நெருக்கடி நிலை (இந்தியா)

நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - 25 ஜூன் 197521 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர்இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திராகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது.[1]

பின்னணி

அரசியல் அமளி

இந்திரா காந்தி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1971 இன் பொதுத்தேர்தலை சந்திக்க துணிவில்லாமல் செய்த பெரும் தேர்தல் மோசடி என்று எதிர்கட்சிகளால் வர்ணிக்கப்பட்டது. காந்திய சோசலிச வாதியான ஜெய பிரகாஷ் நாராயண் இதை எதிர்த்து பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். இந்திரா காந்தியின் மைய அரசை எதிர்த்து சத்யாகிரகம் நடத்தினார். இதில் மாணவர்கள்,விவசாயிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஜனதா கட்சி (மக்கள் கட்சி) என்ற அழைப்பு கட்சிகளின் கூட்டணி மூலம் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.மேலும் அனைத்து கட்சிகளும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியது.

அலகாபாத் தண்டனை

இந்திரா காந்தியால் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ராஜ் நரேன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்திராகாந்தி மீது தேர்தல் நோக்கங்களுக்காக மாநில இயந்திரங்களை பயன்படுத்தியதாக தேர்தல் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். 12 ஜூன் 1975 , அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா ​இந்த வழக்கில் இந்திராகாந்தியை குற்றவாளியாக அறிவித்தது.மேலும் நீதிமன்றம் அத்தொகுதியில் அவரது வெற்றி செல்லாது எனவும் அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீ்க்கப்படவேண்டும் என அறிவித்தார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாதெனத் தடை விதித்தார். எனினும், லஞ்சம், அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது, மற்றும் அரசின் மின்சாரத்தை பயன்படுத்தியது போன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிகழ்வை டைம்ஸ் நாளிதழ் போக்குவரத்து பயணசீட்டுக்காக பிரதமர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என விமர்சித்தது. எனினும் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடத்தினர். ஜே. பி. நாராயண், ராஜ் நரேன், சத்யேந்திர நாராயண் சின்ஹா ​​மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மக்கள் தில்லி தெருக்களில் வெள்ளமாக போராடினர் இதனை அடுத்து பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு போன்றவை மூடப்பட்டன.இதுவே பின்னர் இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த முக்கிய காரணமாக இருந்தது.

நெருக்கடி நிலை பிரகடனம்

அச்சமயத்தில் முடிவடைந்த பாகிஸ்தானிய போர், எண்ணெய் நெருக்கடி போன்ற காரணங்களினால் நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் இந்தச் சமயத்தில் அரசு பணியாளர்களின் போராட்டங்கள் ஜனநாயகத்தை நிலை குலைய வைக்கும். எனவே, நெருக்கடி நிலைமையை அமல் படுத்துமாறு குடியரசு தலைவருக்கு இந்திரா காந்தி கடிதம் ஒன்றை எழுதினார். இதனை அடுத்து இந்தியக் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமத் அவர்கள், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின்,ஆலோசனையின் பேரில் ஜூன் 25, 1975 அன்று நாட்டின் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அவருடைய (இந்திரா காந்தி) வார்த்தையில் கூறுகையில் "ஜனநாயகத்தின் பேரிறைச்சலை" நிறுத்தினார் என்று குறிப்பிட்டார்.

இந்திய அரசியலமைப்பின் தேவைக்கேற்ப இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் இந்தியக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலின்படி இந்த நெருக்கடி நிலை ஒவ்வொரு 6 மாதக் காலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு 1977 இல் தேர்தலை சந்திக்கும் வரை தொடர்ந்தது.

நெருக்கடி நிலை நிர்வாகம்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயலாட்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்திய அரசியலைமைப்பு சட்ட விதி 352 ஐ கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கென கூடுதலான சிறப்பு அதிகாரங்களைப் பெற்றார். மற்றும் குடியுரிமைகளை முடக்கினார்; எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார்.

அரசு இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தலை வரவழைத்துக்கொண்டது. வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்புகள் அதிகமாகின; இவைகளினால் அரசுக்கு மிக அதிகமான பொருளாதார நெருக்கடி உருவாகியது. எதிர்க்கட்சிகளின் அளவில்லாத எதிர்ப்புகளை நாடுமுழுவதும் சந்திக்க நேர்ந்தது. இந்திரா காந்தி தனக்கு நெருக்காமானவர்கள் கூறிய ஆலோசனைகளையும் பொருட்படுத்தவில்லை; அவரின் நெருக்கமான ஆலோசகராக கருதப்படும் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியும் நெருக்கடி நிலை சம்பந்தமாக மற்றவர்கள் தெரிவித்த எதிர் கருத்துகளையும்,ஆலோசனைகளையும் தவிர்த்தார்.

அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். பல முக்கிய அரசியல் தலைவர்களான ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி,பல பொதுவுடமைவாதிகள், பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள், இன்னும் இதர கிளர்ச்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என் கருதப்பட்டவர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் போன்ற எதிர் வாத கருத்துக்களுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன.

அரசுக்கு எதிரான குற்றசாட்டுகள்

அவசர காலங்களில் பல்வேறு குற்றசாட்டுகள் அரசின் மீது சுமத்தப்பட்டன. அவை..

* குடும்பங்களுக்கு தகவல் கொடுக்காமல் காவலர்களால் மக்கள் கைது செய்யப்பட்டது.
* கைதிகள் மற்றும் அரசியல் கைதிகள். சித்திரவதை செய்யப்பட்டது.
* தூர்தர்ஷன் போன்ற பொது மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தேசிய தொலைக்காட்சி வலையமைப்புகளை அரசு பிரசாரம் செய்ய 
  பயன்படுத்திக் கொண்டது.
* கட்டாய கருத்தடை.
* ட்ருக்மென் கேட்,பழைய தில்லி மற்றும் ஜமா மஸ்ஜித் பகுதியில் வாழ்ந்த குடிசை வாழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டது.
* பெரிய அளவிலான சட்டவிரோத செயல்கள் அரங்கேற்றியது.
* நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும்,செய்தி ஊடகங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, மத்திய அரசுக்கு எதிரான செய்திகள் 
  நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது அல்லது தடை செய்யப்பட்டது.
* மத்திய அரசை ஆதரித்து அரசின் செலவில் விளம்பரமும் பிரச்சாரமும் மேற்கொண்டது.

கேரளத்தின் ’ராஜன் வழக்கு’ (Rajan case) எனும் குடும்பத்திற்கு தெரியப்படுத்தாமல் அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் என்னவானார் என்பதைக் குறித்து ராஜனின் தந்தையால் தொடுக்கப்பட்ட வழக்கு இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்பட்டது.

1977 தேர்தல்

ஜனவரி 23,1977 புதியத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். மார்ச் மாதம் புதிய தேர்தல் நடைபெறும் என அறிவித்தார், மேலும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தார். நெருக்கடி நிலை அதிகாரப்பூர்வமாக மார்ச் 23, 1977 அன்று முடிவுற்றது.இத்தேர்தலை மக்கள் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடைப்பட்ட நிலையாக கருதினர்.இதில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந்தது.இந்திர காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

மேற்கோள்கள்

  1. "1975 இல் இந்தியா : ஜனநாயக இருட்டடிப்பு", என்.டி பால்மர் - ஆசிய ஆய்வறிக்கை, தொகுதி 16 எண் 5. இல் எழுதபட்ட வரிகள்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.