தியாகராசர் பொறியியல் கல்லூரி
மதுரையிலுள்ள தியாகராசர் பொறியியல் கல்லூரி புதுடெல்லியிலுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதியுடன் அண்ணா பல்கலைக்கழகம் - மதுரை உடன் இணைக்கப்பட்ட அரசு உதவி பெறும் தனியார் மேலாண்மையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். சர்வதேச தரச் சான்றிதழ் (ISO 9001:2000) பெற்றுள்ள இக்கல்லூரி மறைந்த கருமுத்து தியாகராசன் செட்டியார் அவர்களால் மதுரையில் நிறுவப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். 1957ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரிக்கு மத்திய,மாநில அரசு மானியங்களுடன் கல்லூரி மேலாண்மையும் நிதியுதவி செய்துள்ளது. 1987ஆம் ஆண்டு இக்கல்லூரிக்கு தன்னாட்சி உரிமம் வழங்கப்பட்டது.
தியாகராசர் பொறியியல் கல்லூரி | |
---|---|
குறிக்கோள்: | வினையே உயிர் |
நிறுவல்: | 1957 |
வகை: | அரசு உதவிபெற்றது |
முதல்வர்: | முனைவர். வி. அபய்குமார் |
அமைவிடம்: | மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
வளாகம்: | 143 acres |
இணையத்தளம்: | http://tce.edu |
இருப்பு
மதுரை மாநகரிலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் 143 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான நிலங்களுக்கும், திருப்பரங்குன்றம் மலைக் குன்றுகளுக்கும் இடையில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் இக்கல்லூரிக்கான கட்டிடங்கள் அமைந்துள்ளது.
கல்விப் பாடங்கள்
தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் மற்றும் அறிவியலில் ஒன்பது பட்டப்படிப்புப் பாடங்களும் பதினோரு பட்டமேற்படிப்பு பாடங்களும் நடத்தப்படுகின்றன.
பொறியியல் துறைகள்
- இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல்
- மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல்
- எந்திரப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
அறிவியல் துறைகள்
- இயல்பியல்
- கணிதம்
- வேதியியல்
தவிர,கட்டிட வடிவமைப்புத் துறையில் இளநிலை பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது.
பொன்விழா ஆண்டு
2007-2008 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் வகையில் பொன் விழா ஆண்டாக கொண்டாடப்பட்டது.
விஞ்ஞானிகளின் வருகை
- 2008 ஆம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டங்களை சிறப்பிக்கும் வகையில் இந்திய விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இக்கல்லூரிக்கு வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
- 2009 ஆம் ஆண்டு டாக்டர் எரிக் ஆல்லின் கார்நெல் ( Dr. Eric A. Cornell ), நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி இக்கல்லூரிக்கு வருகை தந்து சிறப்பித்தார்.
மேலும் பார்க்க
- தியாகராசர் மேலாண்மைப் பள்ளி
- தியாகராசர் கலைக்கல்லூரி
- தியாகராசர் பல்தொழில்நுட்பக்கூடம்