பரதநாட்டியம்

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம்ச் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[1] பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

பரதநாட்டியம்
பரதநாட்டியம் ஆடும் பெண்கள்
வகை[Indian classical dance]
மூலம்தமிழ்நாடு, இந்தியா
பரதநாட்டியம்
உருப்படிகள்
நடனத்தின் இலட்சணங்கள்நடனத்தின் உட்பிரிவுகள்
உருப்படிகள்
அலாரிப்புஜதீசுவரம்
சப்தம்வர்ணம்
பதம்தில்லானா
விருத்தம்மங்களம்
நடனத்தின் இலட்சணங்கள்
பாவம்
இராகம்தாளம்
நடனத்தின் உட்பிரிவுகள்
நாட்டியம்
நிருத்தம்நிருத்தியம்
பரதநாட்டியப் பெண்
பரத நாட்டியக் கலைஞர் ஒருவரின் நடனத் தோற்றம்

இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.

உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார் லக்ஷ்மணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

ஆடல் முறைகள்

பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை:

  1. நிருத்தம்
  2. நிருத்தியம்
  3. நாட்டியம்

ஆகியவையாகும்.

அபிநயம்

அபிநயம் என்பது கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த உதவுவது. அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை

  1. ஆகார்ய அபிநயம்
  2. வாசிக அபிநயம்
  3. ஆங்கிக அபிநயம்
  4. சாத்விக அபிநயம்

என்பனவாகும்.

பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர்,

"கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல"
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர".[2]

எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிக அபிநயத்தில் அங்கம்,உபாங்கம்,பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர்.

அங்கம்

தலை,கைகள்,மார்பு,பக்கங்கள்,இடை,பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும்.சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர்.

பிரத்தியாங்கம்

புஜங்கள்,முன் கைகள்,முதுகு,வயிறு,தொடைகள்,முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர்.

உபாங்கம்

உபாங்கம் என்பது கண்,விழி,புருவம்,கன்னம்,மூக்கு,தாடை,பல்,நாக்கு,உதடு,முகவாய் ஆகியனவாகும்.

சாத்விக அபிநயம்

உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும்.எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.

நாட்டிய உருப்படிகள்

பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் (items) உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும்.பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர்.முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள்

  • அலாரிப்பு
  • ஜதிசுரம்
  • சப்தம்
  • வர்ணம்
  • பதம்
  • தில்லானா
  • விருத்தம்
  • மங்களம்

என்பவையாகும்.

மேற்கோளும் குறிப்புகளும்

  1. ஞானாம்பிகை குலேந்திரன். "பரதநாட்டியம்". பார்த்த நாள் அக்டோபர் 30, 2012.
  2. கம்பராமாயணம்,மிதிலைக் காட்சிப் படலம்,எண் : 572

சரண கமலம் (தெலுங்கு) சாகர சங்கமம் தெலுங்கு== திரைப்படங்களில் ==

  1. தில்லானா மோகனாம்பாள்
  2. மணிச்சித்ரதாழ்
  3. சந்திரமுகி (திரைப்படம்)

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.