தியாகு

தியாகு (பிறப்பு: சனவரி 30, 1950) இந்தியாவில் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒரு சமூகப் போராளி. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான இவர் மார்க்சிய சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர். இடதுசாரி சிந்தனைகளைத் தாங்கிய பல படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றுள் முதன்மையானது கார்ல் மார்க்சின் மூலதனம் ஆகும். பல தாய் தமிழ்ப் பள்ளிகளையும் நடத்தி வருகிறார்.[1] . “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது; இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போரினை அக்டோபர் 1, 2013 இல் மேற்கொண்டார். உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனது போராட்டத்தைக் கைவிட மறுத்தவர் இவரது கோரிக்கை குறித்து நல்ல முடி​வு​ எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததைத் தொடர்ந்து 15 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தினை முடித்துக் கொண்டார்.[2] இவரது மனைவி கவிஞர் தாமரை ஆவார்.

இளமைப் பருவம்

தியாகுவின் சொந்தவூர் சந்திரசேகரபுரம் அருகே உள்ள நல்லம்பூர் ஆகும். அவருடைய தந்தை திருவாரூரில் ஆசிரியராக வேலை பார்த்ததால் இவர் பிறந்து வளர்ந்தது திருவாரூரில்தான். சிறு வயதிலிருந்தே திருவாரூரில் பெரியார், அண்ணா, ஜீவானந்தம், காமராசர், கலைஞர் போன்ற பல தலைவர்களின் பேச்சுக்களைப் பொதுக்கூட்டங்களில் கேட்டு வளர்ந்தார். இளவயதிலேயே படிப்பகங்களில் கிடைத்த தி.மு.க, காங்கிரஸ், தமிழ்த் தேசிய இதழ்கள் அனைத்தையும் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்.

அரசியல் அறிமுகம்

1965 ஆம் ஆண்டு, அவரது குடும்பம் வலங்கைமானுக்கு குடி பெயர்ந்தது. அங்கு ஒரு தட்டச்சுப் பள்ளியில் சேர்ந்தார். அப் பள்ளியினை நடத்திய அமீர்ஜான் இவருக்க்கு நெருங்கிய நண்பரானார். சாதி, சமய மறுப்பாளரான திரு.அமீர்ஜானின் நட்பு, தியாகுவை நாத்திகனாக மாற்றியதோடு, அவரது சிந்தனை முறையிலும் தீவிர தாக்கங்களை உண்டாக்கியது. அக்காலத்தில் பெரியாரிடமிருந்து பிரிந்துவந்த குத்தூசி குருசாமி போன்றோர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியிருந்தனர். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் மாநாட்டில் கிடைத்த மார்க்ஸ், லெனின் போன்றோரது புத்தகங்கள் தியாகுவிற்கு முதன்முதலில் மார்க்சியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்தியது.

காங்கிரசுடன் தொடர்பு

பொதுவுடைமை புத்தகங்களை அதிகமாகப் படித்து அச்சிந்தனைகளால் தியாகு ஈர்க்கப்பட்ட வேளையில், அவரது இந்திய தேசிய காங்கிரஸ் நண்பர்களின் வற்புறுத்தலால் 1967இல், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தபின் காமராசரின் தூண்டுதலில் ’தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு’ என்ற அமைப்பு உருவானது. அதன் மாநாட்டில் பேசுவதற்காகத் தியாகு சென்னை சென்றார். காமராசர், கண்ணதாசன், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்த மேடையில், துணிந்து தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார். அவரது உரையை இரசித்த காமராசர் அன்று முதல் எங்கு மாநாடு நடந்தாலும் தியாகுவையே முதலில் பேசுமாறு பணித்தார்.

பொதுவுடைமையில் நாட்டம்

பொதுவுடைமைக் கருத்துகளால் முழுமையாக ஈர்க்கப்பட்ட தியாகு, காங்கிரஸ் ஒரு பணக்காரக் கட்சி; அது பொதுவுடைமையையும் சமநீதியையும் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்று முடிவு செய்தார். லிபெரேஷன் பத்திரிக்கையில் வெளியான பேட்டி ஒன்றில், நக்சல் இயக்கத்தின் தலைவரும் இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய-லெனினிய) கட்சியின் பொதுச் செயலாளருமான சாரு மஜும்தார், “மாணவர்கள் படிப்பை விட்டு குடும்பத்தைத் துறந்து கிராமங்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்பு (Annihilation) தான் நம்முடைய ஒரே முழக்கம்.” எனக் கூறியிருந்தார்.

இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய) கட்சியையும் அவற்றின் செயல்பாடுகளையும் நிராகரித்த இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய-லெனினிய) கட்சியின் அழித்தொழிப்புக் கொள்கை இவரை ஈர்த்தது. கீழ்வெண்மணி சாதீயப் படுகொலை தியாகுவிடம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 1969 இல், தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, வீட்டைவிட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் இணைந்தார்.

சிறைவாசம்

அமைப்புத் தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த தியாகு 1970 ஆம் ஆண்டு, பத்தொன்பதாவது வயதில் சிறையிலடைக்கப்பட்டார். 1971 இல் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே தன் தோழர்களுடன் தப்பிக்க முயற்சி செய்தார். சிறையில் இருந்தாலும் தோழர்கள் சோர்ந்து விடவில்லை எனும் செய்தியைக் கட்சிக்கு அனுப்புவதே தப்பிக்கும் முயற்சியின் நோக்கமாக இருந்தது. பின்னாட்களில் அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டாலும் பிற தோழர்களுடன் சேர்ந்து தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினார். ”சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம்”, “எழுத்தறிவு இயக்கம்” போன்ற பல செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். சிறையிலிருந்த காலகட்டத்தில் லெனினின் எழுத்துக்களை அதிகம் வாசிக்கத் தொடங்கினார். இந்தியப் பொதுவுடைமை (மா-லெ) கட்சியின் யதார்த்தத்துக்குப் புறம்பான அழித்தொழித்தல் கொள்கையின் தோல்வியை உணர்ந்தார்.

மூலதனம் மொழிபெயர்ப்பு

1975 இல் சிறையிலிருந்தவாறே காரல் மார்க்ஸ் எழுதிய ”மூலதனம்” புத்தகத்தின் முதல் பகுதியை மொழிபெயர்க்கத் தொடங்கினார். பாலசுப்பிரமணியத்தின் வேண்டுகோளுக்கிணங்கி மீதமுள்ள மூலதனத்தின் இரண்டு பகுதிகளையும் 1980, ஜனவரியில் தொடங்கி, நவம்பரில் முடித்தார். அந்தப் புத்தகம் NCBHஆல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. 1983 இல், தமிழகத்தில் ஈழப் போராட்டம் வலுப் பெற்றபோது, சிறைக்குள்ளும் பெரிய எழுச்சிகள் ஏற்பட்டன. அக்காலத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகு, 1500 கைதிகளைத் திரட்டி ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினார். சிறையிலிருந்தபோதே தன்னை இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய) கட்சியில் இணைத்துக் கொண்டார். 1985, நவம்பர் மாத இறுதியில் சிறையிலிருந்து விடுதலையானார்.

அரசியல் செயல்பாடுகள்

தொடக்கத்திலிருந்தே இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய) கட்சியின் ஈழம் சார்ந்த தவறான கொள்கைகளைத் துணிவுடன் சுட்டிக்காட்டியவர் தியாகு. 1987 செப்டம்பர் 15 அன்று, ஈழத்தில் திலீபன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினார். அவருக்கு ஆதரவாக தியாகுவும் சிலரும் சேர்ந்து ”திலீபன் மன்றம்” ஒன்றை ஆரம்பித்தனர். அன்று நடைபெற்ற கூட்டத்தில், தியாகு ஈழப் போராட்டத்தைப் பற்றி மக்களிடம் விரிவாக விளக்கினார். ஈழப் போராட்டம் குறித்து தவறான பார்வையை விமர்சிக்கவும் அவர் தயங்கவில்லை. மறுநாள் அவர் இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய) கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 1993 இல் தியாகுவும் சுப. வீரபாண்டியனும் இணைந்து ஜனவரி, 1994இல் “தமிழ்த் தமிழர் இயக்கம்” துவங்கினர். பின்னாளில் அதிலிருந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உருவானது. தமிழ்த் தமிழர் இயக்கம், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட நான்கு அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசிய முன்னணீயை உருவாக்கின. தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு உள்ளிட்டவைகளுக்கு வீரியத்துடன் பல்வேறு போராட்டங்களை இக்கூட்டமைப்பு முன்னெடுத்த்து. தமிழ்த் தேசிய விடுதலைக் இயக்கம் உருவானபோது அதன் விடுதலை முழக்கமாக ”சமூகநீதித் தமிழ்த் தேசம்” முன்வைக்கப்பட்டது. சமூக நீதியை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.

இனப்படுகொலைக்குப் பின்

2009 இன் ஈழப் போரின் இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளும் பிரபாகரன் திரும்பி வருவார், அடுத்தகட்ட ஈழப் போர் நிகழும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் ஈழப் போராட்டத்தில் புலிகளின் பாத்திரம் முடிந்துவிட்டது, ஈழப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து வெளியிட்டவர் தியாகு. ஈழப் போரின் உச்சத்தில் தமிழகத்தினால் இந்திய அரசின் கழுத்தை நெறித்து போரை நிறுத்த முடியாதமைக்குக் காரணம் வெகுமக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு வலிமையான தமிழ்த் தேசிய இயக்கம் இல்லாததே என்று உணர்ந்துகொண்டவர் தியாகு.

தாய்த் தமிழ் பள்ளி

தமிழ்த் தேசிய விடுதலை உணர்வை மக்களிடம் எழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியை ஜூன் 7, 1993 இல் துவக்கினார். நாளைய தலைமுறையினரான குழந்தைகளுக்கு தமிழுணர்வு ஊட்டுவதும், அதன்மூலம் தமிழ்த் தேசிய உணர்வுக்கான அடித்தளத்தை அமைப்பதும் இப்பள்ளிகளின் முக்கிய நேக்கமாக இருந்து வருகிறது. பல தாய்த் தமிழ்ப் பள்ளிகள், தமிழகத்தின் இயங்கி வருகின்றன.

வெற்றி அல்லது வீரச்சாவு

பல்வேறு தமிழக அரசியல் இயக்கங்கள் ஈழப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அடையாளப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தபோது தியாகு அக்டோபர் 1, 2013 லிருந்து, இலங்கையைக் காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும், இனப்படுகொலை நடந்த அம்மண்ணில் காமன்வெல்த் நடைபெறக் கூடாது, மீறி நடந்தால் இந்தியா அதில் கலந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டார். இவரது இப்போராட்டம் 15 நாட்கள்வரை தொடர்ந்தது. உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவல்துறை, நண்பர்கள் மற்றும் ஒத்த இயக்கங்களின் தலைவர்களால் உண்ணாநிலையை விட்டுவிடும்படி அறிவுறுத்தப்பட்டார். 15 நாட்களுக்குப் பின் பிரதமர் தகுந்த முடிவுகள் எட்டப்படும் என்று உறுதியளித்ததால் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

ஆதாரங்கள்

  1. தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன்
  2. http://www.tamilcnnlk.com/archives/205251.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.