புலாவ் பெசார், மலாக்கா

புலாவ் பெசார் (ஆங்கிலம்: Big Island, மலாய் மொழி: Pulau Besar) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு தீவாகும். [1] மலாக்கா மாநகரில் இருந்து, 12 கிலோமீட்டர் தொலைவில், மலாக்கா நீரிணையில், புலாவ் பெசார் தீவு அமைந்து உள்ளது.

புலாவ் பெசார்
Pulau Besar
தீவு
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
உருவாக்கம்15-ஆம் நூற்றாண்டு
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

மலாய் மொழியில் புலாவ் என்றால் தீவு. பெசார் என்றால் பெரியது. தமிழில் பெரிய தீவு என்று அழைக்கலாம். இருப்பினும், புலாவ் பெசார் என்றே அறியப் படுகிறது. மலாக்கா மாநிலத்தின் கடல்பகுதியில் ஏறக்குறைய பதினைந்து தீவுகள் இருக்கின்றன.

புலாவ் பெசார் தீவைச் சுற்றிலும், மேலும் ஐந்து சின்னச் சின்னத் தீவுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை புலாவ் நங்கா, புலாவ் செரிம்புன் தீவுகள். இவை புலாவ் பெசார் தீவிற்கு மிக அருகில் உள்ளவை. இந்தப் புலாவ் பெசார் தீவில் புராணங்களும் மர்மங்களும் நிறைந்து உள்ளன.

அமைப்பு

புலாவ் பெசார் ஓர் அழகிய தீவு. அங்கே அரியவகை மீன்கள், கடல் பாசிகள் நிறைந்து உள்ளன. இந்தத் தீவைச் சுற்றிலும் பவளமேனி மணல் கரைகள், மஞ்சள் மணல் திட்டுகளைக் காணலாம். தீவின் உள்ளே கரடு முரடான பாறைப் படிவங்கள் உள்ளன. உயிரியல் ஆய்வாளர்களுக்கு ஓர் ஆய்வுத் தளமாகவும் விளங்குகிறது. மலாக்கா நீரிணையின் தென் பகுதியில், நன்னீர் கிடைக்கும் ஒரே இடம், இந்தப் புலாவ் பெசார் தீவு தான்.

முன்பு, புலாவ் பெசார் தீவிற்கு, கடலாமைகள் ஆயிரக் கணக்கில் வந்தன. இப்போது அவை வருவது இல்லை. அண்மைய காலங்களில் இந்தத் தீவு நவீன மயமாக்கப்பட்டு வருவதால், கடலாமைகளின் போக்குவரத்தும் குறைந்து விட்டது.

15ஆம் நூற்றாண்டில், பருவக் காற்றுகளை நம்பி வந்த பாய்மரக் கப்பல்களுக்கு, நன்னீர் வழங்கும் புகலிடமாகவும், ஒரு முக்கியத் தளமாகவும் இந்தப் புலாவ் பெசார் தீவு விளங்கி இருக்கிறது.

குனோங் லேடாங் இளவரசி

லேடாங் இளவரசிக்கும், புலாவ் பெசார் தீவிற்கும் புராணத் தொடர்புகள் இருந்து இருக்கின்றன.[2] ஜொகூர், மலாக்கா மாநிலங்களின் எல்லையில் லேடாங் மலை இருக்கிறது.[3] அந்த மலையில், புராண காலத்து தேவதை ஒருவர், காவல் காத்து வருவதாக, மலேசியப் புராணக் கதைகளில் இன்றும் சொல்லப் படுகிறது. அந்த வகையில், மலாய் இலக்கியக் களஞ்சியமான செஜாரா மலாயுவில், குனோங் லேடாங் இளவரசியைப் பற்றிய ஒரு புராணக் கதையும் எழுதப் பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.