லாட்கான் கோயில்

லாட்கான் கோயில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மேலைச் சாளுக்கியர்களுடைய தலைநகரமாக விளங்கிய ஐகோளேயில் உள்ள பழையகால இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக எடுக்கப்பட்டது.[1][2] இக்கோயில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவனால் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][3] இது துர்க்கை கோயிலுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.[1] லாட் கான் என்பவன் சிறிது காலம் தனது இருப்பிடமாகக் கொண்டிருந்ததால், இக்கோயில் அவன் பெயரால் லாட்கான் என அழைக்கப்படுகிறது.[1] ஐகோளேயில் உள்ள மிகப் பழைய கோயில் இதுவே.[4]

லாட்கான் கோயில்
லாட்கான் கோயில்
கர்நாடகாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்:16°1′11.68″N 75°52′52.46″E
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகா
மாவட்டம்:பாகல்கோட்
அமைவு:ஐகோளே
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:5வது நூற்றாண்டு
அமைத்தவர்:சாளுக்கிய வம்சம்

அமைப்பு

ஐகோளே குழுமக் கோயில்களுள் பெரியது இக்கோயிலே. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் கட்டிடம் சதுர வடிவமான தள அமைப்புக்கொண்ட ஒரு பெரிய மண்டபத்தையும் அதற்கு முன்னால் பெரிய மண்டபத்திற்கு வெளியே அதன் கிழக்குச் சுவரோடு ஒட்டியபடி இன்னொரு நீள்சதுர வடிவான சிறிய மண்டபத்தையும் கொண்டுள்ளது. பெரிய மண்டபத்துள் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த இரண்டு சதுர ஒழுங்கில் மொத்தம் 16 தூண்கள் அமைந்துள்ளன. நடுவில் பெரிய நந்தி அமைக்கப்பட்டுள்ளது. பெரிய மண்டபத்தின் கிழக்குப் பக்கம் தவிர்ந்த ஏனைய மூன்று பக்கங்களிலும் கட்டுமானச் சுவர்கள் உள்ளன. முன் மண்டபத்தில் சுற்றிலும் சுவர்கள் இல்லை. இது ஒரு திறந்த மண்டபம். இம்மண்டபத்தின் மூன்று பக்க விளிம்போரமாக மொத்தம் எட்டுத் தூண்களும், உட்புறம் நான்கு தூண்களும் உள்ளன. வெளியில் இருந்து முன் மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக இம்மண்டபத்துக்குள் நுழைய முடியும். இம்மண்டபத்திலிருந்து பெரிய மண்டபத்துக்குள் செல்ல முடியும்.

வழமையான இந்துக் கோயில்களில் இருப்பதுபோல இக்கோயிலில் தனியான கருவறையோ, கருவறைக்கும் மைய மண்டபத்துக்கு இடையில் அமையும் இடைநாழி எனப்படும் சிறிய இணைப்புப் போன்ற பகுதியோ இல்லை. மாறாக, கருவறை பெரிய மண்டபத்துக்கு உள்ளேயே மேற்குப்புறச் சுவரோடு ஒட்டியபடி அமைந்துள்ளது. அத்துடன் இக்கட்டிடத்தில் கோயில் சடங்குகளுக்கான எவ்வித சிறப்பு அமைப்புக்களும் இல்லை என்பதால், இது முதலில் வேறு தேவைகளுக்காகக் கட்டப்பட்டுப் பின்னர் கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அப்போது கருவறை பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.