பாரூக் (நூல்)

பாரூக்கு (Baruch) என்னும் நூல் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும்[1]. இந்நூல்கள் கத்தோலிக்க திருச்சபையாலும் மரபுவழி திருச்சபையாலும் பிற விவிலிய நூல்களைப் போன்று இறைஏவுதலால் எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.

பாரூக்கு இறைவாக்கினர். விவிலிய படிம ஓவியம். காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: உருசியா.

பெயர்

பாரூக்கு என்னும் இந்நூல் செப்துவசிந்தா[2] பதிப்பில் கிரேக்க மூல மொழியில் Barùch (Βαρούχ) என்றும் இலத்தீனில் Baruch என்றும் உள்ளது. எபிரேயத்தில் இது בָּרוּךְ (Barukh, Bārûḵ) என்னும் பெயர் ஆகும். இதற்கு "பேறுபெற்றவர்" என்பது பொருள்.

பாரூக்கு நூல் ஏழு இணைத் திருமுறை விவிலிய நூல்களுள் ஒன்று ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும்[3], பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) [4] அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.

உள்ளடக்கம்

இறைவாக்கினர் எரேமியாவின் செயலரான பாரூக்கு இந்நூலை எழுதினார் என்பது மரபுவழிச் செய்தி. வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட ஐந்து சிறிய தனித்தனி பகுதிகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, கி.மு. முதல் நூற்றாண்டில் தனி நூலாகப் பாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டன என்பர் அறிஞர். நூலின் மையப்பகுதி (3:9 - 5:90 கவிதை நடையில் அமைந்துள்ளது.

கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இசுரயேலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி (1:1 - 3:8), உண்மை ஞானமாகிய திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால் (3:9 - 4:4), கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மீட்பை அருள்வார் (4:5 - 5:9) என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது

எரேமியாவின் மடல் என அழைக்கப்படும் இறுதிப் பகுதி (6:1-72); காண்க: 2 மக் 2:1-3) பிறஇனத்தார் நடுவே பழக்கத்தில் இருந்த சிலைவழிபாட்டை வன்மையாகக் கண்டிப்பதன்மூலம், முழு முதற் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளுமாறு இசுரயேலரைத் தூண்டுகிறது (காண்க: எரே 10:1-16; எசா 44:6-20).

கிரேக்க மூலத்தில் பாரூக்கு 5ஆம் அதிகாரத்தைத் தொடர்ந்து புலம்பல் நூல் இடம்பெற, அதன் பின்னரே எரேமியாவின் மடல் காணப்படுகிறது. இருப்பினும் "வுல்காத்தா" (Vulgata) எனப்படும் இலத்தீன் பாடத்தைப் பின்பற்றிக் கத்தோலிக்க மரபு இம்மடலைப் பாரூக்கு 6ஆம் அதிகாரமாகப் பார்க்கிறது.

நூலிலிருந்து சில பகுதிகள்

பாரூக்கு 1:1-4
"வானகத்திற்கு ஏறிச்சென்று,
ஞானத்தைப் பெற்றுக்கொண்டவர் யார்?
முகில்களினின்று அதைக் கீழே கொணர்ந்தவர் யார்?
கடல் கடந்து சென்று அதைக் கண்டுபிடித்தவர் எவர்?
பசும்பொன் கொடுத்து அதை வாங்குபவர் எவர்?
அதை அடையும் வழியை அறிபவர் எவருமில்லை;
அதன் நெறியை எண்ணிப் பார்ப்பவருமில்லை.
ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்;
தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்."

உட்பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1-9 189
2. எருசலேமுக்கு விடுக்கப்பட்ட மடல் 1:10 - 3:8 189 - 193
3. ஞானத்தின் புகழ்ச்சி 3:9 - 4:4 193 - 195
4. எருசலேமின் புலம்பலும் நம்பிக்கையும் 4:5 - 5:9 195 - 197
5. எரேமியாவின் மடல் 6:1-72 197 - 201

ஆதாரங்கள்

  1. பாரூக்கு நூல்
  2. செப்துவசிந்தா
  3. கார்த்தேசு சங்கம்
  4. திரெந்து பொதுச் சங்கம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.