நிபோங் திபால்

நிபோங் திபால் (மலாய்: Nibong Tebal, சீனம்: ,高淵) என்பது மலேசியா, பினாங்கு, மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்திற்கு அருகாமையில் பத்து காவான் நகரமும், பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் நகரமும், கெடா மாநிலத்தின் செர்டாங் நகரமும் உள்ளன. நிபோங் திபால் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்டுள்ளது.

நிபோங் திபால்
Nibong Tebal
高淵

ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி

Logo
நாடு
மலேசியா
மாநிலம்
பினாங்கு
உருவாக்கம்1920
மக்கள்தொகை (2010)
  மொத்தம்45,146
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

வரலாறு

இது ஓர் அமைதியான நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் எண்ணெய்ப்பனைத் தோட்டங்கள் உள்ளன. முன்பு இந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அத்தோட்டங்களில் வேலை செய்தனர். நில மேம்பாட்டுத் திட்டங்களின் காரணமாக, அங்கு வேலை செய்த தமிழர்கள், வேறு இடங்களுக்கு மாறிச் சென்று விட்டனர்.

தோட்டப்புறங்களில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர், உயர்க்கல்வி பெற்றதும் நகர்ப்புறங்களுக்கு மாறிச் சென்றனர். சிலர் நிபோங் திபால் நகருக்கு அருகாமையில் உள்ள தொழில்பேட்டைகளில் வேலை செய்கின்றனர். இங்கு அதிகமாகச் சீனர்கள் வாழ்கின்றனர்.

தொடர்வண்டி இருப்புப் பாலம்

நிபோங் திபால் நகரின் அருகில் கிரியான் ஆறு செல்கிறது. இந்த ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கிறது. ஆற்றின் முகத்துவாரத்தில் பல மீன்பிடி கிராமங்கள் உள்ளன. அங்கு பெரும்பாலும் மலாய்க்காரர்களும் சீனர்களும் வாழ்கின்றனர்.

நிபோங் திபால் நகருக்கு பழைய சாலையின் வழியாக வருபவர்கள், ஒரு தொடர்வண்டி இருப்புப் பாலத்தைக் கடந்து வரவேண்டும். இந்தப் பாலம் வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது.[1]

99 வாசல்கதவு மாளிகை

150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு மாளிகை, நிபோங் திபால் நகருக்கு அருகில் இருக்கும் பைராம் செம்பனைத் தோட்டத்தில் அனாதையாகக் கைவிடப்பட்டுள்ளது. 99 வாசல் கதவுகளைக் கொண்ட மாளிகை என்பதால், இதற்கு 99 வாசல்கதவு மாளிகை (மலாய்: Banglo 99 Pintu, ஆங்கிலம்:99-Door Mansion,) என்று பெயர். முன்பு பைராம் தோட்டம் விக்டோரியா தோட்டம் என்று அழைக்கப்பட்டது.

1840இல் கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த ஓர் ஆங்கிலேயர்] இந்த மாளிகையைக் கட்டினார்.[2] இந்த மாளிகையில் பத்து அறைகள் உள்ளன. இதன் பெயர் கலிடோனியா மாளிகை என்றும் சொல்லப்படுகிறது. இரண்டாவது உலகப் போரின் போது, ஜப்பானியர்கள் இந்த மாளிகையை இராணுவத்தின் தலைமை அலுவலகமாகப் பயன்படுத்தினர்.[3]

விக்டோரியா தோட்டம்

19ஆம் நூற்றாண்டில், இந்தத் தோட்டம் ஒரு கரும்புத் தோட்டமாக இருந்தது. 1880இல் உலகளாவிய நிலையில் சீனியின் விலை வீழ்ச்சியுற்றதும் விக்டோரியா தோட்டத்தில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது. 1960களில் ரப்பர் விலையும் வீழ்ச்சியுற்றது. அதன் பின்னர் செம்பனை பயிர் செய்யப்பட்டது. விக்டோரியா தோட்டத்தின் பெயரும் பைராம் தோட்டம் என்று மாற்றம் கண்டது.

தமிழ்நாட்டில் இருந்து சஞ்சிக்கூலிகளாக இங்கு வந்த தமிழர்கள் ஒரு நூற்றாண்டு காலம் இந்தத் தோட்டத்தில் பணி புரிந்துள்ளனர். கால மாற்றங்களின் காரணமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டனர். இப்போது வங்காளதேசிகளும், இந்தோனேசியர்களும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

இருப்பிடம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.