அ. ச. ஞானசம்பந்தன்

அ. ச. ஞானசம்பந்தன் (நவம்பர் 10, 1916ஆகஸ்ட் 27, 2002) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். சுருக்கமாக அ. ச. ஞா என்றும் அழைக்கப் பட்டார்.

அ. ச. ஞானசம்பந்தன்

வாழ்க்கைக் குறிப்பு

அ. ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் பிறந்தவர். அவரது பெற்றோர் அ. மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி ஆவர். அவரது தந்தை சைவசமய பக்திக் காவியமான திருவிளையாடல் புராணத்திற்கு உரையெழுதிய தமிழ் அறிஞர். ஞானசம்பந்தன் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின் இடைநிலை வகுப்புக்கு (இண்டெர்மீடியட்) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தைத் தேர்வு செய்து படித்தார்.

அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த சோமசுந்தர பாரதியார் அவரது தமிழ் அறிவையும் ஆர்வத்தையும் அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, திரு. வி. க, தெ. பொ. மீனாட்சி சுந்தரம் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் 1956 வரை வேலை பார்த்தார்.

எழுத்துப் பணி

அ. ச. ஞானசம்பந்தனின் முதல் புத்தகமான ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற புத்தகம் 1945ல் வெளியானது. இப்புத்தகமும், கம்பன் காலை (1950) மற்றும் தம்பியர் இருவர் (1961) ஆகிய புத்தகங்களும் அவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த செறிந்த அறிவுக்குச் சான்றாக அமைந்தன. பச்சையப்பாக் கல்லூரியிலிருந்து வெளியேறிய பின் 19561961 வரை அகில இந்திய வானொலியின் சென்னை அலுவலகத்தில் நாடகங்கள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பு அலுவலராக வேலை பார்த்தார். 1959ல் தமிழ்ப் பதிப்பகங்களின் பணியகத்தின் செயலாளரானார். 19691972 வரை தமிழ் நாட்டுப் பாடநூல் கழகத்தின் தலைவராக இருந்தார். 1970ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியில் சேர்ந்து பின் 1973ல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னாளில் அதே பல்கலைக்கழகத்தில் தாகூர் ஓய்வுப் (Tagore emeritus professor) பேராசிரியாராகப் பணியாற்றினார். அவர் தனது கடைசி காலத்தைச் சென்னையில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் கழித்தார். அவர் ஒரு சைவ சமய அறிஞராகவும் பாடநூல் தயாரிப்பாளர் மற்றும் தமிழ் விரிவுரையாளராகவும் வாழ்ந்தவர். அவர் எழுதிய நூல்கள் 35 ஆராய்ச்சிப் புத்தகங்கள், 3 மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் ஏராளமான பாடப் புத்தகங்களும் கட்டுரைகளும் ஆகும். 1985ல் கம்பன்: புதிய பார்வை என்ற அவரது இலக்கிய விமர்சன நூல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.[1][2][3][4][5]

விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது - 1985
  • சங்கப்பலகை குறள் பீடம் விருது - தமிழக அரசு விருது - 2001

எழுதிய நூல்கள்

  1. அ.ச.ஞா.பதில்கள்
  2. அகமும் புறமும்
  3. அரசியர் மூவர்
  4. அருளாளர்கள்
  5. அனைத்துலக மனிதனை நோக்கி (தாகூர் கட்டுரைகள்
  6. இராமன் பன்முக நோக்கில்
  7. இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - 1945
  8. இலக்கியக்கலை - 1964
  9. இளங்கோ அடிகள் சமயம் எது?
  10. இன்றும் இனியும்
  11. இன்னமுதம்
  12. கம்பன் எடுத்த முத்துக்கள்
  13. கம்பன் கலை - 1961
  14. கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்
  15. கம்பன் புதிய பார்வை - 1985
  16. குறள் கண்ட வாழ்வு
  17. சேக்கிழார் தந்த செல்வம்
  18. தத்துவமும் பக்தியும் - 1974
  19. தம்பியர் இருவர் - 1961
  20. தமிழ் நாடக வரலாறும், சங்கரதாச சுவாமிகளும்
  21. திரு.வி.க
  22. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-1
  23. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-2
  24. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-3
  25. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-4
  26. திருவாசகம் சில சிந்தனைகள் பகுதி-5
  27. தேசிய இலக்கியம்
  28. தொட்டனைத்தூறும் மணற்கேணி
  29. தொரோ (Thoreau) வாழ்க்கை வரலாறு
  30. நான் கண்ட பெரியவர்கள்
  31. பதினெண் புராணங்கள்
  32. பாரதியும் பாரதிதாசனும்
  33. புதிய கோணம்
  34. பெரிய புராணம் ஓர் ஆய்வு-தொகுதி-1
  35. பெரிய புராணம் ஓர் ஆய்வு-தொகுதி-2
  36. மகளிர் வளர்த்த தமிழ்
  37. மந்திரங்கள் என்றால் என்ன?
  38. மாணிக்கவாசகர் - 1974
  39. முற்றுறாச் சிந்தனைகள் [6]
  • கிழக்கும் மேற்கும் - 1971

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.