ஹோய்சாலேஸ்வரர் கோவில்

ஹோய்சலேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயில் கி.பி 1121 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த டெல்லி சுல்தானகப் படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது, இக் கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்னர் துவாரசமுத்திரம் என அழைக்கப்பட்ட ஹளபீடு, பேளூரில் இருந்து 16 கிமீ தொலைவிலும், ஹாசனில் இருந்து 31 கிமீ தொலைவிலும் உள்ளது. மைசூரில் இருந்து இதன் தூரம் 149 கிமீ ஆகும்.[1][2]

ஹளபீட்டில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில்

வரலாறு

ஹோய்சலேஸ்வரர் கோயிலில் காணப்படும் சிவா, பார்வதி சிலை

அக்காலத்தில் போசளப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹோய்சலேஸ்வரன் என அழைக்கப்பட்ட விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னனின் பெயரைத் தழுவியே இக் கோயிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும், இக் கோயில் மன்னனால் அன்றி நகரத்தின் செல்வந்தர்களான குடிமக்களாலேயே கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கேதமல்லன், கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இக் கோயிலின் கட்டுமானப் பணிகள் பேலூரில் கட்டப்பட்டு வந்த வைணவக் கோயிலான சென்னகேசவர் கோயிலுக்குப் போட்டியாகவே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இக் கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக் குளம் ஹோய்சலேஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக் கோயில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகும்.

கட்டிடம்

கோயிலிலுள்ள நவரங்க மண்டபத்துத் தூண்கள்.

இக் கோயில் எளிமையான இரட்டை விமானக் கோயில் ஆகும். ஒரு விமானம் ஹோய்சலேஸ்வரருக்கும், மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் ஜகதி எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோயில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன. இரண்டு மண்டபங்களும் இணைக்கப்பட்டனவாய்ப் பெரிதாகக் காட்சியளிக்கின்றன. தனித்தனியே இரண்டு கோயில்களும் பேலூரில் அமைந்துள்ள சென்னகேசவர் கோயிலிலும் சிறியவை. கருவறைகளில், சிவனைக் குறிக்கும் எளிமையான லிங்க வடிவங்கள் உள்ளன. உட்பகுதியில் கோயிலின் தளவடிவம் எளிமையாகத் தோற்றம் அளித்தாலும், சுவர்களில் உட்பதிந்தும், வெளியே துருத்திக் கொண்டும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள பகுதிகளால் வெளிப்புறம் வேறுபாடாகக் காட்சி தருகின்றது. கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப்போலவும், நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோயில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர (நாள்மீன்) வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இக் கோயில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. ஹளபீட்டில் உள்ள இக் கோயில், இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துகாட்டு எனப்படுகின்றது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Hoysaleswara Temple
  2. Hoysaleswara Temple, Halebidu

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.