தாமரை (கவிஞர்)

தாமரை, தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

தாமரை (கவிஞர்)
பிறப்பு தாமரை
November 10
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தொழில் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர்
எழுதிய காலம் 1997—இன்று
துணைவர்(கள்) தியாகு

கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

"வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார்[1]. திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.

பணிவாழ்வு

தாமரை கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியலில் பட்டம் பெற்று ஆறு ஆண்டுகள் கோவையில் பணி புரிந்தார். கவிதையில் ஏற்பட்ட நாட்டத்தால் சென்னைக்கு குடிபெயர்ந்த தாமரை, அங்கு கட்டற்ற எழுத்தாளராக கட்டுரைகள், கவிதைகள்,கதைகள் எழுதி வந்தார். அவரது இலக்கிய ஆக்கங்களால் கவனிக்கப்பட்டு திரைப்படத்துறையில் அறிமுகமானார். இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக[2] தாமரை அறிமுகமானார்.[3] தொடர்ந்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ("மல்லிகைப் பூவே"), தெனாலி ("இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ") போன்ற திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார். ஹாரிஸ் ஜயராஜ் இசையில் மின்னலே திரைபட்டத்தில் இவரது பாடல் "வசீகரா" மிகவும் புகழ் பெற்று அவரது வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

மின்னலேக்குப் பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், தாமரையின் மூவர் கூட்டணி (காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் & வாரணம் ஆயிரம்) போன்ற படங்களில் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ஜெயராஜ் கௌதமை விட்டு விலகிய நேரத்தில் தாமரை இசையமைப்பாளர் ரகுமானுடன் கூட்டு சேர்ந்தார். சூலை 2014இல் மீண்டும் கௌதம் மேனன் , ஹாரிஸ் ஜயராஜ் தாமரை கூட்டணியாக இணைந்து அஜித் குமார் நடித்த 'என்னை அறிந்தால்..' திரைப்படத்தில் பங்காற்றினர். சனவரி 1, 2015இல் வெளியான இதன் இசைத்தொகுப்பு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.[4][5][6][7] தாமரை ரகுமான், ஜெயராஜ், கௌதம் தவிர யுவன் சங்கர் ராஜா (நந்தா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், போஸ், பேரழகன், கண்ட நாள் முதல் & கண்ணாமூச்சி ஏனடா), ஜேம்ஸ் வசந்தன் (சுப்பிரமணியபுரம் & பசங்க) போன்ற இசையமைப்பாளர்களுடனும் பாலா, ஏ. ஆர். முருகதாஸ், வி. பிரியா, சசிகுமார் போன்ற இயக்குநர்களுடனும் பணியாற்றி உள்ளார்.

தனிவாழ்வு

தாமரை மனித உரிமைப் போராளியும் தமிழ் தேசியவாதியுமான தியாகுவை திருமணம் புரிந்துள்ளார். இருவருக்கும் சமரன் என்ற மகன் உள்ளார்.[8] 2015 பெப்ரவரியில் தனது கணவர் 2014, நவம்பரிலிருந்து தன்னை நிராதரவாக விட்டுப் பிரிந்ததாக அறிக்கை விடுத்து தன்னைக் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி உண்ணாநோன்பு போராட்டம் தொடங்கினார்.[9] முதலிரண்டு நாட்கள் சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்னர் போராடிய தாமரை பின்னர் அடுத்த இரண்டு நாட்கள் வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அடுத்து கோடம்பாக்கத்திலுள்ள பூங்கா ஒன்றில் தனது போராட்டத்தைத் தொடர்கிறார்.[10] இந்தச் சர்ச்சையில் இருதரப்பினருக்கும் பலர் ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தோழர் தியாகு தாமரையுடன் இணைந்து வாழ்வதற்கு இனி வாய்ப்பிலை என்றும் மகனிடம் மன்னிப்புக் கேட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாடல்கள் எழுதியுள்ள திரைப்படங்கள்

இது முழுமையான தொகுப்பு அல்ல.[11]

படம்வருடம்அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளாராபிற குறிப்புகள்
இனியவளே1998இல்லை- முதல் திரைப்பாடல்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்1998
மின்னலே2000இல்லைஹாரிஸ் ஜயராஜ், கௌதம் மேனன் கூட்டணியில் முதல் பாடல், வசீகரா என் நெஞ்சினிக்க - "மாமா மாமா, ஏஏ அழகிய தீயே" பாடல் வாலி எழுதியது
ஆண்டான் அடிமை2001
மாயன்2001
பைவ் ஸ்டார்2002
ஜெயா2002
ஏப்ரல் மாதத்தில்2002
முத்தம்2002
ஆல்பம்2002
காக்க காக்க2003ஆம்-
குத்து2004
சண்டக்கோழி2005
ஏபிசிடி2005
கஜினி2005இல்லைx-மச்சி y-மச்சி பாடல் - கவிஞர் வாலி
கண்ட நாள் முதல்2005ஆம்-
வேட்டையாடு விளையாடு2006ஆம்
பீமா2008
வாரணம் ஆயிரம்2008இல்லைஏத்தி ஏத்தி பாடல் - நா.முத்துக்குமார்
காதலில் விழுந்தேன்2008இல்லைநாக்கமுக்க நாக்கமுக்க பாடலை படத்தின் இயக்குநரே எழுதியுள்ளார்
ஆதவன்2008இல்லை
யாவரும் நலம்2009
நாணயம்2010இல்லைநான் போகிறேன் மேலே மேலே பாடல் மட்டும்
அய்யனார்2010
விண்ணைத்தாண்டி வருவாயா2010
தூங்கா நகரம்2011
சென்னையில் ஒரு மழைக்காலம்
ஹெய் நீ ரொம்ப அழகா இருக்கே
கண்ணோடு காண்பதெல்லாம்
கார்த்திக் அனிதா
லவ் மேரேஜ்
மாசி
மஞ்சு
நெல்லு
நெஞ்சில் ஜில் ஜில்
புதுமைப்பித்தன்
ராகவன்
சா பூ திரி
உத்தரவு
வேலூர் மாவட்டம் (திரைப்படம்)
விசுவாசம்2019இல்லைகண்ணான கண்ணே பாடல் மட்டும்

எழுதிய பாடல்கள்

  • வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்[12]
  • ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா..
  • தவமின்றி கிடைத்த வரமே..இனி வாழ்வில் எல்லாம் சுகமே..

எழுதியுள்ள புத்தகங்கள்

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - கவிதைத் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.