ஆணி மாண்டவ்யர்

ஆணி மாண்டவ்யர் (Animandavya) முனிவர் தனது ஆசிரமத்திற்கு அருகில் உள்ள மரத்தினடியில் அமர்ந்து பேசா நோன்பு (மௌன விரதம்) மேற்கொண்டிருந்த நேரத்தில், காவலர்களால் துரத்தப்பட்ட திருடர்கள், தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை மாண்டவ்யரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்து, தாங்களும் அங்கேயே மறைந்து கொண்டனர். காவலர்கள் ஆசிரமத்தை அடைந்து, திருடர்களைப் பற்றியும், அவர்களின் கொள்ளைப் பொருட்களைப் பற்றியும் மாண்டவியரிடம் கேட்டனர்.

எமதர்மராஜனும் ஆணி மாண்டவிய முனிவரும்

மாண்டவ்யர் மௌன விரதத்தில் இருந்ததால், காவலர்களுக்கு மறுமொழி சொல்லவில்லை. எனவே காவலர்கள் ஆசிரமத்தில் நுழைந்து அங்கு மறைந்திருந்த திருடர்களையும், கொள்ளையடித்த பொருட்களையும், முனிவரையும் இழுத்துக் கொண்டுபோய் மன்னன் முன் நிறுத்தினர். மன்னனின் ஆணைப்படி, திருடர்களுடன் சேர்த்து முனிவரும் கழு மரத்தில் ஏற்றப்பட்டார். முனிவர் கழுவிலேற்றப்பட்ட பிறகும், சாகாமல் உயிருடன் இருப்பதைக் காவலர்கள் மூலம் அறிந்த மன்னவன் மாண்டவிய முனிவரிடம் மன்னிப்பு கோரினார்.

மன்னனின் ஆணைப்படி, மாண்டவ்யரின உடலுக்கு வெளியே உள்ள கழு மரத்தின் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்தனர். கழுவின் ஒரு பகுதியை உடலுடன் தாங்கிக் கொண்டே பயணித்த மாண்டவிய முனிவர் ஆணி மாண்டவ்யர் என்ற பெயரால் அறியப்பட்டார்.

பின்னர் ஆணி மாண்டவியர், எமனிடம், ஒரு தவறும் செய்யாத தன்னைக் கழுவில் ஏற்றித் தண்டனை அடைய காரணம் கேட்டார். அதற்கு எமன், முற்பிறவியில் நீங்கள் சிறுவனாக இருந்த போது, புல்லைக் கொண்டு ஒரு பூச்சியின் பின்புறத்தைத் துளைத்த செயலே, இப்பிறவியில் கழுவில் ஏற்றப்படக் காரணமாயிற்று என்றார்.

குழந்தைகள் செய்யும் தவறுகளைச், சாத்திரங்கள் பாவமாக கொள்ளாது என்று கூறுகையில், சிறு குற்றத்திற்காக என்னைக் கொடுமையாக தண்டித்தபடியால், மனிதர்களில் கீழ்க் குடியில் பிறப்பாய் என எமனுக்கு சாபமிட்டார் ஆணி மாண்டவ்யர். எமனும் அடுத்த பிறவியில் விதுரனாகப் பிறந்தார்.[1]

மரபுரிமை பேறுகள்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் ஆணி மாண்டவ்யர் பெயரால் மாண்டவி எனும் நகரம் கிபி 1580ல் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

  1. http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section108.html#sthash.DFDpoKUt.dpuf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.