திருவையாறு ஐயாறப்பர் கோயில்

திருவையாறு ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்[1] . இக் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தரும சம்வர்த்தினி.

திருவையாறு ஐயாறப்பர் கோயில்
பெயர்
பெயர்:திருவையாறு ஐயாறப்பர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவையாறு
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐயாறப்பர்
தாயார்:தரும சம்வர்த்தினி
தீர்த்தம்:சூரிய புஷ்கரணி தீர்த்தம்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்
ஏழூர் விழா நிறைவாக பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

சப்தஸ்தானம்

சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் பேரருட்காட்சியால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றார். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதனாம் தகுதியும் அருளினார். அத்துடன் நில்லாது, ஐயாற்றெம்பெருமான் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தே திருமணம் செய்துவைத்தார். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.[2]

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது.[3] திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன.[4]

கோயில் தேர்

350 ஆண்டுகளுக்கு முன்னர் நாயக்கர் காலத்தில் செய்யப்பட்ட தேர் சேதமடைந்துவிட்டதால், புதிய தேர் செய்யும் பணி சூன் 2017இல் தொடங்கப்பட்டது. 5 படி நிலைகளில் 18 முக்கால் அடி உயரத்தில் 12.9 அடி அகலத்தில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. 60 டன் இலுப்பை மரங்கள், 2 டன் தேக்கு மரங்கள், 2 1/2 டன் இரும்புபொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இத்தேரில் விநாயகர், முருகன், சுவாமி அம்பாள், சண்டிகேசுவரர், 63 நாயன்மார்கள், நான்கு ஆழ்வார்கள், அப்பர் திருக்கயிலாயக் காட்சி, தசாவதாரக்காட்சி, சப்தஸ்தான திருவிழா காட்சி, மீனாட்சி திருக்கல்யாணக்காட்சி, சிவபுராணக்காட்சி உள்ளிட்ட 750 சிற்பங்கள் உள்ளன. தேரின் வெள்ளோட்டம் 11 சூலை 2018இல் நடைபெறுகிறது.[5]

சப்தஸ்தானங்கள்
கோயில் ஊர் மாவட்டம்
ஐயாறப்பர் கோயில் திருவையாறு தஞ்சாவூர்
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருப்பழனம் தஞ்சாவூர்
சோற்றுத்துறை நாதர் கோயில் திருச்சோற்றுத்துறை தஞ்சாவூர்
திருவேதிகுடி திருவேதிகுடி தஞ்சாவூர்
பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் திருக்கண்டியூர் தஞ்சாவூர்
புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்பூந்துருத்தி தஞ்சாவூர்
நெய்யாடியப்பர் கோயில் தில்லைஸ்தானம் தஞ்சாவூர்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Census of India, 1961, Volume 7; Volume 9
  2. புலவர் கோ.சுப்பிரமணியனார் & புலவர் பத்மா சுப்பிரமணியம், திருவையாறு ஏழுர்த் தலங்கள் வரலாறு (ஒரு திறனாய்வு), ஐயாறப்பரக வெளியீடு, திருவையாறு 613 204, 1998
  3. Tourist Guide to Tamil Nadu.
  4. http://www.hindu.com/2011/04/22/stories/2011042255521400.htm.The Hindu
  5. திருவையாறு ஐயாறப்பர் கோயில் புதிய தேர் ஜுலை 11இல் வெள்ளோட்டம், தினமணி, 4 சூலை 2018

வெளி இணைப்புகள்

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

புகைப்படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.