பணகுடி

பணகுடி (ஆங்கிலம்:Panagudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் ஓடு மற்றும் செங்கல் தயாரித்தல் முக்கிய தொழிலாக உள்ளது.

பணகுடி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் ராதாபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

29,895 (2011)

610/km2 (1,580/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 49 சதுர கிலோமீட்டர்கள் (19 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/panagudi

இவ்வூரில் சிறப்பு மிக்க பணகுடி சாஸ்தா கோயில், இராமலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் மற்றும் புனித சூசையப்பர் திருத்தலமும் உள்ளன.

அமைவிடம்

மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், கன்னியாகுமரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலிக்கு தெற்கே 52 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது இராதாபுரத்திலிருந்து 26 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

49 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 166 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7733 வீடுகளும், 29895 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

பெயர்க் காரணம்

பணகுடி என்ற சொல்லுக்கு வரலாற்று ஆசிரியர்கள் பல கருத்துக்களை கூறுகின்றனர். பணகுடியிலும் அதன் சுற்று புறங்களிலும் ‘பாணர்கள்’ என்ற தாழ்த்தப்பட்ட இனமக்கள் அதிகமாக வாழ்ந்த காரணத்தால் இவ்வூர் “பாணர்குடி” என்று அழைக்கப்பட்டது. பின்னர் “பணகுடி” என்றாயிற்று என்பார்கள். இன்னொரு சாரார் பனைமரக்காடுகள் அதிகமாக இருந்த காரணத்தால் பனைத்தொழில் இப்பகுதியில் சிறந்து விளங்கியது என்றும் அதனால் ‘பனைக்குடி’ என்று அழைக்கப்பட்டு பின்னர் “பணகுடி” என்று மருவியதாகவும் கருதுகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் பணகுடிக்கு வருவதற்கு முன்பு பணகுடி ‘உத்தமபாண்டியபுரம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் பணகுடி என்றாயிற்று. பணகுடியை முரத்த நாடு என்றும் அழைப்பார்கள். இச்செய்தி சுசீந்திரம் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது.

பணகுடி மக்கள்

பணகுடியில் இந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற மதத்தை சார்ந்த, வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கால நிலை

பணகுடியில் மார்ச் முதல் மே வரை வெயில் காலம் ஆகும். பணகுடியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் காணப்படுகின்றன.

தொழில் வளம்

பணகுடியில் முக்கியத் தொழில் வேளாண்மை. பணகுடியில் ஆற்று நீர்ப்பாசனம், குளத்து நீர்ப்பாசனம் முறையிலும் விவசாயம் செய்தனர். புதியவகை இயந்திரங்கள் மூலம் கிணற்றில் இருந்து நீரைப் பெறுகின்ற முறையும், ஏற்றம் இறைத்தல் முறையும் பின்பற்றப்படுகிறது. பணகுடியின் வடதிசையில் கரிசல் மண்ணும், தென்திசையில் செம்மண்ணும் காணப்படுகின்றது. பணகுடியில் செம்மண்ணும் களிமண்ணும் அதிகம் கிடைப்பதல் செங்கள் சூளைகளுக்கும், ஓடு தொழிற்சாலைகளுக்கும் முக்கிய மூலப்பொருளாக மண் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு நெற்பயிர் அதிகம் விளைச்சல் ஆகிறது. சூன் முதல் செப்டம்பர் வரையிலும் அக்டோபர் முதல் திசம்பர் வரையிலும் நெல் பயிரிடப்படுகிறது. இதற்கு நீர்பாசனம் அனுமான் நதியில் இருந்தும் குளத்தில் இருந்தும் கிடைக்கிறது. மேலும் இப்பகுதியில் சோளம், கேழ்வரகு, மிளகு, தென்னை, காய்கறி, வாழை, பனை போன்றவையும் பயிரிடப்படுகிறது.

பணகுடியை பொறுத்தவரையில் தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. பணகுடியில் உள்ள அதிகமான பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். மேலும் கூடை முடைதல், சுருட்டு சுற்றுதல், செங்கல் உற்பத்தி செய்தல், ஓடு தொழிற்சாலைகள் போன்ற தொழில்களும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான ஓடுகள் மற்றும் செங்கல் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கும் வெளியூர்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

சிறுதொழில்கள்

சிறுதொழில்களாக தங்க நகை செய்தல், மரச்சாமான்கள் செய்தல், தட்டச்சு மண்பானை செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றது. பணகுடியில் சர்வோதய சங்கம் சிறப்பு பெற்றதாகக் காணப்படுகிறது. இங்கு மரச்சாமன்கள் சோப்பு செருப்பு தேன் ஊதுபத்திகள் தலையனை போன்ற இதர பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

சந்தை வசதி

பணகுடியில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இச்சந்தை மையப்பகுதியில் அமைந்துள்ளதால் சுற்று வட்டார ஊர்களான வடக்கன்குளம், கும்பிளம்பாடு, கலந்தபனை, பாம்பன்குளம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றார்கள். தினந்தோறும் சந்தை நடைபெறுகிறது. வார சந்தையும் நடைபெறுகிறது, இதைத் தவிர மாட்டுச் சந்தையும் மீன்சந்தையும் உள்ளது. யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பணகுடி சந்தையையும் கவனிக்கின்றார்கள் 19ம் நுற்றாண்டிலிருநதே பணகுடியானது ஒரு மிகப் பெரிய கிராமமாக சிறப்புப் பெற்று விளங்குகிறது.

போக்குவரத்து

மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் போது இருந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் தான் பணகுடியில் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் அச்சாலை மங்கம்மாள் சாலை என்று அழைக்கப்பட்டது. பணகுடியில் ஆரம்பரத்தில் மங்கம்மாள் சாலை மட்டும் தான் இருந்தது. பணகுடி முதல் வள்ளியூர் வழியாக செல்லக்கூடிய சாலை இராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் முன்னால் செல்கிறது. இது ஆரம்பத்தில் மண் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற நகர்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன. மற்ற பேருந்துகள் பைபாஸ் வழியாக செல்கின்றன.

பணகுடியில் ஒரு பெரிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு தான் நாகர்கோவில் திருநெல்வேலிக்கு செல்லும் மக்களும் வெளியூக்கு செல்லும் மக்களும் இந்த பேருந்து நிலையம் வந்துதான் பேருந்து ஏறிச் செல்கின்றனர்.

பணகுடியில் இருந்து போக்குவரத்து தவிர தொடருந்துப் போக்குவரத்தும் உள்ளது. 1903-ம் நூற்றாண்டில் தொடருந்துப் போக்குவரத்து ஆரம்பிக்கபட்டது.

சமய நிலை

பணகுடியில் உள்ள மக்கள் பலவிதமான மதத்தை சார்ந்தவர்கள். இந்து மதத்தை பொருத்தவரை அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். இதில் சைவர்களும், வைணவர்களும் உள்ளனர். கிறித்தவ மதத்தில் கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்ண்டுகள், பெந்தேகோஸ்சுகள் என்ற பிரிவினர்களும் உள்ளனர். சில முஸ்லிம்கள் உருது மொழி பேசுகின்றனர். இவர்கள் பட்டாணி முஸ்லிம் என அழைக்கப்படுகின்றனர். தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் லெப்பை என அழைக்கப்படுகின்றனர்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Panagudi Population Census 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.