நெஞ்சு விடு தூது

நெஞ்சு விடு தூது, கி.பி. 1311-ம் ஆண்டு, உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் செய்யுள்கள் கலிவெண்பாவில் பாடப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர், தனது ஞானாசிரியனைத் தலைவனாக நினைத்துத் தன்னைக் காதலியாகப் பாவித்துத் தனது மனதைத் தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வரத் தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலில் இறைவனைத் தலைவனாகப் பாவித்து எழுதப்பட்டுள்ளதால், இறைவனது பெருமைகளும், சைவ சித்தாந்த கொள்கைகளும் கூறப்படுகின்றன. அவருடைய இயல்பு, பசு, பாச இயல்பு ஆகியவை பற்றி எழுதப்பட்டுள்ளது.

பகுதிகள்

மூன்று பகுதிகளாகக் காணத்தக்க இந் நூலின்

  • முதற்பகுதியில், இறைவன் இயல்பு, உயிரின் இயல்பு, தளைகளின் இயல்பு எனச் சைவ சித்தாந்தத்தின் உண்மைகளான இறைவன், உயிர், மலங்கள் ஆகியன பற்றிக் கூறப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பகுதியில் இறைவனுடைய நிலையை மலை, நாடு, ஆறு, ஊர், தார், குதிரை, யானை, கொடி, முரசு, ஆணை எனும் தசாங்கங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
  • மூன்றாம் பகுதியில் இறைவனது பெருமை, ஞானாசாரியன், குரு உபதேசம், அடையும் இடம் என்பவை தொடர்பில், பிற சமயங்களில் மயங்காது, சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நூலின் சிறப்பு

இந்நூலின் இறுதி அங்கமாகத் தனி வெண்பா ஒன்றினை முழுக்கருத்தையும் விளக்கும் வகையில் நூலாசிரியர் அமைத்திருக்கின்றார்.

உசாத்துணைகள்

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • உமாபதி சிவாச்சாரியார், நெஞ்சுவிடு தூது, மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.