நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்
நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில் (அ) யோக நரசிம்மர் கோயில் தமிழகத்தின் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள நரசிங்கம் எனும் இடத்தில் அமைந்த தொன்மையான குடைவரைக் கோவில்[1].
யோக நரசிம்மர் கோவில் | |
---|---|
![]() | |
பெயர் | |
பெயர்: | யோக நரசிம்மர் கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | யா.ஒத்தக்கடை |
மாவட்டம்: | மதுரை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | யோக நரசிம்மர் |
தாயார்: | நரசிங்கவல்லி தாயார் |
தீர்த்தம்: | சக்கரத்தீர்த்தம் |
தலவரலாறு
ரோமச முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி யானைமலையிலுள்ள சக்கர தீர்த்ததில் நீராடி யாகம் செய்தார். அப்போது நரசிம்ம பெருமாள் அவதாரத்தில் இருந்ததைப் போல கண்ணுற ஆசை கொண்டார். அதனால் பெருமாள் மீண்டும் உக்கிர நரசிம்மராக தோன்றினார். அவருடைய கோபத்தால் உலகம் வெப்பமயமானது. பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிரகலாதனும், மகாலட்சுமியும் நரசிம்மரின் உக்கிரத்தினை தணித்தனர்.
வரலாறு
இக்கோவில் மதுரைப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறன் காரி என்பவரால் கி.பி. 770இல் உருவாக்கப்பட்டது. மாறங்காரியின் சகோதரர் மாறன் எயினன் இக்கோவிலுக்கு ஒரு முகமண்டபத்தைக் கட்டினார்.
சிறப்பு

கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது[2].[3]. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும். இக்கோயிலை ஒட்டியுள்ள மலையில் சமணர் படுகைகள் அமைந்துள்ளது.
செல்லும் வழி
மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் சிற்றுந்து வசதி உள்ளது.