குறள் வெண்பா

குறள் வெண்பா என்பது வெண்பா வகையின் இரண்டு அடி உள்வகையாகும். புகழ் பெற்ற திருக்குறள் குறள் வெண்பா வகையையே சார்ந்தது.

எடுத்துக் காட்டாக ஒரு திருக்குறள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு

எழுத்துகள் எல்லாவற்றிற்கும் முதலெழுத்தாக அகரம் இருப்பது போல உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் முதலாளாகக் கடவுள் இருக்கிறார் எனப் பொருள்பட இதனைத்  திருவள்ளுவர் ஆக்கியுள்ளார். திருக்குறள் நூலில் முதலாவது குறள் இதுவே.

நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாக முதலாமடியும் மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடியாக இரண்டாமடியும் அமைய, மொத்தமாக ஏழு சீர்களைக் கொண்ட குறள் வெண்பாவாக இத்திருக்குறளைக் காணலாம்.

'அகர' என்ற முதற் சீரில் "அ" உம் 'ஆதி' என்ற நான்காம் சீரில் "ஆ" உம் மோனையாக வந்துள்ளது. அதேவேளை முதலடி முதற் சீரில் "அக" உம் இரண்டாமடி முதற் சீரில் "பக" உம் எதுகையாக வந்துள்ளது.

இவ்வாறு எதுகை அமைந்தால் "ஒரு விகற்பக் குறள் வெண்பா" என்றும் இவ்வாறு எதுகை அமையாத வேளை "இரு விகற்பக் குறள் வெண்பா" என்றும் சொல்லப்படுகிறது.

ஈரசைச் சீர்கள் ஆறும் மூவசைச் சீர் ஒன்றும் அதேவேளை ஈற்றடி ஈற்றுச் சீர் 'பிறப்பு' எனும் வாய்பாட்டிலும் இக்குறள் அமைந்திருக்கிறது. அதாவது, ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களில் காய்ச் சீரும் ஈற்றடி ஈற்றுச் சீர் ஓரசைச் சீரும் (அல்லது உகரம் ஏறிய ஓரசைச் சீரும்) வெண்பாவில் வருவது இயல்பே!

மாமுன் நிரை (இயற்சீர் வெண்டளை), காய்முன் நேர் (வெண்சீர் வெண்டளை) என்றவாறு இக்குறளில் தளைகள் வந்துள்ளது. இங்கே விளமுன் நேர் வராவிடினும் அதுவும் இயற்சீர் வெண்டளை ஆகும்.

மேலும் இக்குறளைப் பகுப்பாய்வு செய்தால் நேரசை (க, கல், கா, கால் என்றவாறு) மற்றும் நிரையசை (கட, கடன், கடா, கடாம் என்றவாறு) வருவதைக் காணலாம்.

அக/ர                       முத/ல                  வெழுத்/தெல்/லாம்            ஆ/தி

நிரை/நேர்         நிரை/நேர்         நிரை/நேர்/நேர்                நேர்/நேர்

புளிமா                    புளிமா             புளிமாங்காய்                      தேமா


பக/வன்                   முதற்/றே                      யுல + கு

நிரை/நேர்           நிரை/நேர்                     நிரைபு

புளிமா                       புளிமா                         பிறப்பு

யாப்பு இலக்கணப்படித் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கையாண்ட நுட்பங்களையே மேலே காண்கின்றோம். இன்னோர் எடுத்துக்காட்டாக 110ஆவது குறளைப் பார்ப்போம்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

இதுவோர் இரு விகற்பக் குறள் வெண்பா ஆகும். இக்குறளுக்கு  "எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை." என மு. வரதராசன் விளக்கம் தருகின்றார்.

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

  • யாப்பறிந்து பாப்புனைய - மருதூர் அரங்கராசன்
  • யாப்பதிகாரம் - புலவர் குழந்தை
  • யாப்பரங்கம் - புலவர் வெற்றியழகன்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.