திராவிடர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

இச்சமூகக்குழுவினது பெயர் "பறை" என்பதில் இருந்து தோன்றியதாகும். பறை என்ற தமிழ்வார்த்தைக்கு சொல் என்ற பொருளாகும். இன்னமும் கூட கேரளாவில் பறை என்பது சொல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது. மறை ஓதிய(பறைந்த)வர்கள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. மேலும் பௌத்த தம்மத்தை பறைந்தவர்கள் என்பதாலே இப்பெயர் ஏற்பட்டது என்று அயோத்தி தாச பண்டிதர் குறிப்பிடுகின்றார். பெறவா என்பது இலங்கையின் பௌத்த மக்களிடையான பறையர் மக்கள்குழுவுக்கு இணையானவர்களாவர்.

வரலாறு

சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், அதுமட்டுமின்றி பிற (சோழ, பல்லவ) மன்னர்களால் கொடுமை செய்யப்பட்டனர் என ஏ.பி. வள்ளிநாயகம் தன் ஆய்வின் மூலம் எடுத்துரைக்கிறார். பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர்.

கிளய்டன் அவர்கள் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் "பறையர்" என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் பழங்குடியின மக்களைப் ("Eyivs") பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார். ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.

தஞ்சை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள சிவன் விழாக்களில் பறையர்கள் வெண்குடை ஏந்தி சிவனுக்கு முன்பு செல்லும் மரபு வழி உரிமை உடையவர் ஆவர்.[2]

பறையர் குடியிருப்பு

ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதிமங்கலத்து தென்பிடாகை மணற்க்குடியிலிருக்கும் ஊர்ப்பறையன் மண்டை சோமனான ஏழிசைமோகப்படைச்சன் என்பவர் கோவில் ஒன்றிற்க்கு கொடை அளித்ததாக தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண் 794 கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் பறையர்கள் சதுர்வேதி மங்கலங்களில் குடியிருந்ததை அறிய முடிகின்றது.

பறையர் குடியிருப்பு, சேரி என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. பொருளாதாரத்தில் கடுமையாக பின்தங்கிய பறையர்கள் வசிக்கும் சேரிகள் இன்று அவர்களின் பொருளாதார சூழலை பிரதிபலிப்பதால் இன்றை சூழலில் அச்சேரிகள் அழுக்கான என்ற பொருளுடைய Slum என்ற ஆங்கிலச்சொல்லோடு பொருத்திப் பார்க்கப்படுகின்றது. ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும். இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.[3] சோழர் கால கல்வெட்டானது பறைச்சேரியும் கம்மாணங்சேரியும் ஊரின் நடுபட்ட குளமும் புலத்திற்குளமுங்கரையும் இவ்வூர்திருவடிகள் என்று குறிப்பிடுகின்றது.[4] இதன் மூலம் கம்மாளர்கள் வாழ்ந்த கம்மாளஞ்சேரியும் பறைச்சேரியும் அருகருகே இருந்தன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆக சேரி என்பது தமிழர்கள் வாழும் பகுதிக்கான ஒரு பெயரேயாகும்.

பறையர் அரசுகள்

வரலாற்றில் சிற்றரசர்களாக பறையர்கள் இருந்துள்ளனர்.

பறையூர்

இன்றைய கேரளாவில் உள்ள பறூர் என்றழைக்கப்படும் பறையூரில் வசித்த மக்கள் பறையர்கள் எனவும் அவர்களின் அரசன் தாந்திரீகத்தை நன்குணர்தவர் என்றும், நம்பூதிரிகள் ஒரு போட்டியில் பறையூர் தலைவனை வீழ்த்தி பறையூருக்கு அரசன் ஆனதாக நாட்டார் கதை வழக்கொன்று உள்ளது.[5] சிலப்பதிகாரத்திலும் 'பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்'[6] என்ற பாடல் வரி வருகின்றது, அந்த சாக்கையன் கூத்து இன்று வரை கேரளாவில் பறையன் துள்ளல் என்ற பெயரில் ஆடப்பட்டு வருகின்றது.

வில்லிகுலப் பறையர்கள்

இலங்கையில் இருந்த அடங்காப்பதத்தில் நான்கு அரசுகள் இருந்தன அதில் கணுக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் வில்லிகுலப்பறையர்கள் எனவும், இவர்கள் ஆதிக்குடிகள் எனவும், யாருக்கும் அடங்காதவர்களாக இருந்ததனால் அந்த பகுதிக்கு அடங்காப்பதம் என்று பெயர் வந்ததாகவும் வையாப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களை ஒடுக்க திடவீரசிங்கன் என்ற வன்னியர் வந்ததாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.[7]

நந்தன் என்ற சிற்றரசன்

சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பட்டுச்சுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே இருந்த சோழ மாளிகையைத் தலைமையிடமாகக் கொண்டு நந்தன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். பிறகு மறவர்களால் நந்தனும் அவனது ஆட்சியும் அழிக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டையும் அழிக்கப்பட்டது.[8]

தொழில்

கோலியர் (நெசவு தொழில் )

பறையர்களில் நெசவு தொழில் செய்தவர்கள் கோலியர்கள் ஆவார்கள்.[9] இவர்கள் நெசவுப்பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கையில் சாலியர் என்று அறியப்படுகின்றனர்.[10]

மன்றாடி

பறையர்களைப்பற்றிய நான்கு கல்வெட்டுக்கள் அவர்கள் சூத்திர ராயர்கள் என்று குறிப்பிடுகின்றது. அவற்றில் ஒன்று "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ்நம்பி" என்று குறிப்பிடுகின்றது. ஆக இக்கல்வெட்டுக்களின் மூலம் பரையர்கள் பிரம்ம சூத்திரம் உட்பட சூத்திரங்கள் அறிந்த சூத்திர ராயர்கள்[11] என்பதும் மேலும் இவர்கள் பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.[12][13][14][15]

மருத்துவம்

தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் கிளைட்டன் என்பவர் பிராமண பெண் ஒருவர் பறையரின் கோவிலுக்கு சென்று தன் பிள்ளையை குணப்படுத்த வேண்டியதாகவும் அங்கு பறையன் மந்திரங்கள் சொல்லியதாகவும் குறிப்பிடுகின்றார்.[16] அயோத்தி தாச பண்டிதர் போன்றோர் சித்த மருத்துவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதது. இதன் மூலம் பறையர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

காவல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.[17]

சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டளை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது.[18] இதன் மூலம் பரையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது.

வெள்ளாளன்

"வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்"[19] என்றும், "வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" [20] என்றும், "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்"[21] என்றும் கோயம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மீன் வியாபாரம்

மடிவலை, வாளை வலை, சாளை வலை, சணவலை, போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு பணம் என்றும், அம்மீனை வாங்கி விற்க்கும் வியாபாரியான சாம்பானுக்கு ஒரு பணம் என்றும் வரி வசூலிக்கப்படுவதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனில் 15ஆம் நூற்றாண்டில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை விற்பனை செய்யும் வியாபாரியாக கன்னியாகுமரி சாம்பவர்கள் இருந்துள்ளனர்.[22]

பறையர் உட்பிரிவுகள்

1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "CENSUS OF BRITISH INDIA" என்ற நூலில் "வேட்டுவ பறையன்", "திகிழு பறையன்", "மொகச பறையன்", "குடிமி பறையன்", "அத்வைத பறையன்" உட்பட "தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய" 84 பறையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது.

  1. அச்சக்காசினியூர் பறையன்
  2. அத்வைத பறையன்
  3. அய்யா பறையன்
  4. அழக காட்டு பறையன்
  5. அம்மக்கார பறையன்
  6. அங்கல பறையன்
  7. அங்கையன் பறையன்
  8. பூபு பறையன்
  9. சுண்ணாம்பு பறையன்
  10. தேசாதி பறையன்
  11. இசை பறையன்
  12. ககிமல பறையன்
  13. களத்து பறையன்
  14. கிழகத்து பறையன்
  15. கிழக்கத்தி பறையன்
  16. சோழிய பறையன்
  17. கீர்த்திர பறையன்
  18. கொடக பறையன்
  19. கெங்க பறையன்
  20. கொடிக்கார பறையன்
  21. கொரச பறையன்
  22. குடிகட்டு பறையன்
  23. குடிமி பறையன்
  24. குளத்தூர் பறையன்
  25. மகு மடி பறையன்
  26. மா பறையன்
  27. மரவேதி பறையன்
  28. மிங்க பறையன்
  29. மொகச பறையன்
  30. முங்கநாட்டு பறையன்
  31. நர்மயக்க பறையன்
  32. நெசவுக்கார பறையன்
  33. பச்சவன் பறையன்
  34. பஞ்சி பறையன்
  35. பரமலை பறையன்
  36. பறையன்
  37. பறையக்காரன்
  38. பறையாண்டி
  39. பசதவை பறையன்
  40. பெருசிக பறையன்
  41. பொய்கார பறையன்
  42. பொறக பறையன்
  43. பொக்கி பறையன் கூலார்
  44. பிரட்டுக்கார பறையன்
  45. ரெகு பறையன்
  46. சம்மல பறையன்
  47. சர்க்கார் பறையன்
  48. செம்மண் பறையன்
  49. சங்கூதி பறையன்
  50. சேரி பறையன்
  51. சிதிகரி பறையன்
  52. சுடு பறையன்
  53. தங்கமன் கோல பறையன்
  54. தங்கம் பறையன்
  55. தங்கினிபத்த பறையன்
  56. தட்டுகட்டு பறையன்
  57. தென்கலார் பறையன்
  58. தெவசி பறையன்
  59. தங்கலால பறையன்
  60. தரமாகிப் பறையன்
  61. தாயம்பட்டு பறையன்
  62. தீயன் பறையன்
  63. தோப்பறையன்
  64. தொப்பக்குளம் பறையன்
  65. தொவந்தி பறையன்
  66. திகிழு பறையன்
  67. உழு பறையன்
  68. வைப்பிலி பறையன்
  69. வலகரதி பறையன்
  70. உறுமிக்கார பறையன்
  71. உருயாதிததம் பறையன்
  72. வலங்கநாட்டு பறையன்
  73. வானு பறையன்
  74. வேட்டுவ பறையன்
  75. விலழ பறையன்
  76. உடும பறையன்

இவற்றில் சோழிய பறையன்(சோழப்பறையர்) கோழிப்பறையன் என்று திரிந்து இன்று காணாமல் போனது இன்றும் பட்டுக்கோட்டை ஐ சுற்றி உள்ள பகுதிகளில் வழக்கில் உள்ளது

தெலுங்கு பேசிய பறையர்கள்

  1. முகத பறையன்
  2. புள்ளி பறையன்
  3. வடுக பறையன்

மலையாளம் பேசிய பறையர்கள்

  1. ஏட்டு பறையன்
  2. மதராஸி பறையன்
  3. முறம்குத்தி பறையன்
  4. பறையாண்டி பண்டாரம்
  5. வர பறையன்

மேற்கோள்கள்

  1. (pdf)Indian Census figures
  2. சீனிவாச ஐயங்கார் 1914-ல் எழுதிய "Tamil studies, or essays on the history of the Tamil people, language, religion and literature" என்ற நூலின் பக்கம் 81.
  3. உடையார்குடிக் கல்வெட்டு – ஒரு மீள்பார்வை/முனைவர்.குடவாயில் பாலசுப்ரமணியன்
  4. தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 2 பகுதி 1 கல்வெட்டு எண் 5 (பக்கம் 56, 66)
  5. A Social History of India Page 325
  6. சிலப்பதிகாரம் நடுகல் காதை வரி 76-77
  7. வையாபாடல்
  8. இடங்கை, வலங்கையர் வரலாறு - பக்.51-52 ( வேதநாயக சாஸ்திரி அவர்கள் கி.பி.1795-ல் எழுதிய நூல்)
  9. South Indian Caste and Tribes Vol 3 Page 302
  10. Census Report of 1830 Based on Castes of Jaffna
  11. சூத்திரன் என்பதற்கு திட்பநுட்பம் அமைந்த மந்திராதிகாரமுடையவன் என்பது பொருளாம்
  12. "மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.241), (1203–1204 A.D).
  13. "மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.243), (1202–1203 A.D).
  14. "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி" (S.I.I. Vol. XXVI, No.239), (12th – 13th century A.D).
  15. "பறையனான சூத்திரராயன்" (S.I.I. Vol. XXVI, No.240), (12th – 13th century A.D).
  16. தென் இந்திய குலங்களும் குடிகளும் தொகுதி 6 பக்கம் 84
  17. Sankarankovil Varalaaru
  18. செங்கம் நடுகற்க்கள், எண் 1971/96
  19. கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 144/2004
  20. கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 146/2004
  21. கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 94/2004
  22. கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுக்கள் எண் 487/2004

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.