பெருந்திருமாவளவன், குராப்பள்ளித் துஞ்சியவன்

சங்க காலச் சோழ அரசர்களில் இருவர் குராப்பள்ளி என்னும் ஊரில் இருக்கும்போது காலமானார்கள். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்போர் அவர்கள்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் நண்பர்களாக ஓரிடத்தில் இருப்பது கண்ட காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் இப்படியே என்றும் விளங்கினால் பிற நாட்டார் குன்றங்களிலெல்லாம் பாண்டியனின் கயல் சின்னத்தையும், சோழனின் புலிச் சின்னத்தையும் சேர்த்துப் பொறிக்கலாம் எனப் பாராட்டுகிறார். [1]

இவனது வெண்கொற்றக் குடை குடிமக்களின் சுமையை இழுத்துச் சென்றதாம். உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடல் - புறநானூறு 60 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவனிடம் பரிசில் வேண்டியபோது பரிசில் தராமல் காலம் கடத்தினான். அது கண்ட புலவர் வெற்றிச் செல்வத்தைத் தாம் மதிப்பதில்லை என்றும், தம் பெருமையை உணர்ந்து நடந்துகொள்பவர் சிற்றரசர் ஆயினும் அவரையே தாம் மதிப்பதாகவும் பாடிவிட்டுச் சென்றுவிட்டார். [2]

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 58
  2. புறநானூறு 197
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.