நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.[1]

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் முன் பக்கத் தோற்றம்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இன்னொரு பக்கத் தோற்றம்
புதிய வாயில் கட்டும்போது எடுத்த படம். உட்புறமிருந்து

கோயிலின் சிறப்பு

இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படும். அநேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் இங்கு தங்கிச்செல்வோரே அதிகம். இதனால் தொலைவில் இருந்து வருவோரின் நலன் கருதி கோயிலில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் உள்ளன. தமிழர் மட்டுமன்றி தென்னிலங்கை சிங்களவர்களும் இக்கோயிலுக்கு வந்து செல்வர்.

வரலாறு

நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. திராவிட இனமாகிய தமிழர்களின் முன்னோர்களாக, நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழ்பாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என உருமாற்றம் பெற்றன.

ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, எண்ணாயிரம் ஆண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.

நாயன்மார்களின் உருவச்சிலைகள்

இலங்கை, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள்வீதியில் அமைக்கப்பட்டுள்ளன.

நாயன்மார்கள்

விழாக்கள்

இங்கு கப்பல் திருவிழாவும் மிக சிறப்பாக செய்யப்படுகிற ஒன்றாகும் இங்கு அது மட்டுமல்லாது வேட்டைதிருவிழாவும் செய்யப்படுகிறது, நவராத்திரி, கேதாரகௌரி விரதம், வரலட்சுமி விரதம் போன்றன மிகச்சிறப்பாக செய்யப்படுகிறது.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.