மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று மும்மணிக்கோவை.
இதன் ஆசிரியர் அதிராவடிகள் (அதிரா அடிகள்); காலம் எட்டாம் நூற்றாண்டு
அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறித் தொடர்ந்துவரும் 30 பாடல்கள் கொண்ட நூல் இது. 24 முதல் 30 வரை இருந்த பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை.
பாடல்கள்
- அகவல் (பாடல் எண் 22)
- சிரமே, விசும்பு போத உயரி இருண்டு அசும்பு பொழியும்மே
- கரமே, வரைத் திரள் முரணிய விரைத்து விழும்மே
- புயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே
- அடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே
- ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
- நெஞ்சகத்து ஒடுங்கும் ஓம் நெடும்பனைச் சூரே. [1]
- அகவல் (பாடல் எண் 4)
- பேதுறு தகையம் அல்லது தீதுறச்
- செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொங்கல் நாப்பண்
- புக்கவன் இரும்பொறித் தடக்கையும்
- முரணிய பெருந்தோள்
- கொட்ட நாவி தேவிதன்
- மட்டுகு தெரியல் அடி மணந்தனமே.[2]
- வெண்பா (பாடல் 17)
- அலங்கல் மணிக்கனகம் உந்தி அருவி
- விலங்கல் மிசைஇழிவ(து) ஒக்கும் – பலன்கனிகள்
- உண்டளைந்த கோன்மகுடத்து ஒண்கடுக்கைத் தா(து)அளைந்து
- வண்(டு)அணைந்து சோரும் மதம்.[3]
- கட்டளைக்கலித்துறை (பாடல் 12)
- காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
- மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
- பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
- மேலது வானது நான்மறைக் கின்ற விடுசுடர்க்கே.[4]
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- வானளாவிய சிரத்தில் மதம் ஒழுகும். கையில் மலைகள் நொருங்கும். தோளில் திசைகள் கிழியும். அடியெடுத்தால் உலகம் அதிரும். ஆயினும் அறிவு தரும் ஒளிப்பிழம்பாக ‘ஓம்’ ஆகி நெஞ்சுக்குள்ளே ஒடுங்கும்.
- தலைமுடி சிவப்பு. காதுத்தொங்கல் கருநிறம். இவற்றுக்கு நடுவில் பெரும் புள்ளிகள் கொண்டு வளைந்திருக்கும் கை. பருத்த தோள். தாமரைப் பூவின் நடுவிலிருக்கும் தகட்டுக்கொட்டை போல் கொட்டையான தொப்புள். இங்குள்ள மாலை தாய் தந்தது. இப்படி இருப்பவன் மூத்தபிள்ளையார். அவனது அடியை மணந்து யாம் மணக்கின்றோம்.
- மார்பில் ஆனை மதமும், தலையில் கொன்றைமலர் மதமும் (தேனும்) ஒழுகும் கோன் மூத்தபிள்ளையார், - பொன்மணிமாலை தொங்கும் உந்தியில் மலையில் அருவி ஒழுகுவது போல மதம் ஒழுகும். வல்லமைப்பலன் தரும் கனிகளை உண்ட கோன், அவன். தலையிலுள்ள கடுக்கை (கொன்றை) மாலையில் வண்டு மொய்த்து மதம்(தேன்) ஒழுகும்.
- நான்மறை விடுக்கும் சுடருக்கு (மூத்தபிள்ளையாருக்கு) கால், கை, கண் ஆகியவற்றில் தீ. மேலும் கீழும் மழைபோல் மதநீர். அவன் பொற்பது (விரும்புவது) பால், தேன். மேலே மூன்று மொழிக்காப்புகள்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.