பத்தாங்காலி
பத்தாங்காலி (ஆங்கிலம்: Batang Kali, சீனம்: 峇冬加里) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. பத்தாங்காலி நகரம் கோலாலம்பூரில் இருந்து 49 கி.மீ., தஞ்சோங் மாலிம் நகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் பத்தாங்காலி நகரமும் ஒன்றாகும்.
பத்தாங்காலி Batang Kali | |
---|---|
குறுநகரம் | |
![]() | |
நாடு | ![]() மலேசியா சிலாங்கூர் |
உருவாக்கம் | 18-ஆம் நூற்றாண்டு |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | துவான் மாட் நாட்சாரி அகமட் டாலான் |
• நாடாளுமன்ற உறுப்பினர் | கமலநாதன் பஞ்சநாதன் |
நேர வலயம் | MST (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
அஞ்சல் குறியீடு | 44300 |
தொலைபேசி குறியீடு | 03 |
இணையதளம் | [1] Pusat Khidmat Adun Batang Kali |
1948-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது பொதுமக்களில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதைய பிரித்தானிய இராணுவத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராடி வருகின்றனர். பத்தாங்காலி படுகொலை என்று அழைக்கப்படும் அந்த நிகழ்ச்சி, மலாயா வரலாற்றில் ஒரு கறும்புள்ளியாகும்[2]
மலேசியாவில் பெயர் பெற்ற கெந்திங் மலை எனப்படும் சுற்றுலா தளத்தின் நுழைவாயிலாகவும் பத்தாங்காலி விளங்குகின்றது. சூதாட்ட விடுதிகளுக்கும், பலவகை வணிக நோக்குடைய பூங்காவிற்கும், கெந்திங் மலை புகழ்பெற்றதாகும். பத்தாங்காலியின் புறநகர்ப் பகுதியில் புதிய நகரமைப்பான பண்டார் பாரு பத்தாங்காலி (லிகாமாஸ்) (ஆங்கிலம்: Ligamas) உருவாகி வருகிறது.[3]
பத்தாங்காலி துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. நகரின் சுற்று வட்டாரங்களில் பல புதிய நடுத்தர தொழிற்சாலைகள் தோற்றுவிக்கப் பட்டுள்ளன. வங்காள தேசம், மியான்மார், நேப்பாளம் போன்ற நாடுகளைச் சார்ந்த தொழிலாளர்கள், இந்தத் தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர்.
பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி
கெந்திங் அடிவாரத்தில் அமைந்து இருக்கும் பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியில், 1956-ஆம் ஆண்டில் 25 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றனர். அந்தக் காலகட்டத்தில் பழனிச்சாமி என்பவர் அப்பள்ளியின் தலைமயாசிரியராக இருந்தார். 1956-ஆம் ஆண்டு 2,500 ரிங்கிட் செலவில் புதிய கட்டடம் எழுப்பப் பட்டது. அதன்பின் கோல குபு பாரு தோட்டத்தில் உள்ள மாணவர்களும் இப்பள்ளியில் சேர்ந்து பயின்றனர். 2012-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 345-ஆக உயர்ந்தது. இப்பள்ளியின் தலைமையாசிரியராக திருமதி.பெ.மஞ்சுளா பணியாற்றுகிறார்.