மாநிலச் சட்டப் பேரவை

மாநிலச் சட்டப் பேரவை (அ) மாநிலச் சட்டமன்ற கீழவை[1] (இந்தி: விதான் சபை) இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் அரசுகளுக்கு சட்டமியற்றும் இடமாக செயல்படுகின்றது.

இப்பேரவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இம்மன்றத்தில் பங்கு பெறுவர்.

உறுப்பினர்கள் எண்ணிக்கை

இம்மன்றத்தின் தலைவராக சட்டப் பேரவைத் தலைவர் செயல்படுவார். இந்திய அரசியலமைப்பின் படி இதன் அதிகப்பட்ச உறுப்பினர்களாக 500 பேர்களுக்கு மிகாமலும், குறைந்த பட்ச உறுப்பினர்காளாக 60 பேர்களுக்கு குறையாமல் அமைய வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பெற்ற சிறப்பு விதியின் கீழ் கோவா, சிக்கிம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 60 உறுப்பினர்களுக்கு குறைந்தும் செயல்படுகின்றன.

அரசியலைமைப்பு விதியில் கூறப்பட்டவை

இந்திய அரசியலமைப்பு அத்தியாயம் மூன்று விதி 168 (2) ல்(இந்திய அரசியல் சாசனம்)[2] குறிப்பிட்டுள்ளவைகள்;- ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்றைச் சட்ட மேலவை என்றும் மற்றதனைச் சட்ட மன்றம் (சட்ட சபை) என்றும் வழங்கப்பட வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நியமன உறுப்பினர்

இவ்வுறுப்பினர்களில் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆங்கிலோ இந்திய சமுதாயத்திலிருந்து ஒரு நியமன உறுப்பினரும் நியமிக்கப்படுவார். இது மரபுப்படி நியமிக்கப்பெற்று பின்பற்றப்படுகின்றது. இவ்வுறுப்பினர் விவாதங்களிலோ மன்ற வாக்களிப்புகளிலோ பங்குபெறுவதில்லை.

காலவரை

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற பணியாற்ற கடமைப்பட்டவர்கள். ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் இவ்வுறுப்பினர்களின் இருக்கைகள் வெறுமையாக்கப் (காலியாக) பெற்று மீண்டும் மாநில பொதுத் தேர்தல் நடத்தப்பெறும். இப்பேரவை உறுப்பினர்களில் அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியே மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதியுடையவர்.

பேரவை கலைப்பு

அவசர காலப் பிரகடன காலங்களில் இப்பேரவை உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் பதவி வகிக்க அனுமதிக்கப் படுவர் அல்லது மன்றமும் கலைக்கப்படலாம். இப்பேரவையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசுக்கெதிராக நம்பிக்கயில்லாத் தீர்மானம் கொண்டுவரும் சமயத்தில் அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் இப்பேரவை கலைக்கப்படும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அம்மாநில அரசு கலைக்கப்பட்டதாக பொருள் கொள்ளப்படும்.

மேற்கோள்கள்

  1. நடராஜன், ஏ. எஸ் (5 வது பதிப்பு 1997). இந்திய அரசியல் சாசனம், மூன்றாம் அத்தியாயம், மாநிலச் சட்ட மன்றம் விதி 168 (1) பொது. இந்தியா, தமிழ்நாடு, சென்னை-14: பாலாஜி பதிப்பகம். பக். 1-467.
  2. நடராஜன், ஏ. எஸ் (5 வது பதிப்பு 1997). இந்திய அரசியல் சாசனம், மூன்றாம் அத்தியாயம், மாநிலச் சட்ட மன்றம் விதி 168 (2) பொது. இந்தியா, தமிழ்நாடு, சென்னை-14: பாலாஜி பதிப்பகம். பக். 1-467.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.