காஜாங்

காஜாங் (ஆங்கிலம், மலாய்: Kajang) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்த நகரம் உலு லங்காட் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.[1] சிலாங்கூர் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் காஜாங் நகரமும் ஒன்றாகும்.

காஜாங்
Kajang
பெருநகரம்
நாடு மலேசியா
சிலாங்கூர்
உருவாக்கம்1807
நகராண்மைக்கழகம்1 ஜனவரி 1997
அரசு
  நகராட்சித் தலைவர்ஜசான் நவாவி அப்துல் ரஹ்மான்
பரப்பளவு
  பெருநகரம்235.71
  நிலம்787.61
மக்கள்தொகை (2010)
  பெருநகரம்342
  அடர்த்தி685.06
  பெருநகர்539
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு43000
தொலைபேசி குறியீடு03
இணையதளம்http://www.mpkj.gov.my
புக்கிட் மேவாவில் இருந்து காஜாங் நகரத்தின் இரவுத் தோற்றம்.
காஜாங் பள்ளிவாசல்.
டத்தோ நாசிர் கட்டிடம்.
தெஸ்கோ காஜாங். சவுஜானா காஜாங் அமைவிடம்.
காஜாங் பிளாசா

கடந்த சில ஆண்டுகளில், காஜாங் நகரின் மக்கள் தொகை விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் மக்கள் தொகை வளர்ச்சி, ஆண்டுக்கு சராசரி 9% என மதிப்பிடப்பட்டுள்ளது. காஜாங் நகரும் துரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.

2004-ஆம் ஆண்டு வரை, தாமான் பிரிமா சவுஜானா,[2] சுங்கை சுவா, தாமான் காஜாங் பெர்டானா போன்ற பல புது குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

அண்மையக் காலங்களில், காஜாங் சுற்றுவட்டாரத்தில் டுவின் பால்ம்ஸ் (Twin Palms), ஸ்ரீ பன்யான் நாட்டுப்புற மாளிகைகள் (Sri Banyan Country Heights), பிரிமா பாராமவுண்ட் (Prima Paramount)[3] போன்ற ஆடம்பர மனைத் திட்டங்களும் தோன்றியுள்ளன.

காஜாங்கில் புதிதாக உருவாகி வரும் புறநகர்ப் பகுதிகளை ‘சில்க்’ விரைவுச்சாலை வழியாகச் சென்றடையலாம். காஜாங் நகரை காஜாங் நகராண்மைக்கழகம் பராமரித்து வருகிறது.[4]

வரலாறு

காஜாங் எனும் சொல் எப்படி உருவானது என்பதற்கு சில காரணங்களும் சில கருத்துகளும் சொல்லப்படுகின்றன. 1580-களில் தெமுவான் எனும் மலேசியப் பழங்குடியின மக்கள், இந்த இடத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் காஜாங் எனும் தாழைக்காய் வகையைச் சேர்ந்த தாவரங்களின் ஓலைகளைக் கொண்டு குடிசைகளைப் பின்னி இருக்கிறார்கள். காஜாங்கில் அந்தத் தாவரங்கள் நிறைய இருந்து இருக்கின்றன. அந்த வகையில் காஜாங் எனும் பெயர் வந்து இருக்கலாம்.[4]

பத்தின் பெரங்காய்

முன்பு காலத்தில் பத்தின் பெரங்காய் என்பவர் சுங்கை ஊஜோங் பகுதியின் மிராசுதாரராக இருந்து இருக்கிறார். ஆற்று ஓரங்களில் சிறிய குடிசைகளைக் கட்டி இருக்கிறார். அவர் தாழைக்காய் தாவர ஓலைகளையே பயன்படுத்தி இருக்கிறார். அவர் புதிதாகக் குடியேறிய போது அந்த இடம், பொருத்தமான ஒரு குடியிருப்பு பகுதியாக அமைந்ததால், அந்த இடத்திற்கு காஜாங் என பெயர் வைத்ததாகச் சொல்லப்படுகிறது.[4]

சொற்பூசல் தகராறு

1870-களில் இங்கு வாழ்ந்த மெண்டாயிலிங் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பூகிஸ் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெர்காஜாங் எனும் சொல்லினால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மெண்டாயிலிங் இனத்தவர்களுக்கு பெர்காஜாங் என்றால் புகலிடம். அதாவது பாதுகாப்பான இடம்.

ஆனால், அதே சமயத்தில் பூகிஸ் இனத்தவர்களுக்கு பெர்காஜாங் என்றால் சண்டை போடுதல். இந்தச் சொல்லினால், ஒரு கட்டத்தில் இரு இனத்தவருக்கும் சொற்பூசல் தகராறு ஏற்பட்டது. அதனால், பின்னர் காலத்தில் காஜாங் எனும் சொல் புழக்கத்திற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.[4]

புக்கிட் சுங்கை மெர்பாவ்

1776-இல் இந்தோனேசியா ரியாவ் மாநிலத்தில் இருந்து டோ லிலி (Toh Lili) என்பவர் இங்கு வந்து காஜாங் பகுதியைத் தோற்றுவித்ததாகவும் சான்றுகள் உள்ளன. அவர் ரியாவ் நிலப்பகுதியைச் சேர்ந்த சுல்தான் முகமட் ஷா இப்னி அல்மார்ஹும் சுல்தான் இப்ராஹிம் ஷா என்பவரின் சீடர் ஆகும். சுல்தானின் அனுமதியின் பேரில் புக்கிட் சுங்கை மெர்பாவ் எனும் இடத்தில் நெல் விவசாயத்திற்காக நிலத் துப்புரவு செய்ததாகவும், பின்னர் அந்த இடம் காஜாங் என பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.[4]


1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், மெண்டாயிலிங் இனத்தைச் சேர்ந்த ராஜா ஆலாங் என்பவர் தன்னுடைய விசுவாசிகளுடன் மலாயாவிற்கு வந்தார். சுங்கை லங்காட் நதியின் வழியாக இங்கு வந்து, ஒரு குடியிருப்பை உருவாக்கி இருக்கிறார். அவர் முதன்முதலில் கால் பதித்த இடத்தை, இப்போது ஜாலான் மெண்டாயிலிங் என்று அழைக்கிறார்கள்.[5]

1860-ஆம் ஆண்டுகளில் இஞ்ச் கென்னத் தோட்ட நிர்வாகத்தினால் சில காபித் தோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. பின்னர், கர்னல் ஹென்றி கோவ் என்பவரும் காஜாங்கிற்கு அருகாமையில், பிராங் பெசார் ரப்பர் தோட்டத்தை உருவாக்கினார்.[5]

மக்கள் தொகையியல்

காஜாங் நகரின் மொத்த மக்கள் தொகை 342,657. இவர்களில் 60.4% மலாய்க்காரர்கள். 19.3% சீனர்கள். 9.7% இந்தியர்கள். 10.6% மற்ற இனத்தவர்கள்.[6] மக்கள் மிகுதியாக வாழும் மையப் பகுதிகள்:

  • சுங்கை கந்தான்
  • சுங்கை ஜெலோக்
  • சுங்கை ரமால்
  • சுங்கை சுவா
  • சுங்கை சிக்காமட்
  • பண்டார் மக்கோத்தா
  • ஜாலான் ரேக்கோ
  • ஜாலான் புக்கிட்
  • பண்டார் சுங்கை லோங்
  • பண்டார் துன் ஹுசேன் ஓன்
  • செராஸ் பெர்டானா
  • தாமான் பிரிமா சவுஜானா
  • தாமான் கந்தான் பெர்மாய்
  • தாமான் காஜாங் பெர்டானா
  • தாமான் ஸ்ரீ ரமால்
  • தாமான் காஜாங் பிரிமா

வசதிகளும் வாய்ப்பு நலங்களும்

காஜாங் நகரத்திலும், புறநகர்ப் பகுதியிலும் காஜாங் பொது மருத்துவமனை,[7] செர்டாங் பொது மருத்துவமனை, புத்ராஜெயா பொது மருத்துவமனை போன்ற பொது மருத்துவமனைகள் உள்ளன. காஜாங் பொது மருத்துவமனை 1889-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மலேசியாவில் மிகப் பழமையான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.

இருபத்து நான்கு மணிநேர மருத்துவச் சேவை வழங்கும் கிளினிக் மெடிவிரோன் பிரிமா சவுஜானா, காஜாங் பிளாசா மருத்துவ மையம், காஜாங் நிபுணத்துவ மருத்துவமனை,[8] கொலாம்பியா ஆசியா மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகளும் உள்ளன.

உலு லங்காட் மாவட்டத்தின் போலீஸ் தலைமையகம், காஜாங் நகரின் மையப் பகுதியில்தான் உள்ளது. அஞ்சலகம், அரசாங்க மருத்துவச் சேவை மையங்கள், விளையாட்டுத் திடல், காய்கறிச் சந்தை போன்ற வசதிகளும் உள்ளன. தேசியப் பதிவுத் துறை, குடிநுழைவுத் துறை, உலு லங்காட் கல்வி அலுவலகம் போன்ற நடுவண் அரசு அமைப்புகளும் பொது மக்களுக்குச் சேவைகளை வழங்கி வருகின்றன.

கல்வி நிலையங்கள்

காஜாங்கிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், உயர்க் கல்விக்கான பல கல்வி நிலையங்கள் உள்ளன. அவற்றில் சில:

மேலே குறிப்பிடப்பட்ட கல்வி நிலையங்களில், சில நிலையங்கள் காஜாங் பெருநகர்ப் பகுதியில் உள்ள செமினி, பண்டார் பாரு பாங்கி, செர்டாங் போன்ற நகரங்களிலும் அமைந்து உள்ளன.

சான்றுகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.