சோப்புக்கல்

சோப்புக்கல் என்பது ஒரு உருமாறிய பாறை ஆகும். மிகவும் மென்மையான இது, கனிம டால்க் (talc) இனால் ஆனது, அதிக அளவில் மக்னீசியத்தைக் கொண்டுள்ளது. இது இயங்குவெப்ப வளருருமாற்றத்தினால் (dynamothermal metamorphism) உருவாக்கப்படுகின்றது. இக் கல் நீண்டகாலமாகவே சிற்பங்களைச் செதுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சோப்புக்கல் பெரும்பாலும் "டால்க்" என்றழைக்கப்படும் மக்னீசியம் செறிந்துள்ள வெண்ணிறக் கனிமத்தால் ஆனது. படத்தில் "டால்க்" கட்டி ஒன்று காட்டப்பட்டுள்ளது. "டால்க்" என்பது வேதியியலில் நீர்சேர்ம மக்னீசிய சிலிக்கேட்டு ஆகும். இதன் வேதியியல் வாய்பாடு: H2Mg3(SiO3)4 அல்லது Mg3Si4O10(OH)2.

இயற்பியல் இயல்புகளும் பயன்களும்

ஒப்பீட்டளவில் இது மிகவும் மென்மையான பொருள் ஆகும். மோசின் கடினத்தன்மை அளவீட்டில், மிகக் குறைவான அளவீடான 1 ஐக் கொண்டுள்ள டால்க் என்னும் பொருளைப் பெருமளவில் கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும். தொடும்போது சவர்க்காரம் (சோப்பு) போன்ற வளவளப்பான தன்மையைக் கொண்டுள்ளதால் இதற்கு சோப்புக்கல் என்னும் பெயர் ஏற்பட்டது. இது நுணுக்கமான செதுக்கு வேலைகளைச் செய்வதற்கு இடங்கொடுக்கும் என்பதால் பலவிதமான சிற்பவேலைகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம். சமையலறைகளில் உள்ள வேலை மேசைகள், கழுவு தொட்டிகள் (sinks) என்பனவும் சோப்புக்கற்களைக் கொண்டு செய்யப்படுவது உண்டு. இது வேதியியல் அடிப்படையில் உறுதியான ஒரு பொருளாதலால் வேதியியல் ஆய்வுகூடங்களின் மேசைகளின் மேற்பரப்புக்கள் செய்வதற்கு இக் கல் விரும்பப்படுகிறது.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.